<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar/20242795?origin\x3dhttp://mugamoodireader.blogspot.com', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

என் நூலகம்

இது என் ரசனையின் பத்தாயம். படைப்பாளிகளே எழுத்தின் உரிமையாளர்கள். சேமிப்பில் ஏதும் ஆட்சேபம் இருப்பின் செய்து அறியத்தரவும்.

 

புத்தகங்களின் இடையில் ஓடும் ஆறு - தங்கமணி

புத்தகங்களின் இடையில் ஓடும் ஆறு - தங்கமணி
அசல் பதிவுக்கான சுட்டி

இந்தப்புத்தக விளையாட்டில் என்னை அழைத்திருந்தார் மீனாக்ஸ். அவருக்கு நன்றி!

எனது வாசிப்பு புத்தகங்களில் இருந்து துவங்கவில்லை. எனக்கு 3 வயதாகும் முன்னேயே ஆசிரியையாக இருந்த எனது அம்மாச்சியின் வீட்டிற்கு வந்துவிட்டேன். மிக இளவயதிலேயே விதவையானவர். வாழ்வை தன்னந்தனியாக எதிர்கொண்டு படித்து, ஆசிரியை ஆகி, தகப்பனற்ற இரண்டு பெண் குழந்தைகளை சாதியும், ஆணாதிக்கமும் காவு கேட்கின்ற சூழலில் தனது நம்பிக்கையொன்றையே ஒரே ஊண்றுகோலாகக் கொண்டு வளர்த்து படிக்கவைத்தவர். எனது வழிகாட்டியாய் இருந்து தோழியாய் பரிணமித்த அவரிடமிருந்தே எனது வாசிப்பு துவங்கியது எனலாம். அவர் தனது பாட்டனார் தொடக்கம் மூன்று தலைமுறைகளின் வாழ்க்கையை பள்ளிக்கு நடந்துபோகும் போதும், தோட்டத்தில் வேலை செய்யும் போதும், வீட்டுவேலைகளைச் செய்யும் போதும், கோவில்களுக்குப் போகும் போதும், இரவில் விளக்கை அணைத்துவிட்டு அவரது படுக்கையில் இருந்தபடியும் சொல்லிக்கொண்டே இருப்பார். அவர் ஒரு எளிய, அற்புதமான, நேர்மையான மனுசி. வாழ்க்கையின் அத்தனை பிரச்சனைகளுக்கும் முகம் கொடுத்தவர். ஆனால் அதிசயமாக வடுப்படா உள்ளம் படைத்திருந்தார். வாழ்க்கை கொண்டாடுவதற்கே என்பதை அவர் கண்டுணர்திருந்தார்.

இளம் வயதிலேயே விதவையானதாலும், அப்போது தந்தையோ சகோதரர்களோ இல்லாதிருந்ததாலும் அவர் ஆணாதிக்கத்தின் முடக்கும் நிழலில் வளராத விருட்சமாய் இருந்திருக்கவேண்டும். வாழ்க்கை அவருக்கு இழைத்த கொடுமையை அவர் விகசிப்புக்கான ஒரு வாய்ப்பாக்கிக்கொண்ட ரசவாதியாக இருந்தார். நகரின் கடைதெருக்கள், கோவில்கள், திருமணவீடுகள், உறவினர் நண்பர்கள் வீடுகள், விழாக்கள் எங்கு சென்றாலும் அவரை ஆண்களும் பெண்களும் சூழ்ந்துகொள்வார்கள். அவர் இருக்கும் இடம் நகைப்பொலிகளால் நிரம்பியிருக்கும். எல்லோரையும் அரவணைத்து, குற்ற உணர்வுக்கு ஆட்படுத்தாது அவர் தழுவியிருப்பது தான் அதன் காரணம் என்று பின்னாளில் தெரிந்துகொண்டேன். நகரின் எல்லா ஆண்களும் பெண்களும் அவரது மாணவர்களாய் இருப்பர். வற்றாத ஒரு ஊற்றைப்போல அவர் தன்னைச் சூழ்ந்திருந்த அனைவருக்கும் நம்பிக்கையை, அன்பை, ஆறுதலை வழங்கிவந்தார்.

