இந்தி எதிர்ப்புப் போராட்டம் ’65 - தருமி
அசல் பதிவின் சுட்டி
1965 ‘தமிழ் வளர்த்த’ மதுரை தியாகராசர் கல்லூரி. முதுகலை படித்துவந்த காலம். அப்போதெல்லாம் நம் மாநிலத்திலேயே மொத்தம் ஐந்தே கல்லூரிகளில் என் பாடம் இருந்தது; கல்லூரிக்கு 15 மாணவர்கள் - சென்னையில் 3; மதுரையில் 2. [அப்போதே அவ்வளவு சிறப்பு வாய்ந்த எங்கள் மதுரையை இப்போதும் ஒரு ‘கிராமம்’ என்றழைப்பவர்களை இத்தருணத்தில் வன்மையாகக் கண்டிக்கிறேன். ஆனாலும், இந்த மதுரைக்காரர்களைப் பாருங்களேன். தமிழ்மணத்தில் யாராவது மதுரைக்காரர்கள் இருக்கிறீர்களா என்று கேட்டுப்பார்த்து விட்டேன். ஆட்கள் யாரையும் இதுவரை காணவில்லை. சங்கம் வளர்த்த மதுரையின் நிலைமை இப்படியா? ஏதோ நான் ஒருத்தனா இந்த ‘மண்டபத்தில்’ நின்று கொண்டு பெனாத்தி/புலம்பிக்கொண்டு மதுரையின் மானத்தைக் காப்பாற்ற வேண்டியதாயிருக்கிறது!] சரி..நம் கதைக்கு வருவோம்.
எனது வகுப்பிலிருந்த 8 மாணவர்களில் நான் ஒருவனே வீட்டிலிருந்து வந்து படித்தவன்; மற்ற எல்லோருமே விடுதி மாணவர்கள். அந்தக் காரணத்தை வீட்டில் சொல்லி நானும் பெரும் பொழுதை விடுதியில் கழிப்பதுண்டு. பிள்ளை விடுதியில் இருந்து நல்லா படிக்கும்னு வீட்டில நினைச்சுக்குவாங்க. நான் விடுதியிலே அதிகம் இருந்ததால் பலர் என்னையும் விடுதி மாணவனாக நினைத்தது உண்டு; விடுதித் தேர்தலுக்கு என்னிடம் ஓட்டுகூட கேட்பார்கள். அப்போதெல்லாம் எங்கள் கல்லூரிக்குத் தமிழை வைத்து ரொம்ப நல்ல பெயர். அடிக்கடி பெரிய தமிழ் அறிஞர்கள் அழைக்கப்பட்டுச் சிறப்புக் கூட்டங்கள் நிறைய நடக்கும். முத்தமிழ் விழா மிக நன்றாக இருக்கும். கல்லூரி நிர்வாகத்தினரே ‘தமிழ்நாடு’ என்றொரு நாளிதழ் நடத்திவந்தார்கள். தமிழ்ப் பேராசிரியராக அப்போது இருந்த இலக்குவனாரின் தமிழார்வ தாக்கத்தால் கல்லூரி நிர்வாகமும், அதன் தமிழ் ஈடுபாட்டால் மாணவர்களிடமும் தமிழ்ப் பற்று நிறைந்திருந்தது. அதே சமயத்தில் தமிழ்நாட்டு அரசியலில் தி.மு.க.வின் கை ஓங்கிக் கொண்டிருந்தது. அதற்கு ஏற்றாற்போல் அவர்கள் இந்தி எதிர்ப்பைக் கையில் எடுத்துக்கொண்டார்கள். காங்கிரஸ் மேல் மக்களுக்குப் பரவலாக இருந்த அதிருப்தியை வெறுப்பாக மாற்றும் நிலையை ஆளுங்கட்சியாக இருந்த அவர்கள் இந்தி எதிர்ப்பை எதிர் கொண்ட வகையில் ஏற்படுத்திவிட்டார்கள்.
தி.மு.க.வினரின் இந்தி எதிர்ப்பு மாணவர்கள் மத்தியிலும் பரவியது. இந்தியை எதிர்த்து மாநில அளவில் ஜனவரி 25-ம் நாள் ஒரு பெரிய போராட்டம் நடத்த மாணவர்கள் தயாரானார்கள். எல்லா ஊர்களிலும் ஊர்வலங்கள் நடத்தத் திட்டம். ஆனால் எங்கள் கல்லூரி மாணவர்களில் சிலருக்கு போராட்டத்தை அதன் அடுத்த நிலைக்குக் கொண்டு செல்லும் யோசனை கொடுக்கப்பட்டது. எங்கள் தமிழ்ப் பேராசிரியரின் முழு ஆதரவு அதற்கு இருந்தது. திட்டம் தீட்ட உயர் குழுக் கூட்டம் என் வகுப்பு நண்பனின் விடுதி அறையில் நடந்தது. அவன், விடுதிக்கே சார்மினார் சிகரெட் தானம் பண்ணும் புண்ணியவான் என்பதைத் தவிர வேறு ஏதேனும் காரணம் இருந்ததாகத் தெரியவில்லை. அன்று நானும் விடுதியில் தங்கியிருந்தேன்.
