<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar/20242795?origin\x3dhttp://mugamoodireader.blogspot.com', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

என் நூலகம்

இது என் ரசனையின் பத்தாயம். படைப்பாளிகளே எழுத்தின் உரிமையாளர்கள். சேமிப்பில் ஏதும் ஆட்சேபம் இருப்பின் செய்து அறியத்தரவும்.

 

தமிழ் - மாலன்


தமிழ் - முகமூடி, குழலி பதிவுகளை முன்வைத்து - மாலன்

அசல் பதிவுக்கு சுட்டி

மிகை உணர்ச்சிகளை நீக்கிவிட்டு வரலாற்றுக் கண் கொண்டு பார்த்தால், இரண்டு விஷயங்களை விளங்கிக் கொள்ள முடியும்:

1.தமிழ் அறிவு என்பது ஒரு சமநிலைச் சமூகத்திற்கான (egalitarian society) விழைவை நோக்கி இட்டுச் செல்லும் ஒன்று
2.தமிழ் உணர்வு என்பது அதிகாரத்திற்கெதிரான, குறிப்பாக -வலியார் சிலர் எளியோர் தமை வதை செய்குவதை- போர்க் குணத்தை அளிப்பது. (anti -establishment)

தமிழ் உணர்வு தமிழ் அறிவு இவற்றிடையே திட்டவட்டமான வேலிகள் கிடையாது. ஒன்றிலிருந்து கிளைப்பது மற்றொன்று. ஒன்று மற்றொன்றுக்கு இட்டுச் செல்வது.

வரலாற்றிலிருந்து சில துளிகளைப் பார்ப்போம்:

தமிழ் மண் அயலவரின் ஆக்கிரமிப்பிற்கு உள்ளாகிக் கிடந்த போது, அந்த அதிகாரத்திற்கு எதிரான குரலாகத்தான் இடைக்காலத்தில் பக்தி இயக்கம் தோன்றியது. அதில் வந்த ஞானசம்பந்தன், 'நாளும் இன்னிசையால் தமிழ்பரப்பும் ஞான சம்பந்தன்' என்பதைத்தான் தன் அடையாள அட்டையாகக் கொண்டிருந்தான். தமிழ் பரப்பும் என்ற சொற்கள் கவனிக்கத்தக்கவை. மதம் பரப்பும் சைவம் பரப்பும் என்ற சொற்களை அவன் தேர்ந்து கொள்ளவில்லை. பக்தி இலக்கியக்காலத்தில், தமிழ் தெய்வத்தோடு பிணைக்கப்பட்டது. இறைய்னார் தலைமை ஏற்று நடத்திய் தமிழ்ச்சங்கம், இறைவனே அடியெடுத்துக் கொடுக்கத் துவங்கிய காவியம், தமிழ்ப் புலவர்களோடு இறைவன் நடத்திய விவாதங்கள் இப்படியான கருத்துருக்கள் சான்று. அன்று அதிகாரத்தில் இருந்தவர்களுக்கு எதிரான அணியைக் கட்ட தமிழ் உணர்வு உதவியது. அதிகாரத்தில் இருந்ததாகச் சொல்லப்படும் களப்பிரர்கள் தமிழ்த் தெய்வங்களை வழிபட்டதாகத் தெரியவில்லை.

இதனுடைய நீட்சியை பின்னால் இலங்கையில் பார்க்கலாம். ஆங்கிலேயேர்களின் மதமாற்ற முயற்சிகளைத் தடுத்து நிறுத்த முற்பட்ட நாவலர் தமிழையும் சைவத்தையும் இரு கலன்களாகக் கொண்டிருந்தார். சைவத்தை மட்டுமே அவர் முன்னிறுத்தவில்லை.

கம்பன், பாரதி, பாரதிதாசன், ஜீவா ஆகியோரிடம் காணப்படும் அதிகார எதிர்ப்பு நிலைகளுக்கும் ஒரு முக்கிய காரணியாக தமிழுணர்வு இருந்திருக்கிறது.