ஒரு திறம் வாய்ந்த நேர்மையான ஆசிரியையான அவர் பள்ளியைச் சார்ந்த அடையாளங்களை மட்டும் சுமந்து மடிந்துபோகும் ஒரு வாத்தியாரம்மாவாக அல்லாமல் இறக்கும் வரை வாழ்க்கையைச் சார்ந்திருந்த உயிரோட்டமுள்ள மனுசியாகவே இருந்தார். ஆனால் வாழ்க்கை எளிதாக இருக்கவில்லை. அவர் பெண்ணாக (அதுவும் விதவையாகவும்) இருந்த அவருக்கு, ஒரு ஒடுக்கப்பட்ட சாதிப் பெண் உட்கார்ந்து பாடம் நடத்துவதை சகித்துக்கொள்ள முடியாத ஆணாதிக்க, சாதீய சமூகம் ஒரு நாற்காலியைக் கூட பள்ளிகளில் ஆரம்பத்தில் வழங்கவில்லை. நின்று கொண்டே பாடம் நடத்த வேண்டியிருந்தது; குடியிருக்க வீடு சில ஊர்களில் மறுக்கப்பட்டது. பள்ளியின் ஒரு பகுதியிலேயே அவர் தங்கிக்கொண்டார். போகும் ஊர்களில் எல்லாம், படித்த, நாகரீகமான இளம்விதவையின் அனாதரவான நிலை மைனர்களையும், மிராசுகளையும் ஒரு வாய்ப்புக்காக ஏக்கத்தில் ஆழ்த்தியபோது மட்டும் அங்கு சாதி குறுக்கிடவில்லை என்று நகைச்சுவையுடன் குறிப்பிடுவார்.

வயதான தாயையும், இரண்டு பெண் குழந்தைகளையும் மட்டுமே சார்பாகக் கொண்டிருந்தவர்களை சமூகம் எப்படி கண்ணில் விளக்கெண்ணை ஊற்றிக்கொண்டு பார்க்கும் என்பதை அவர் அறிந்திருந்தார். ஆனாலும் அவர் சுருங்கிப்போய் விடவில்லை என்பதை நான் ஆச்சர்யத்துடன் உணர்ந்திருக்கிறேன். அவரது பெண்மையை அவர் தனது நேர்மையாலும், மனிதர்களை கணிக்கும் புத்தி சாதுர்யத்தாலும் காத்துக்கொண்டதுபோல, சாதியை அவரது ஆளுமையால், அன்பால் உடைத்திருந்தார். பிராமண வீடுகளில் அவரை டீச்ச்சர் என்று அழைத்து அவரது கைகளை ஆதுரத்துடன் பற்றிக்கொள்ளும் போது அந்தப்பெண்களின் கண்களில் சில சமயம் நீர்த்திரை படிவதைக் கண்டிருக்கிறேன். வாத்தியாரம்மா என்று வாஞ்சையுடன் செட்டிமார்களும், ஆச்சிகளும் அவர்களது வீட்டிற்குள் அவர் நுழையும் போதே எழுந்து நிற்பதைப் பார்த்திருக்கிறேன். அட என் ஈரக்கொலை வாத்தியாரம்மா என்று முக்காட்டை மறந்து அவரை தழுவிக்கொள்ளும் முஸ்லீம் வீட்டுப்பெண்கள் என்று அவர் கோவிலுக்குச் செல்லும் வழியில் அனைவரையும் கண்டுகொள்வார். ஆனால் அவர் நடைமுறையில் காணும் பக்தையும் இல்லை. அவருக்கும் கடவுளுக்கும் பரஸ்பரம் விசாரித்துக்கொள்கிற மாதிரியான உறவே இருந்ததாக உணர்கிறேன். சடங்குகள் எதையும் அவர் பெரிய அளவில் செய்ததில்லை. ஆனால் விழாக்கள் அனைத்தையும் தவறாமல் கொண்டாடிவிடுவார்.