நண்பன் ஏற்கெனவே சொல்லியிருந்தான் அந்தக் கூட்டத்தப்பற்றி. இரவு 11 மணிக்கு ஓரளவு விடுதி அடங்கியபின் ஒவ்வொருவராக வர ஆரம்பிக்க நான் ஒரு பார்வையாளனாக அறையின் ஓரத்தில் நண்பனோடு அமர்ந்திருந்தேன். கூட்டம் சேர ஆரம்பித்தது. முக்கிய முன்னணி மாணவர்கள் - காமராசன், காளிமுத்து. முன்னவர் எனக்கு ஓராண்டு ஜுனியர்; பின்னவர் இரண்டாண்டு. அப்போதெல்லாம் கல்லூரியே காமராசனுக்கு விசிறிதான். பேச்சில் இயற்றமிழும், கவிதை நடையும் கொஞ்சும். அவர் பேசும்போது அவர் வாய் ஒருவிதமாகக் கோணும்; அதுவும் அழகுதான் , போங்கள். பெருந்தலைவர் காமராஜர் எங்கள் கல்லூரிக்கு ஒருமுறை வந்தபோது, ‘தலைவர் காமராஜருக்கு மாணவன் காமராசன் தரும் வரவேற்பு’ என்று பேசிய வரவேற்புரை, ரோடை ஒட்டி இருந்த அந்த அவசர மேடை எல்லாமே இன்னும் நினைவில் இருக்கிறது. காமராஜரே அசந்து நின்றார்; தன் உரையில் அதைக் குறிப்பிடவும் செய்தார். அதுபோன்ற உரைதரும் நிகழ்ச்சிகளுக்கு கல்லூரிக்கே அவர் ஒரு show-piece’. அவரைப்பேச வைத்து மாணவர்களைக் கேட்க வைப்பதற்காகவேகூட சிறப்புக்கூட்டங்கள் நடத்துவதுபோலத் தோன்றும். அவரில்லாவிட்டால் ’substitute’ஆக வருவது காளிமுத்து. இவருடைய தமிழ், ஆற்றொழுக்கு. ஆனால், காமராசனது வீச்சோ கல்லும் காடும் தாண்டி வரும் காட்டாறாகவும் வரும்; மற்றொரு நேரத்தில் சோலைகள் ஊடேவரும் தென்றலாகவும் வரும். பின்னால் கவிஞன் காமராசன் என்று கொஞ்சகாலம் எல்லோருக்கும் தெரிபவராக இருந்தார். ‘கருப்புப் பூக்கள்’ என்று நினைக்கிறேன் - அவரது பேசப்பட்ட கவிதைத் தொகுப்பு. சில சினிமா பாடல்கள்கூட எழுதினார். அடுத்தவர்தான் இப்போதைய சட்டசபையின் அவைத்தலைவர்.
கூட்டம் ஆரம்பமானது. முதலில் போராட்டத்திற்கு நாள் குறிக்கப்பட்டது. எனக்கோ ஆச்சரியமான ஆச்சரியம்.அந்த முன்னணி மாணவர்களின் ‘தீரத்தை’விட என்னை அதிகம் பாதித்தது அவர்களது’சுதந்திரம்’. நானோ வீட்டுப்பறவையாக, முளைத்த சிறகுகள் வெட்டி விடப்பட்டனவா, இல்லை அவைகள் அன்று வரை மட்டுமல்லாது அதற்குப் பிறகும் பல ஆண்டுகளுக்கு வளராமலே இருந்துவிட்டதா தெரியவில்லை; பாவப்பட்ட ஜென்மம்போல வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கத்தான் முடியும். ஆனால் இவர்கள் மட்டும் எப்படி ‘வீட்டுப்பறவைகளாக’ இல்லாமல் ‘விடுபட்ட’ பறவைகளாக இருக்கிறார்கள் என்ற ஆச்சரியம்.அந்த ‘விடுபட்ட’ பறவைகள், குறிக்கப்பட்ட நாளுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பே ‘அண்டர்கிரவுண்ட்’ஆகிவிடவேண்டுமென்றும்,போராட்ட நாளில் கல்லூரி மாணவர்கள் அனைவரையும் கல்லூரி வாசலில் திரட்டி வைத்திருக்க வேண்டுமென்றும், அப்போது நமது முன்னணி மாணவர்கள் ‘டிராமெட்டிக்’காகத் தலைப்பாகை சகிதம் சாதாரணத் தோற்றத்தில் வந்து மாணவ கூட்டத்தில் கலந்துவிடவேண்டுமென்றும், அன்று அந்த அறையில் இருந்த மாணவர்களுக்கு மட்டுமே அது தெரியுமாதலால் அவர்கள் அந்த முன்னணி மாணவர்களைச் சூழ்ந்து போலீஸிடமிருந்து தனிமைப்படுத்திவிட வேண்டுமென்றும், சட்ட எரிப்பைப் போலீஸ் தடுப்பதற்குமுன்பே முடித்துவிடவேண்டுமென்றும், அவர்கள் கைது செய்யப்பட்ட பின் மாணவர்களை மதுரையின் நான்கு மாசி வீதிகளைச் சுற்றி ஊர்வலம் செல்ல திரட்டிச்செல்லவேண்டுமெனவும் திட்டம் தீட்டப்பட்டது. அப்போது ஒரு அப்பாவிக்குரல் கேட்டது, சட்ட எரிப்புக்கு சட்டப்புத்தக்திற்கு எங்கே போவது என்று. பட்டென வந்தது ஒரு பதில். ஏதாவது நம்ம நோட்ஸ் ஒண்ணை எரிச்சால்போதும் என்று ஒரு பதிலும், அதை அடுத்து, எரிச்சிட்டா அதுக்குப்பிறகு சட்டமும், நம்ம நோட்சும் எல்லாம் ஒண்ணுதான் என்ற தத்துவமும் வந்தது. அப்படியாக, கடைசிச் சட்டப்பிரச்சனையும் தீர்த்துவைக்கப்பட்டது.
குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட நேரத்தில், கல்லூரி வாசலின் முன் உள்ள மண்டபத்தின் அருகில், தலையில் முண்டாசுடன் ‘எரிப்பாளர்கள்’ வந்து சேர்ந்தது; மாணவர்கள் மத்தியில் புகுந்தது; மாணவர் கூட்டம் அரண் அமைத்தது; நடுவில் நின்று’சட்டம்’ எரித்தது - எல்லாமே ‘மிலிட்டரி ப்ரஸிஷனோடு’ நடந்தேறியது. சட்டம் எரித்தவர்கள் கைதானார்கள்; புதிய வேகம் பிறந்தது. மாணவர் ஊர்வலம் நகருக்குள் மாசி வீதிகளில் வலம் வந்தது. கீழவாசலுக்கு வரும்போதே மற்ற கல்லூரி, பள்ளி மாணவர்களால் ஒரு பெரும் பேரணி உருவானது. தெற்கு மாசி வீதி வரை அமைதி காத்தேன் -ஏனெனில் அதுவரை நம்ம ஏரியா! யாராவது பாத்துட்டுப் போய் வீட்டுல வத்தி வச்சா என்ன பண்றது? மேற்கு மாசி வீதி அடைந்தபோது கூட்டம் பெருகியது; மாணவர்களின் உற்சாகம் கரைபுரண்டது. மாணவர்களின் வரிசையிலிருந்து விலகி, கோஷம் போடும் பணி தரப்பட்டது.
“டவுண்…டவுண்..”என்று லீட் கொடுக்க, மற்ற மாணவர்கள் “இந்தி” என்று பதில் தர வேண்டும். என்ன, ரொம்ப சாதாரணமாகத் தெரிகிறதா? அதுதான் இல்லை.திடீர் திடீர் என்று பல சுருதிகளில், ஏற்ற இறக்கங்களோடும், நீ…ட்…டி முழக்கியோ, டக்கென்றோ நான் கூற பதில் அதற்குச் சரியாக அதே காலக்கட்டுப்பாட்டோடு, அதே சுருதியோடு, அதே ஸ்தாயியில் கொடுக்கப்பட வேண்டும்; எவ்வளவு கவனத்துடன் சொல்லவேண்டும் தெரியுமா? வெறும் ‘மெக்கானிக்கலாக’ சத்தம் போட்டதாக நீங்கள் நினைத்துவிடக்கூடாது. இதோடு, ‘பிஸிக்கல் இன்வால்வ்மெண்ட்’டும் தேவை; கையை ஆட்டி, குதித்து… தொண்டை தாங்குமளவிற்கு லீட் கொடுத்தேன். மேலமாசி வீதியிலிருந்து வடக்கு மாசி வீதியில் பாதிவரை தொண்டை ஒத்துழைத்தது. அவ்வப்போது வீட்டு ஞாபகம் வந்து பயமுறுத்தினாலும் பணி தொடர்ந்தது. ஆனாலும் அப்பாவுக்கு வேண்டியவர் ஒருவர் ஊர்வலத்தில் என்னைப்பார்த்துவிட்டு, அப்பாவிடம் ‘வத்தி’ வைக்க (சும்மா சொல்லக்கூடாது; உங்க பையன் நல்லாவே கோஷம் போட்டு லீட் பண்ரான்.) அது பிறகு வீட்டில் ‘வெடித்ததும்’ - ஞாபகம் வருதே..ஞாபகம் வருதே..