தமிழுக்கு ஐம்பெரும் காப்பியங்களைத் தந்த சமண பெளத்த சமயங்கள், ஒரு வித சமநிலைச் சமூகத்தை விரும்பின. நிறுவனமாக்கப்பட்ட அமைப்புக்கள் மூலம் கல்வி வழங்கல், வைதீக சமயங்கள் பெண்களுக்கு அளித்திருந்ததைவிட சற்று மேம்பட்ட நிலையை அளித்தல் இவை அவற்றின் இந்த விழைவுகளுக்கு உதாரணங்கள். ஆனால் அவை தங்களது தமிழ் ஆர்வத்தை உணர்வு நிலையில் வெளிப்படுத்திக் கொள்ளவில்லை. அறிவார்ந்த நிலையிலேயே வெளிப்படுத்திக் கொண்டன. தமிழர்களிடையே இந்த சமயங்கள் பெரும் செல்வாக்குப் பெற இயலாமல் போனதற்கு இதுவும் ஒரு காரணம்.

சைவர்கள் ராமாயணம் போன்ற வைணவ இலக்கியங்களை, இலக்கிய நயம் கருதிக் கூடப் படிக்கக்கூடாது என்ற நிலையிருந்த காலகட்டத்தில்தான் உவேசா, சமண இலக்கியங்களைத் தேடிக்கண்டுபிடித்து பதிப்பித்தார். அவர் ஒரு பார்ப்பனராக இருந்தும், பார்ப்பனீயத்தின் அடித்தளமாக அமைந்த வைதிக மதங்களுக்கு எதிர் நிலையில் அமைந்த சமண இலக்கியங்களைப் பதிப்பிக்கும் ஒரு பார்வையை அவருக்குக் கொடுத்தது தமிழறிவுதான்.

அரசியல் வரலாற்றின் வெளிச்சத்தில் பார்த்தால், களப்பிரர்களுக்கு எதிராக சைவர்களும், ஆங்கிலேயர்களுக்கு எதிராக பார்ப்பனர்களும், பார்ப்பனர்களுக்கு எதிராக பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரும், இன்று பிற்பட்டோருக்கு எதிராகத் தாழ்த்தப்பட்டவர்களும் எழுப்பும் கலக்க்குரலின் அடையாளமாகத் தமிழ் உணர்வு இருந்து வருகிறது.

திராவிடக் கட்சிகளின் தோற்றத்தையும், வளர்ச்சியையும், அதிகாரத்தைக் கைப்பற்றிய பிறகு தமிழ் உணர்வு மங்குவதையும், சமநிலைக்கான விழைவு மழுங்குவதையும் இந்த வெளிச்சத்தில்தான் புரிந்து கொள்ள வேண்டும்.

அதிகாரத்திற்கு எதிரான உணர்ச்சிநிலை வடிந்து விடாமல் இருக்க வேண்டும் என்பதற்காக இடைக்காலத்திலிருந்து இன்று வரை கடைப்பிடிக்கப்படும் ஓர் உத்தி, தமிழை மிக உயரத்தில் வைத்து (தெய்வத் தமிழ், தமிழ்த் தாய், யாமறிந்த மொழிகளிலே தமிழ் போல் இனிதாவது எங்கும் காணோம்) மற்ற மொழிகளை இழித்துப் பேசுவது என்பது. ஆனால் அறிவியல் மேலோங்கி, தொடர்புகள் வலுப்பட்டு, உலகம் சுருங்கிவிட்ட இன்றும் இனி வரும் காலங்களிலும் அந்த உத்தி அதிகம் பலன் தராது.

மொழி என்பதும், சமூகம் என்பதும் தனிமைப்படுத்தப்பட்டு எந்தவிதத் தொற்றுக்கும் உள்ளாகாத வண்ணம், ஒரு கண்ணாடிக் குடுவைக்குள் வைத்துப் பாதுகாக்கப்படுவதில்லை. அது பல்வேறு இயங்கியல் விதிக்களுக்கு உள்ளாகி மாற்றங்கள் காண்கின்றன.