அந்த அற்புதப் பெண்மணி தனது வாழ்க்கையை, தன் பெற்றோர், உற்றார், உறவினர்கள், நண்பர்கள், முன்னோர்கள் வாழ்க்கையை நுணுக்கமாக, பிரேம் பை பிரேம் என்று சொல்லாம், அப்படிச் சொல்லுவார். அதோடு இல்லாமல் ஒவ்வொருவரும் அதை எதிர்கொண்ட விதம் அதன் பின்னிருக்கக்கூடிய காரணங்கள் இவற்றையும் கூடச் சொல்லுவார். ஆனாலும் அவர் வாழ்க்கை பற்றிய முடிவான முடிவை கண்டுகொண்டதாக நம்பி இறுகிப்போய்விடவில்லை. கடைசிவரை ஒரு சிறுமியைப்போல ஆச்சர்யப்பட முடிந்தது அவரால். அப்படி அவர் இருந்ததனால் தான் அவருக்கு என்னிடம் இதையெல்லாம் சொல்லும் அளவுக்கு நட்பு பாராட்ட முடிந்ததோ என்னவோ? என்னை முதன் முதலில் முழுவதுமாக நம்பியவரும், ஏற்றுக்கொண்டவரும் அவரே.

அவரே எனது முதல் புத்தகம். அதைவிடவும் சிறந்த இன்னொரு புத்தகத்தை நான் இன்னும் படிக்கவில்லை. அதிலும் அவரது தகப்பனார் பெருமாள் கோவிலில் வழிபடக்கூடாதென தடுக்கப்பட்டதால் ஒரு தனிக்கோவிலையே கட்டி வழிபாடுகளை நடத்தியவர். அதனால் காலப்போக்கில் சதி வழக்கொன்றால் சூழப்பட்டபோது சர் ஏ.டி. பன்னீர்செல்வம் தலையீட்டின் பேரில் சுயமரியாதைக் கட்சிக்கும், விடுதலைக்கும் அவரது இறுதிக்காலத்தில் அறிமுகமானவர். எனவே என் அம்மாச்சி சொன்ன நெடுங்கதை தமிழ்நாட்டின் ஒரு பெரும் காலப்பகுதியின் நம்பிக்கைகள், சாதி, நிலவுடமை சமூக பழக்கவழக்கங்கள், ஆண்களின் அடக்குமுறைகள், பெண்களின் மடமைகள், அரசியற் தாக்கங்கள், சுரண்டல்கள், உணவுப்பழக்கங்கள், கடவுள் வழிபாடுகள், மருத்துவ முறைகள் இப்படி எல்லா விசயங்களும் அடர்த்தியாக நிரவிய ஒரு காவியம்.