இப்போது ‘மாணவ அலை’ வடக்கு மாசி வீதிக்குள் பாதி நீளத்தைத் தாண்டியது. அங்குதான் காங்கிரசின் மாவட்ட காரியாலயமிருந்தது. அந்தக் காலத்தில் அந்த வீதியே மதுரை அரசியலில் ஒரு ‘சென்சிட்டிவான’பகுதியாக இருந்து வந்தது.அந்தப் பகுதியில் தெருவே கொஞ்சம் சுருங்கி இருக்கும். ஊர்வலத்தின் எங்கள் பகுதி அங்கே போய்ச்சேருவதற்குள் அங்கே ஏதேதோ நடந்துவிட்டிருந்தது. காரியாலயத்தின் முன் நிறுத்திவைக்கப் பட்டிருந்த காங்கிரஸ் கட்சியின் ஜீப் எரிந்து கொண்டிருந்தது. எங்களுக்கு முன்பே சென்றிருந்த மாணவக் கண்மணிகளின் வேலைதான் அது. அதில் ஒரு முக்கிய விஷயம் என்னவென்றால் அதில் அதிகம்பேர் பள்ளி மாணவர்கள்! தீயணைப்பு வீரர்கள் வந்து சேர்ந்திருந்தார்கள். நாங்கள் அந்தப் பகுதிக்குப் போய்ச் சேரும்போது ஒரு கயிறிழுப்புப் போட்டியே நடந்துகொண்டிருந்தது. தீயணைப்பு வீரர்கள் தங்கள் நீர்க்குழாய்களோடு ஜீப்பை நோக்கி வருவார்கள்; ஜீப்பின் முன்னால் வந்து சரியாக அவர்கள் தண்ணீரைத் திறந்துவிட்டவுடன் ஒரு பெரிய மாணவர்கூட்டம் அப்படியே அவர்களை மறித்து பின்னேறச்செய்யும். தீயணைப்புப்படையின் மேலதிகாரிகள் மாணவர்களைச் சமாதானப்படுத்த முயற்சிப்பார்கள். மீண்டும் நீர்க்குழாய்கள் ஜீப்பை நோக்கி வரும்; மீண்டும் அவர்கள் திசை திருப்பப்படுவார்கள். இந்த ‘விளையாட்டு’ தொடர்ந்தது. மாணவர்களுக்கு ஜீப் முழுமையாக எறிந்துவிட வேண்டுமென்ற உயர்ந்த குறிக்கோள்; தீயணைப்புப் படையினருக்கோ எரியும் ஜீப் வெடித்து உயிர்ச்சேதம் ஏதும் நடந்துவிடக்கூடாதே என்ற பதைபதைப்பு.
இதற்குள் போலீசும் வந்தது. கூட்டத்தை அடக்கமுடியாதலால் கண்ணீர்ப்புகை குண்டு போட முடிவெடுத்தார்கள். முதல் குண்டு நான் இருந்த பகுதியிலேயே, நான் நின்ற இடத்திற்குச் சிறிதே முன்னால் வந்து விழுந்தது. ஒரே புகை மூட்டம். கூட்டம் சிதறியது. முகமெல்லாம் எரிச்சல். கண்களின் எரிச்சல் தாங்க முடியவில்லை. பக்கத்தில் ஒதுங்க இடம் தேடினேன். எல்லா வீட்டுக்கதவுகளும் மூடியிருந்தன். ஏதோ ஒரு வீட்டின் உயர்ந்த திண்ணை இடம் கொடுத்தது. ஆனால் நான் போவதற்குள் அது ‘ஹவுஸ்புல்’. எப்படியோ ஓரத்தில் தொற்றிக்கொண்டேன். திடீரென்று என் காலைக் கட்டிப்பிடித்துக் கொண்டு என் இடுப்பு உயரமே ஒரு பள்ளிச்சிறுவன் - சிறிது நேரம் முன்பு வரை அவனும் நானும் ஒரேமாதிரி ‘போராளிகள்’- அழுதுகொண்டு தொற்றிக்கொண்டான். எல்லோரும் ஒருவர் மீது ஒருவராக பெருகிவந்த கண்ணீரோடு போராடிக்கொண்டிருந்தோம். எங்களுக்குப் புகலிடம் கொடுத்த வீட்டுக்குள்ளிருந்து பெரியவர் ஒருவர் கை நிறைய சின்ன வெங்காயங்களோடு வந்தார். ‘இதைக்கசக்கி கண்களில் தேய்த்துக்கொள்ளுங்கள்’ என்றார். வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது என்பார்களே, அப்படித்தான் தோன்றியது. என்ன சதித்திட்டமோ என்றுதான் நினைத்தோம். அவரோ ‘எனது சுதந்திரப்போராட்ட அனுபவத்தில் சொல்கிறேன்; சும்மா பயப்படாமல் தேய்த்துக்கொள்ளுங்கள்’ என்றார். நான்தான் முன்னால் நின்று கொண்டிருந்ததால் நான்தான் முதல் பலிகிடா மாதிரி அவர் கசக்கிக்கொடுத்த வெங்காயத்தை முகத்திலும், கண்களிலும் தேய்த்தேன். பயங்கர ஆச்சரியம். அடுத்த வினாடியே எரிச்சல் போய், முகம் கண் எல்லாம் குளு குளுவென்றாச்சு. எரிச்சல் எல்லாம் ‘போயே..போச்சு’. அந்தச் சின்னப் பையனுக்கும் தேய்த்துவிட்டேன். திண்ணையைவிட்டு இறங்கினோம். ‘போராளிகள்’ எல்லாம் எங்கே? சிதறிய நெல்லிக்காய்கள்தான்!
ஜீப் மட்டும் தனியாய், முழுவதுமாய் எரிந்து எலும்புக்கூடாய் நின்றது.