உலகமயமாதலின் ஒர் பயங்கரமான அம்சம், அடையாளங்களை அழித்துப் பொதுமைப்படுத்துவது. சில கட்சிகள் வாக்கு வங்கிகளைக் குறி வைத்து சில ஜாதிகளின் அடையாளத்தோடு தங்களைக் கட்டமைத்துக் கொள்கின்றன. இன்னும் சில கட்சிகள் அதை விடப் பெரிய வாக்கு வங்கிகளைக் குறி வைத்து இன அடையாளங்களை முன்னிலைப்படுத்துகின்றன. இன்னும் சற்றுப் பெரிய வாக்கு வங்கியைக் குறி வைப்பவர்கள் மதத்தைத் தங்கள் அடையாளமாகக் கொள்கின்றனர். அதையும் விடப் பெரிய வங்கிக்கு ஆசைப்படுபவர்கள் தேசிய அடையாளத்தை முன் மொழிகின்றனர். இப்படி எல்லைகள் விரிகிறபோது தனித்தன்மை வாய்ந்த அடையாளங்கள் சுருங்கிக் கொண்டே வரும். உலகமயமாதல் ஒரு உலக சந்தையை மையமாகக் கொண்டது. அது அடையாளங்களைப் பொதுமைப்படுத்துவதை (Hegemony) நோக்கமாகக் கொண்டது.

அதே சமயம் அது முதலாளித்துவத்தின் நீட்சி என்பதால் அதனுடைய சில அடையாளங்களையும் கொண்டிருக்கும். சமூகத்திலிருந்து வர்க்கத்தை, வர்க்கத்திலிருந்து குடும்பத்தை, குடும்பத்திலிருந்து தனி மனிதனை, தனிமனிதனுக்குள்ளேயே மனப்பிளவுகள் ஏற்படும் வண்ணம், பிரித்துக் கொண்டே போவது அதனுடைய இயல்பு.
மார்க்கியத்தில் இதை உள் முரண்பாடுகள் (inner contradictions) என்று சொல்கிறார்கள்.

இந்த இரண்டு அம்சங்களின் தாக்க்த்திற்கும் இன்று தமிழர்களும் தமிழ் மொழியும் உள்ளாகி இருக்கிறார்கள்.

தமிழின் எதிர்காலம் எத்தகையதாக இருக்கும்?

தமிழ் மொழி அழிந்து விடும், இன்னும் சில ஆண்டுகளில் தமிழுக்கு சங்கு என்பதெல்லாம் அபத்தம்.ஐரோப்பாவில் சில நூற்றாண்டுகளுக்கு முன் ஆயிரக்கணக்கான மொழிகள் இருந்தன. இன்று 85 மொழிகள் மட்டுமே இருக்கின்றன. ஏன் மற்ற மொழிகள் அழிந்தன? அவை புதிய தொழில்நுட்பங்களுக்கு இடமளிக்கவில்லை என்று அறிஞர்கள் சொல்கிறார்கள். ஆனால் தமிழ் தொடர்ந்து பல புதிய தொழில்நுட்பங்களை ஏற்றுக் கொண்டிருக்கிறது. இதோ இந்த வரியைக் கூடக் கணினித் தொழில்நுட்பத்தை, அதிலும் யூனிகோட் குறியீட்டு முறையை, ஏற்றுக் கொண்டுதான் எழுதிக் கொண்டிருக்கிறோம், படித்துக் கொண்டிருக்கிறோம். தொழில்நுட்பங்களை மட்டுமல்ல, சமூக மாற்றங்களையும் அது ஏற்றுக் கொண்டிருக்கிறது.

எனவே தமிழ் வாழும். ஆனால் அந்தத் தமிழ் சங்க காலத்தில் வழங்கிய தமிழாக இராது. பற்பல மாற்றங்களுக்குள்ளானதாக இருக்கும்.

š இப்பதிவை மின்னஞ்சலிட