பிறகு ரத்னபாலா, கோகுலம், சோவியத் நாடு என்று வீட்டில் ஆரம்பித்து நூலகங்களின் வழி எனது வாசிப்பின் நதி ஓடத்தொடங்கியது. நான் படித்த புத்தகங்களில் எனது பள்ளிப்பருவத்திலும், கல்லூரிப்பருவத்திலும் படித்தவைகளே அதிகம். அப்போழுது இந்திய தத்துவங்கள் குறித்த புத்தகங்களிலும், பொதுவுடமை பற்றிய புத்தகங்களிலும் எனது வாசிப்பு மையங்கொண்டிருந்தது. என் அப்பா ஒரு நூலகர். அதனால் எனது ஊரிலும் (விடுமுறையில்) நான் படித்த ஊரிலும் (பள்ளி நாட்களில்) இருந்த நூலகங்களே எனது வாசிப்புக்கான எந்தக்கட்டுப்பாடுமற்ற இடங்களாக இருந்தன. இரண்டு நூலகங்களிலும் மிகவும் நல்ல நூட்கள் இருந்ததாகவே என் நினைவில் இருக்கிறது. ஒரே நாளிலேயே இரண்டு புத்தகங்களை எடுக்கமுடியவில்லையே என்று எனக்கு ஏக்கமாய் இருந்த காலங்கள் அவை. விடுமுறைக்கு ஊருக்கு வந்தால் அப்பாவிடம் நூலகச் சாவியைப்பெற்று விடுமுறை நாள்களிலும் (வெள்ளி விடுமுறை) இரவுகளிலும் கதவை உட்புறம் பூட்டிக்கொண்டு படிக்கமுடியும். இல்லாவிட்டால் ஒரு ஆசிரியரின் அங்கிருக்கும் அத்தனை புத்தகங்களையும் வீட்டிற்கு எடுத்துவந்துவிடுவேன். அப்படித்தான் ஜெயகாந்தன், ஜானகிராமன், லா.சா.ரா. கா.நா.சு போன்றவர்களின் எழுத்தக்களைப் படிக்க முடிந்தது. கவிதைகளில கல்யாண்ஜி, கலாப்ரியா, ஞானக்கூத்தன், பசுவையா என்று நகர்ந்தாலும் கல்யாண்ஜியை எனக்குப் பிடிக்கும். சிறுகதைகளில் வண்ணதாசன் தான். (இப்போது முழுத்தொகுதியும் வந்துவிட்டது; படித்தும் விட்டேன்) அப்போது வாசிப்பு என்னை முழுமையாக ஆக்கிரமித்திருந்தது என்று சொல்லலாம். படிக்கவேண்டிய புத்தகங்கள் அடுக்கடுக்காக இருந்தன. ஆனால் என்னால் நல்ல புத்தகங்களை படிக்கமுடிந்தது. சுந்தரராமசாமியின் கட்டுரைகள் தொகுப்பு அப்படி நூலகத்தில் படித்து அந்த வயதில் என்னை பாதித்த கட்டுரைகள் என்று சொல்லலாம். பிறகு ஒரு தீவிர இந்து அடிப்படைவாதியாக இருந்த காலத்தில் விவேகானந்தர்-இராமகிருஷ்ணர் (ஏறக்குறைய அனைத்து முக்கியமான புத்தகங்களையும்) புத்தகங்களோடு, மற்ற ஆர். எஸ். எஸ் சார்பான, இயக்க வெளியீடுகள் பலவற்றை படித்து வந்தேன். அதில் இருந்த தீவிரமும் ஈடுபாடுமே என்னை அதைக் கடந்து செல்லவைத்தன என்று சொல்லலாம். பிறகு மெல்ல ரஷ்ய இலக்கியங்கள் ஆரம்பமாகின. மறுபடியும் நூலகங்கள். உண்மை மனிதனின் கதையும், கார்க்கியும், கொரெலென்கோவும் என் மனமெல்லாம் நிறைந்திருந்தார்கள். சோவியத் எனக்கு மிகவும் பரிச்சயமான எனக்கு அருகில் இருந்த உலகமாக இருந்தது. நான் புத்தகங்களைச் சொல்லும் போது எனது உள்ளார்ந்த நிலைப்பாட்டையும் குறிப்பிடவே செய்கிறேன். எனது அரசியற் பார்வையை நிர்ணயிப்பது எனது ஆன்மீக தேவையாகவும், அனுபவமாகவுமே எப்போதும் இருந்து வந்திருக்கிறது. அதற்கு எனது மத்தியதர குடும்பம் மட்டுமல்லாது, எனது அம்மா வழியிலும், அப்பா வழியிலும் முன்னோர்கள் கோவில்கள், சத்திரங்கள் கட்டுவதையும், அதற்காக தமது செல்வத்தை செலவிடுவதையும் வாழ்க்கையாகக் கொண்டிருந்ததும், அம்மா வழிப் பாட்டனார் சாதி அடிப்படையிற் அடைந்த கசப்பான அனுபங்களினால் தனது இறுதிக்காலங்களில் திராவிட இயக்கக் கொள்கைளில் சரணடையவேண்டியிருந்ததும், இப்படி சமயம் பிரதிபலித்த அரசியலே காரணமாக இருந்ததையும் குறிப்பிடலாம்.