===========================================================================
இந்தி எதிர்ப்பு - 2
இதற்கு முந்திய பதிவைத் தொடர்ந்து 3 விஷயங்களைப் பற்றி எழுதத் தோன்றியது. காவல்துறை அன்றும்-இன்றும், மாணவர்கள் அன்றும்-இன்றும், இந்தியும் நாமும் என்று எழுத ஆசை. நிச்சயமாக நான் சொன்ன மூன்றில் கடைசி இரண்டும் கொஞ்சம் விமர்சிக்கப்படலாமென நினைக்கின்றேன்; ஆகவே முதலில் நம் காவல்துறையைப் பற்றிப் பேசுவோமா?
நம் காவல்துறையினர் அளவுக்கு அதிகமாகவே வன்முறையைக் கையாளுகிறார்கள் என்பதில் யாருக்கும் ஐயமிருக்காது என்றே எண்ணுகிறேன். சென்ற வாரத்தில் ஹரியானாவில் ஹோண்டா நிர்வாகத்தை எதிர்த்து நடந்த ஊர்வலத்தில் ஈவு இரக்கமின்றி காவல்துறையினர் நடத்திய ஊழித்தாண்டவமும், சென்ற மாதத்தில் கேரளாவில் காவல்துறையினரிடமிருந்து மாணவர்களுக்குக் கிடைத்த தடியடிகளும் சமீபத்திய நிகழ்வுகள். அதைவிட எனக்கு ஆச்சரியமளித்தது அரசாங்க ஊழியர்கள் நம் தமிழ்நாட்டில் இரு ஆண்டுகளுக்கு முன்பு வேலை நிறுத்தம் செய்தபோது நம் போலீஸ் நடந்துகொண்ட முறை - ஆண், பெண் என்றோ, வயது வித்தியாசமோ பார்க்காமல் நடந்த விதமும், போலீஸ் வேனில் ஏறப்போகும் நிலையிலும் அரசு ஊழியர்களை அடித்துத் தள்ளியதும் எல்லா மீடியாக்கள் மூலமாகவும் நம்மை வந்தடைந்தன. ஆச்சரியம் என்னவெனில், அவர்களும் அரசாங்க ஊழியர்களே; போராடுவதும் அரசாங்க ஊழியர்களே. நல்லது நடந்தால் கிடைக்கும் சலுகைகள் அவர்களுக்குமே. நமக்கும் சேர்த்துதானே அரசாங்க ஊழியர்கள் போராடுகிறார்கள் என்ற சுயநல எண்ணம்கூட வராத அளவுக்கு எங்கிருந்து அவர்களுக்குக் கடமை உணர்வு சிலிர்த்தெழுந்தது என்று என்னால் அனுமானிக்க முடியவில்லை. அரசின் உத்தரவை அமல் படுத்தவேண்டிய நிலையில் உள்ளவர்கள்; அதனால் அவர்கள் தங்கள் சுய விருப்பு வெறுப்புகளைத் தள்ளி வைத்துவிட்டு கடமை ஆற்றவேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் என்று ஒருவேளை யாரும் சொன்னால், அவர்களுக்கு ஒரு வார்த்தை. அவர்கள் தங்கள் கடமையைச் செய்யட்டும் - கொஞ்சம் மனிதத்தன்மையோடு. வயசான வாத்தியாரையும், கலெக்டர் ஆபிஸ் பெண் குமாஸ்தாவையும் சுவரேறிக் குதித்துத் தப்பியோடவைக்க வேண்டிய அளவிற்கு விரட்டிப் போகவேண்டிய அவசியம் என்ன? அட, அவ்வளவு ஏன்? ஒருவேளை அடுத்து இவரே வந்துவிட்டால் என்ன செய்வது என்றுகூட நினைக்காமல் நள்ளிரவில் காக்காய் கொத்துவதுபோல கலைஞரைக் கொத்திக்கொண்டு போனார்களே அந்த கடமையுணர்வை என்னென்று விளிப்பது?! அந்த மனிதரின் வயதுக்காவது முரட்டுத்தனத்தைக் குறைத்திருக்கலாமே! கொஞ்சநேரம் பொறுத்திருந்தால் குண்டுக்கட்டாய் தூக்கிப்போவதற்குப் பதில் நடத்திக்கூட்டிக் கொண்டுபோகுமளவிற்கு நிலைமையைக் கொண்டுவந்திருக்கலாமே! நான் ஒன்றும் நம் தமிழ்நாட்டுக் காவலர்களைமட்டும் குறை கூறவில்லை. இது ஒரு பொது வியாதியாக நம் நாட்டுக் காவலர்களிடம் வளர்ந்துவிட்ட நிலை. மனிதத்தன்மையை அவர்கள் ‘கடமை உணர்வு’ இந்த அளவு மழுங்கடித்துவிடுமா, என்ன?
65-ல் நடந்த அன்றைய ஊர்வலத்தில் காவலுக்கு வந்த காவலர்களின் மனப்பாங்கும், ஊர்வலத்தின் இறுதிக்கட்டத்தில் அந்த ஜீப் எரிந்துகொண்டிருந்தபோது அவர்களின் பதபதைப்பும் என் நினைவுக்கு வந்ததாலேயே இதை எழுதும் ஆசை வந்தது. ஊர்வலத்தின் எங்கள் பகுதி அந்த சம்பவ இடத்தை அடைந்ததும், நாங்கள் கல்லூரி மாணவர்கள் அதுவும் முதுகலை மாணவர்கள் என்று விசாரித்தறிந்ததும் ‘நீங்கள் சொன்னால் பள்ளி மாணவர்கள் கேட்பார்கள்’ என்று சொல்லி எங்கள் மூலமாக நிலைமையை மாற்ற முயன்று, அதில் நாங்கள் வெற்றியடைய முடியாத நிலையில்தான் அவர்கள் கண்ணீர்ப் புகைக்குண்டு என்ற முடிவை எடுத்தார்கள். அதைவிட சட்ட எரிப்பு என்ற அந்த நிகழ்ச்சியை எங்கள் கல்லூரி வாசலிலேயே தங்கள் லத்தியாலும், துப்பாக்கியாலும் நடக்கவேவிடாதபடி செய்திருக்கலாம். இன்றைய போலீஸ் அதைத்தான் செய்திருக்கும்.
அன்றிருந்த காவலர்களுக்கும் இன்றைய காவலர்களுக்கும் உள்ள இந்த வெவ்வேறு மனப்பான்மைக்குக் காரணம் என்ன? எனக்குத் தெரிந்த ஒரே காரணம்: IMMUNITY. வேலியே பயிரை மேயும் நிகழ்ச்சிகள் சாதாரணம். காவல்நிலையங்களில் நடக்கும் பல்வேறு சேதிகளைப்பற்றி எல்லோருக்கும் தெரியும். சமீபத்திய எங்கள் ஊர் போலீஸ்காரர்கள் சென்னையில் அடித்த கொள்ளை; இன்னும் (சொல்லவேண்டாமென்றுதான் நினைத்திருந்தேன்) ஜெயலட்சுமி விவகாரம், இதில் எல்லாவற்றிற்கும் மகுடம் வைத்தது: பெரிய (மீசை) போலீஸ்காரருக்கு, [முகம்மது அலிதானே அவர் பெயர்?] ஸ்டாம்ப் பேப்பர் பலகோடி ஊழலில் உள்ள தொடர்பு.
குற்றவாளிகளென்றால் அவர்களெல்லோரும் முகத்தை மூடிக்கொண்டு வருவதைத்தானே பார்ப்போம்; அது என்ன, இந்த போலீஸ்காரர்களும், அரசியல்வாதிகளும் மட்டும் சிரித்துக்கொண்டும், டாட்டா காட்டிக்கொண்டும் வருகிறார்கள்?(இரண்டு வகையினருக்கும் எப்போதும் தண்டனை என்ற பேச்சுக்கே இடமில்லயே, அதுதான்!) அது மட்டுமின்றி, இந்த அலி கோர்ட்டுக்கு வரும்போது ராஜநடைதான், போங்க. அதோடு, அங்கே சீருடையில் இருக்கும் அவரது துறையினர் - பழக்க தோஷமோ என்னவோ - பயங்கரமா சல்யூட் அடிப்பது கண்கொள்ளாக் காட்சி. அவர் தலையை அசைத்து அந்த சல்யூட்டுகளை receive செய்து ஒரு ஸ்டைல் நடைபோடும் அழகே அழகு. அந்த immunityதான் காவல்துறையினரின் பலம். ஒரு குற்றத்தில் ஒரு போலீஸ் - கீழ் மட்டமோ, உயர்மட்டமோ - மாட்டிக்கொண்டாரெனின் அடுத்தநாளே அவர் வேலை நீக்கம் செய்யப்பட்டதாகவோ, இல்லை பதவி மாற்றம் செய்யப்பட்டதாகவோ செய்தி வரும் - வேலை நீக்கம் எத்தனை நாட்களுக்கோ, அல்லது சில மணிக்கணக்கில்தானோ; பதவி மாற்றம் என்பது பல சமயங்களில் “நல்ல″ இடங்களுக்கான மாற்றலாகக்கூட இருக்கலாம். காவலர்களின் தவறுகள் பெரும்பாலும் தண்டிக்கப்படுவதில்லை. பல சமயங்களில் கண்டுகொள்ளக்கூடப் படுவதில்லை. அவர்களின் அராஜகப்போக்கைக் கண்டித்தால் காவல்துறையின் morale போய்விடும் என்ற கருத்தில் மேலதிகாரிகள் தங்களின் கீழ் வேலை செய்யும் காவல்துறையினருக்குத் தண்டனை ஏதும் தருவதில்லை. அதோடு தவறு செய்யும் போலீஸ்காரர்களைப் பிடிக்கவேண்டியதே போலீஸ்தானே. ‘இன்னைக்கு எனக்குன்னா நாளைக்கு உனக்கு’ என்ற தத்துவம் நிறைய குற்றவாளிபோலீஸ்களைக் காப்பாற்றுகிறது.
திறமையான காவல்துறை என்ற பெயர் நமது தமிழ்நாட்டுக் காவல் துறைக்கு உண்டு. அங்கே மனித்தத்தன்மைக்கும் இடமுண்டு என்றிருந்தால்…?