இப்போது புத்தக வாசிப்பு மிகவும் குறைந்துவிட்டது. படிப்பதனால் கிடைக்கும் ஒரே நன்மை படிப்பதனால் உண்மையை தெரிந்துகொள்ள முடியாது என்று அறிந்துகொள்வதே என புத்தர் சொன்னதாக ஒருமுறை படித்தேன். அது மிகப்பெரிய உண்மை. ஆனால் புத்தகங்கள் உண்மையின் ஒவ்வொரு பக்கத்தை தெரிவிகின்றன; சொல்லமுடியாதது என்று கருதப்படுகின்ற உண்மையை அவை ஏதோ விதத்தில் பிரதிபலிப்பதன் மூலம் அதைக் காட்டித்தர முயலுகின்றன என்றும் ஒரு ஞானி சொன்னார். அதுவும் உண்மை என்று நினைக்கிறேன். அதனால் புத்தகங்களில் இருந்து அகலாது அணுகாது தீக்காய்வான் போல இருக்கிறேன். சில சமயம் படிப்பதை முற்றிலுமாக நிறுத்தவேண்டும் என்று எண்ணியிருக்கிறேன். இருந்திருக்கிறேன். மாதக்கணக்கில் அச்சில் வந்த எதையும் படிக்காமல் புறங்கையால் எனது படுக்கையில் கிடக்கும் புத்தகங்களை ஒதுக்கிவிட்டவாறு வாழ்ந்திருக்கிறேன். சில சமயங்களில் இரவுகளையும் பகல்களையும் புத்தங்களில் கழித்திருக்கிறேன். நூலகங்களில் காலையில் இருந்து இரவுவரை குடியாய்க்கிடந்திருக்கிறேன். கண்கள் ஓய்விழந்து கண்ணீர் கொட்டுகிறபோதும் கண்ணீரையும் திட்டுக்களையும் துடைத்துக்கொண்டு படித்துக்கொண்டிருந்திருக்கிறேன். சில சமயங்களில் புத்தகங்களை ஆற்றில் வீசி அவைகளை மற்றவர்கள் படிப்பதில் இருந்து அழித்து சில நற்செயல்களை புரிந்திருக்கிறேன். பல புத்தகங்களை என் நண்பர்களுக்கு சிபாரிசு செய்தும், கொடுத்தும் என் நண்பர்கள் அனைவரும் அந்தப்புத்தகங்களை படிக்க வேண்டுமென நினைத்திருக்கிறேன்.

எனக்கு புத்தகங்களைப் போலவே அதை எழுதுபவனும் மிக முக்கியமானவன். தி. ஜானகிராமனை எனக்குப்பிடிக்கும். அவரது வாழ்க்கையைப் பற்றிய பார்வையை அவரது புத்தகங்களுக்கு வெளியிலும் நான் கண்டுகொள்ளமுடிந்தது. பாரதியையும் அப்படியே. எனக்கு மதம் போல கட்டமைக்கப்படுகிற இலக்கியத்தில் நம்பிக்கை இல்லை. மனிதனை நம்புகிறதனால் என்று அதற்கு காரணம் சொல்லிக்கொள்கிறேன். மனிதன் அதிகம், பெயர்களில், அடையாளங்களில் சிக்கிக்கொள்வதாக எனக்குப்படுகிறது. வழியோர மஞ்சள் பூக்களைப் பற்றி ரோஜாக்கள் அளவுக்கு யாரும் இலக்கியம் படைக்காமல் போகலாம். அதனால் அந்தப்பூக்களில் வாழ்க்கை தவழவில்லையா? அல்லது அவை எந்த மலருக்கும், பாறைக்கும் குறைந்தவையா? ஒரு நதி எனக்குக் காட்டித்தருவதையும் விட மேலான ஒன்றை புத்தகங்கள் காட்டித்தரமுடியாது என்று இப்போதும் நம்புகிறேன். மனிதர்களும் நதிகள் மாதிரிதான். வேண்டுமென்றால் இன்றைய நதிகள் மாதிரி சீரழிந்து, தேங்கிப்போய், கரையிழந்து, மாசடைந்து இருக்கலாம் அல்லது இன்னொரு பக்கம் நதி பெரும் அணைகளில் தேங்கி, ஓட்டமிழந்து ஆனால் ஆற்றல் மூலங்களாக இருப்பதுபோல மூளைகளில், செல்வத்தில், அதிகாரத்தில் தேங்கி ஆற்றல் மூலங்களாய் இருக்கலாம். எப்படி இருப்பினும் மனிதர்களும் வாசிப்புக்கு உகந்தவர்களாகவே இருக்கிறார்கள். படிக்கத்தெரிந்துகொள்வதுதான் முக்கியமானது என நினைக்கிறேன்; பிறகு மனிதர்களை படிப்பது புத்தகங்களைப் படிப்பதைக்காட்டிலும் சுவரசியமானது. அதில் இன்னும் கூடுதலான ஒரு வசதி இருக்கிறது - மொழிப்பிரச்சனை என்பது இருக்காது. மற்றபடி புத்தகங்கள், மனிதர்கள், விலங்குகள், மற்ற உயிர்கள் என்று நான் கோடுகள் கிழிப்பதில்லை. எனக்கு வெளியே கடந்து செல்லுவதும், என்னுள் கடந்து செல்வதுமான வாழ்க்கையின் எல்லா வடிவங்களையும் வாசிக்க, கவனிக்க நான் இயல்பான பேராவல் கொண்டவனாய் இருக்கிறேன். எனெனில் அவைகள் ஒவ்வொன்றும் என்னை ஏதோ ஒருவகையில் பிரதிபலித்தபடியே செல்லுகின்றன.

என்னைப் பாதித்த புத்தகங்கள் மிகவும் குறைவானவையே. என்னைப் பொருத்தவரை கடந்து செல்ல ஒரே வழிதான் இருக்கிறது. அது அதிலேயே மூழ்கிவிடுவதுதான். மிக ஆழமாக, பெருவிருப்புடன் மூழ்கிவிடுபவன் விரைவில் அதைக் கடந்து செல்லுகிறான். அப்படி ஓவ்வொரு புத்தகமும், மனிதர்களும் ஓவ்வொரு காலகட்டத்துக்குப் பிறகு நின்றுவிடுகிறார்கள். நதி ஓடிக்கொண்டே இருக்கவேண்டியிருக்கிறது. மற்றபடி சில புத்தகங்களும், மனிதர்களும் பார்கிற ஒவ்வொருமுறையும் ஒன்றைத் தருகிறவர்களாக இருக்கிறார்கள்..அப்படி இருக்கிற, வாழ்க்கையைபோல ஓடி வருகிற விசயங்களையே மேன்மையானவைகளாக நான் நினைக்கிறேன். ஏனெனில் வாழ்வின் ஆதார இழையான நகர்தலை அவைகளும் தமக்கு சாத்தியப்படுத்தியிருப்பதால். அவைகளை நேர்மையானவைகள் என்று நான் குறிப்பிடுகிறேன்.

தமிழர்களின் சினிமா, தேடிச்சேர்த்த சோறு, பாலுறவுகளின் மேல் அவர்களுக்கிருக்கும் மரியாதையற்ற ஈடுபாடு, கழிப்பறைகள், கோவில் கர்ப்பகிருகங்கள், நூலகங்களில் பக்கங்களை இழந்த புத்தகங்கள், மற்றவர்களின் பண்பாட்டு விழுமியங்களை கேவலமாகக் கருதும் போலித்தனம், வாரிசுகளை பந்தயக் குதிரைகளாகப் பார்க்கும் பண்பு இவைகளின் வரிசையில் இருந்து இம்மியும் விலகாதவாறே இருக்கும் தமிழ்புத்தகங்களின் பதிப்பும். எழுதுவது தடுக்கப்பட்ட சில ஐரோப்பிய எழுத்தாளர்கள் மறைத்து மறைத்து கழிப்பறைக் காகிதங்களில் இலக்கியங்கள் எழுதினார்கள் என்று படித்திருக்கிறேன். ஆனால் புத்தகங்கள் கழிப்பறைத் தாள்களை விட மோசமான தாள்களிலே அச்சிடப்படுகிற அவலம் தமிழ் உலகில் இருக்கிறது. அது முற்றிலும் பதிப்பகங்களின் பிழையுமல்ல. முதலில் தமிழினிதான் நான் அறிந்து அதை மாற்றியது. புத்தகங்கள் அழகாக நேர்ந்தியாக அச்சிடப்பட்டிருக்கவேண்டும் என்று நினைப்பவன் நான். அச்சு நேர்த்திக்காக நான் மிகவும் விரும்புகிற ஒரே புத்தகத்தின் பல பதிப்புகளை வாங்குகிறவன். புத்தகங்களின் உள் அட்டை, வெளி அட்டை, அதில் அச்சிடப்பட்டிருக்கும் விவரங்கள் என அதில் படிக்க, பார்க்க முடிகிற விவரங்கள், அதில் உள்ள வெற்றிடங்கள், தீர்க்கமான, வெளிறிய நிறங்கள் எழுத்துருக்கள், பேப்பர், அட்டைகளின் ஸ்பரிசம் இப்படி ஆகக்கூடிய எல்லா விசயங்களையும் ஒரு புத்தகத்தில் தேடுகிறவன். மலிவுப்பதிப்புகளை வாசிப்பதை எனது வறுமையின் காரணமாக மட்டும் பொறுத்துக்கொள்கிறவன்.