தண்டனை என்று ஒன்று இல்லாவிட்டால் தவறுகள் செய்வது மனித இயல்பே. Power corrupts என்பார்கள். தண்டிக்கப்படமாட்டோம் என்ற மனநிலையில் இருப்பவர்கள் கையில் அதிகாரமும் இருந்துவிட்டால் - that’s a deadly combination.
===========================================================================
இந்தி எதிர்ப்பு - 3
உண்மையிலேயே இந்தி பெரும்பான்மையரின் மொழிதானா என்பது போன்ற கேள்விகளுக்குள் செல்வதற்கு முன் நம்மில் பலர் தி.மு.க. இந்த பிரச்சனையைத் தங்கள் அரசியல் ஆயுதமாக எடுத்துக்கொண்டதை ஏதோ ஒரு பெரிய தவறுபோல காண்பிப்பதுண்டு. அரசியல் கட்சிகளுக்கு அவ்வப்போது ஒரு ஆயுதம் தேவைதான். எடுக்கும் ஆயுதம் நமக்கு, மக்களுக்கு நல்லதா என்றுதான் பொதுவில் வைத்துப் பார்க்கவேண்டும். ஒருவேளை அன்று தி.மு.க. இந்தப் பிரச்சனையை எடுக்கவில்லை; நமதுஅண்டை மாநிலங்கள் ஏதும் எதிர்க்காமல் இருந்ததுபோல நாமும் இருந்து அதன் மூலம் இந்தி நம் தேசிய மொழியாக மாறியிருந்தால் இன்றைய நிலை எப்படி இருந்திருக்கும். அதைவிட ஏறத்தாழ Hindi-Belt-ன் கட்சியாக இருக்கும் B.J.P. என்னவெல்லாம் செய்திருக்கும் என்பதை நினைக்கவே பயமாக இருக்கிறது. வேறு ஒன்றுமில்லை; அவர்கள் ஆட்சியில், வழக்கிலேயே இல்லாத சமஸ்கிருதத்திற்கு, இறந்துபோய்விட்ட அந்த மொழியை ‘வளர்ப்பதற்கு’ எத்தனை முயற்சி; பாடத்திட்டங்களில் அவைகளைக் கொணர எத்தனை எத்தனை முயற்சி; யார்தான் கேட்பார்களோ தெரியாது ஆனால் தொலைக்காட்சியில் செய்தித் தொகுப்பு! இறந்த மொழிக்கே இந்த ஆர்ப்பாட்டம், ஆராதனை என்றால் இந்திக்கு என்னென்ன மரியாதை கிடைத்திருக்கும். அதனால் நமக்கு எந்த பாதிப்பும் வந்திருக்காது என்பது கண்ணை மூடிக்கொண்ட பூனையின் நிலைதான்.
ஆனால் காங்கிரஸ் தென்னாட்டு மாநிலங்களிலும் ஓட்டுவங்கி வைத்திருந்ததால் அவர்கள் இந்த மொழிப்பிரச்சனையை அணுகியதிற்கும், இந்தி மாநிலங்களை மட்டும் நம்பி இருக்கும் பி.ஜே.பி. இந்திக்காக எந்த அளவிற்குச் சென்றிருக்கும் என்ற நிலையினையும் பார்க்கும்போது தி.மு.க.வின் அன்றைய நிலைப்பாட்டிற்கு நாம் அந்தக் கட்சிக்கு நன்றிதான் சொல்லவேண்டும்.
ஆனாலும், இன்று மொழிப்போரை நடத்தி இந்தியைத் தடுத்த பெருமையை அந்தக் கட்சி முழுமையாக எடுத்துக்கொண்டிருந்தாலும், அன்று காங்கிரஸ் , நடந்த போராட்டங்களுக்கும், மாணவர்களின் உயிரிழப்பினுக்கும் திமுக-வே காரணம் என்று சுட்டியபோது அது மாணவர்களாகவே உணர்ச்சி வேகத்தில் நடத்திய போராட்டம்; நாங்கள் ஒன்றும் தூண்டவில்லை என்று கூறினார்கள். ஆனால் அவர்களே சூத்திரதாரிகள் என்பது குழந்தைகளுக்குக்கூட தெரியும். (இதெல்லாம் அரசியலில் சகஜமப்பா!)
66-ல் நடந்த தேர்தலில் மாணவர் பலர் போல நானும் ஒரு தி.மு.க. அனுதாபி; ஓட்டுப் போட்டேன். அதன்பிறகு ஓட்டுப் போட்டதும் உண்டு; எதிர்நிலை எடுத்ததுவும் உண்டு. ஆகவே என் கருத்துக்களை ஒரு கட்சிக்காரனின் கருத்தாக எடுத்துக்கொள்ள வேண்டாம். ஒருவேளை அந்த இளம் பிராயத்தில் மனதில் ஆழ்ப்பதிந்த காரணத்தால் ‘மொழிப்போர்’ என்று வர்ணிக்கப்பட்ட அந்த கருத்து முழுமையாக எனக்கு ஏற்புடையதாக இன்றும் இருக்கலாம். ஆனாலும், இந்தி படிக்காததால் ஏதோ தமிழ் நாட்டு இளைஞர் பலர் வேலை வாய்ப்பை இழந்து நிற்பதுபோல ஒரு தவறான கருத்தைப் பலர் கொண்டிருப்பதாகவே எனக்குத் தோன்றுகிறது.
மொழியைப்பற்றி நமக்குப் பல தவறான கருத்துக்கள் உள்ளன. தாய்மொழிக்கல்வி என்பது உலகளாவிய ஒரு விஷயம். 1950-ல் சுதந்திரம் வாங்கிய இந்தோனேஷிய நாட்டு நண்பர், “So, you still carry that yoke” என்று கேட்டார். ஆனால் நாமோ இன்னும் ஒரு நூற்றாண்டு போனால்கூட விட முடியாத ஆங்கில மோகத்தோடு - என்னையும் சேர்த்தே - இருக்கிறோம். கல்லூரி ஆசிரியனாக இருந்த அனுபவத்தில் சொல்கிறேன். நாம் கல்வித்துறையில் தவறான அணுகுமுறைகள் வைத்திருக்கிறோம். தாய்மொழிக்கல்வி என்பது இன்றைய நிலையில் ஒரு நிறைவேறாக்கனவு என்றே நினைக்கிறேன்- a pipe dream. பாடத்திட்டங்களை மாற்றியாகவேண்டும்; ஆனால் அது நடக்கப்போவதில்லை! - a catch-22 situation?. ஏனெனில்,ஆனானப்பட்ட நமது ஜனாதிபதி சொன்ன கருத்துக்களையே யாரும் காதில் வாங்கிக்கொண்டதாகத் தெரியவில்லை. தாய்மொழியில் பாடங்களைப் படிக்கவேண்டும் என்றால் ஆங்கிலம் தேவையில்லை என்று பொருளில்லை. இளம் வயதில் நிறைய மொழிகளைக் குழந்தைகள் படிக்க முடியும். ஆறாம் வகுப்புவரை சிறிதே கணக்கும், மற்றபடி ஆழமாகவும், அகலமாகவும் மொழிக்கல்வி தரப்படவேண்டும். மூன்றாம் வகுப்புக் குழந்தை இங்கிலாந்து நாட்டின் கவுண்டிகளையும், அங்கு விளையும் rye என்ற agricultural produce (!) பற்றியும் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியம் என்ன? இளம் வயதில் மொழிகளை நன்கு ஆழமாய் படித்து, பின் ஆறாம் வகுப்பிலிருந்து மற்ற பாடங்களைப் படிப்பதே நல்லது. என்றைக்கு ஆங்கில இலக்கணம் சொல்லித்தர bazar notes in the form of WORKBOOKS வந்ததோ அன்றே நல்ல ஆங்கிலப் போதனைக்கு சாவுமணி அடித்தாகிவிட்டது. நாங்கள் படிக்கும்போது அது போன்ற - fast food மாதிரி - ரெடிமேட் சரக்குகள் கிடையாது. ஆசிரியர்களுக்கு முனைந்து சொல்லிக்கொடுக்கவேண்டிய கட்டாயமே இருந்தது. இப்போது எந்த மீடியத்திலிருந்தும் வரும் கல்லூரி மாணவனுக்கும் தமிழிலோ, ஆங்கிலத்திலோ தன் கருத்துக்களைச் சொல்லவோ, எழுதவோ முடியவில்லை என்பதே உண்மை - ஆங்கில மீடியத்தில் படித்தும். இந்த லட்சணத்தில் (கொஞ்சம் கோபம், நம் தலைவிதியை நொந்து) இந்தியும் படிக்காததுதான் குறையென்று பலரும் பேசுவது வேடிக்கைதான்.
கோபித்துக் கொள்ளாதீர்கள் - நிறைய digression! சொல்ல வேண்டியதையெல்லாம் உங்களிடம் கொட்ட ஆசை - ஒருவேளை, உங்களில் யாராவது ஏதாவது செய்யக்கூடிய உயர்நிலை அடைந்தால்…! ஒருவருக்கு பல்கலைக் கழகத்தில் செனட்டர் பதவி கிடைக்கலாம்(வாழ்த்துக்கள், மாலன்!). ஏன், நாளைக்கு வேறொருவருக்கு அமைச்சர் பதவி கிடைத்துவிட்டது என்றால் இந்த மாற்றங்களைக் கொண்டுவந்துவிட மாட்டா(டீ)ர்களா, என்ன? ஆரம்ப வகுப்புகளில் மொழிக்கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து - இந்தியும் படிக்கலாமே தாராளமா - அதனால் குழந்தைகள் உயர்கல்வியில் ‘புரிந்து’ படித்து, படித்தவைகளை உள்வாங்கக்கூடியவர்களாக ஆனால் - ஆகா! அப்படி ஒரு நிஜத்தைத் தரிசிக்க — வலைப்பதிவின் எழில்மிகு வாலிபர்களே, இளைஞர்களே வாருங்கள்… வாருங்கள் என்று இந்தக் கிழவன்….அச்சச்சோ..மறுபடி எப்படியோ சாக்ரடீஸ் வசனம் ஞாபகத்திற்கு வந்து…எல்லாம் ஒரு வயசுப் ப்ராப்ளம், இல்ல ?