என்னிடம் எத்தனை புத்தகங்கள் இருக்கின்றன?
தெரியவில்லை. வீட்டில் சுமார் 200 இருக்கலாம்!

கடைசியாய் வாங்கிய புத்தகங்கள்:

தமிழில்

அதிகாரத்தை நோக்கி உண்மைகளைப் பேசுவோம் - ஆ. மார்க்ஸ்
கடமை அறியோம் தொழிலறியோம் - ஆ. மார்க்ஸ்
அண்ணல் அடிச்சுவட்டில் - ஏ.கே. செட்டியார்
பண்பாட்டு அசைவுகள் - தொ. பரமசிவன்
ஜானு சி.கே. ஜானுவின் வாழ்க்கை வரலாறு - பாஸ்கரன்
வாடிவாசல் - சி.சு. செல்லப்பா
உப பாண்டவம் - எஸ்.ரா
காடு - ஜெயமோகன்
நான் கடைசியாய் இந்தியாவில் வாங்கிய புத்தகங்களை இங்கு எடுத்து வரமுடியவில்லை.

ஆங்கிலம்:

The Four Agreements - Don Miguel Ruiz
Demian - Hermann Hesse
When the shoe fits - Osho
Thus Spake Zarathustra - Nietzsche
இன்னும் சில எடுத்துவராத புத்தகங்கள்

வரும்போது பரிசாக கிடைத்தவை:

Interpreter of Maladies - Jhumpa Lahiri
Five point some one
What not to do at IIT - Chetan Bhagat
Notes from a Big country - Bill Bryson
Zorba the Greek - Nikos Kazantzakis

படித்ததில் முக்கியமானது என்றால்:

மோகமுள் - தி.ஜானகிராமன் (இவரது எல்லா நாவல்களும்)
யமுனாவை அவர் நாவலில் வரும் அத்தனை பாத்திரங்களாலும் உயர்த்திக்கொண்டே போயிருப்பார். இன்னமும் இதைப் படிக்க மகிழ்வேன். ஒரு 10 வருடங்களுக்கு மேலாக தன்னை ஒவ்வொரு சமயத்திலும் வெளிப்படுத்திக்கொண்டே வந்த புத்தகம்.

குறத்தி முடுக்கு - ஜி.நாகராஜன்
அருமையான எழுத்து.

வண்ணதாசன் கதைகள் (முழுத்தொகுப்பு)

குட்டி இளவரசன் - எக்ஸுபரி

சன்னலில் ஒரு சிறுமி - (ஆசிரியர் பெயர் நினைவில் இல்லை)

கன்னி நிலம் - மிகையில் ஷோலகவ்

சமஸ்காரா - யூ.ஆர். அனந்தமூர்த்தி

விஷ்ணுபுரம்- ஜெயமோகன் (சொல்லலாமா என யோசிக்கிறேன்)

பெரியார்? - அ. மார்க்ஸ்

கம்பிக்குள் வெளிச்சங்கள் - தியாகு

ஞானரதம் - பாரதியார்

Siddhartha- Hermann Hesse
( இது என்னை மிகவும் பாதித்த புத்தகம், ஒரு 12 வருடங்களுக்கு முன் இதைப் படித்த பொழுது எழுதவேண்டும் என்ற எண்ணமே எனக்கு போய்விட்டது; சொல்லமுடியாததென எண்ணியிருந்ததை இத்தனை அழகாக ஒருவன் எழுதிவிட்டபிறகு என்னத்த எழுதி... இது என் வாழ்க்கைக்கு மிக அருகில் வரும் புதினம் என்ற உணர்வு எனக்குண்டு)

Thus Spake Zarathustra - Nietzsche

Home and the world - Tagore

இந்த விளையாட்டுக்காய் யோசிக்கப்போய் அது என்னை எங்கெங்கோ எடுத்துச்சென்று விட்டது. நீண்ட பதிவாகிவிட்டது..நன்றிகள்!

š இப்பதிவை மின்னஞ்சலிட