பிரசவம் - வைரமுத்து
நன்றி - விகடன்
அசல் பதிவு :: கருவாச்சி காவியம் - 16, கவிப்பேரரசு வைரமுத்து
பங்குனி கடைசி.
வரப்போற சித்திரை வறுத்தெடுக் கிறதுக்கு முன்னால பூமி குளிர ஒரு போடு போட்டுட்டுப் போயிடறேன்னு கூடி நிக்கிது கோடை மேகம். பிள்ள பெற இன்னும் பத்து நாள் இருக்குங்கிற நம்பிக்கையில, அகமலையில விறகெடுத்துத் தலையில சொமந்து வறட்டாறு தாண்டி வந்துக்கிட்டிருக்கா நெறமாசக்காரி.
எங்கிட்டிருந் தாலும் ஒரு சாரக்காத்து வந்து லேசா ஒரு தட்டுத் தட்டினா ஒடைஞ்சு ஒழுகிரும் மேகம்.
அதுக்கான அறிகுறி கண்டதும் ஓடி ஒளிஞ்சுபோச்சு ஆடுமாடு மேய்க்கிற கூட்டம்.
கண்ணுக்கெட்டின மட்டும் காக்கா, குருவி, கழுகு தவிர எதும் தட்டுப்படல.
மேல ஆகாயம்; கீழ பூமி. தலையில வெறகு; வகுத்துல பிள்ள.
இடிக்கப் போறேங்குது மேகம்.
அடிக்கப் போறேங்குது மழை.
கிழிச்சும் தைப்பேன்; தச்சும் கிழிப்பேன்னு கிறுக்குப்புடிச்சு அலையுது மின்னலு.
சூராம் புதருக்குள்ள ஒரு சூறாவளி சுத்தி, வேரோட புடுங்க ஒரு இத்துப்போன மரமிருக்கான்னு விசில் அடிச்சு விசாரிச்சுக்கிட்டே வருது ஒரு கடுங்காத்து.
ஒத்தையில நிக்கிறா கருவாச்சி, அத்துவானக் காட்டுல.
என்னத்தச் சொல்ல..?
எடுத்திருச்சய்யா இடுப்பு வலி!
காடு, நடுக்காடு.
காலம், சாயங்காலம்.
ஆகாயத்துல சூரியனையுங் காணோம்; அக்கம்பக்கம் ஆளுகளையும் காணோம்.
என்ன பண்ணுவா பாவம் இடுப்பு வலி எடுத்தவ?
‘யாத்தே! என்னியக் காப்பாத் துங்க’ன்னு உசுர் கிழிய ஓங்கிக் கத்து னாலும் அந்த ஓசை கேக்குற ஒலி வட்டத்துக்குள்ள உசுருக எதும் இல்ல.
வெலாப்பக்கம் மின்னல் சுளீர் சுளீர்னு வெட்டி வெட்டிச் சுண்டுது. இடுப்புக்குள்ள யாரோ குடியிருந்துக் கிட்டே கோடாலி எடுத்து வெட்டுற மாதிரியிருக்கு.
‘தடால்’னு தூக்கித் தரையில எறிஞ்சா வெறக.
பிள்ள பெறக்க ஒரு வாரம் பத்து நாள் ஆகும்னு கெழவிக சொன்னது தப்பாப்போச்சே. இந்த வலி பொய் வலியாத் தெரிய லையே... உசுரக் கிண்டிக் கெழங் கெடுக்கிற வலியாத் தெரியுதே!
‘‘கடவுளே என்னியக் காப்பாத்திரு. தாயும் பிள்ளையும் தனித்தனின்னு ஆக்கிரு.’’
எங்க போயி விழுகிறது?
நிக்கிற பூமி நெருஞ்சிக் காடு.
கெழக்க வறட்டாறு; மேற்க அகமலை; வடக்க இண்டம்புதர்க்காடு; தெக்க ஒரு கெணத்து மேடு. அங்க தெரியுது ஒரு காவக் குடிசை.
ஒரு முந்நூறு அடி தூரந்தான் இருக்கும்... முந்நூறு மைலாத் தெரியுது இடுப்புவலிக்காரிக்கு.
இடுப்புல கைய வச்சு அழுத்தி, வகுத்துல சிலுவை சொமந்து, ஒரு பக்கமா ஒருக்களிச்சு ஓரஞ்சாஞ்சு, நெருஞ்சி முள்ளு வழி நடந்து காவக் குடிசைக்குள்ள போயி விழுந்துபோனா.
சின்னக் குடிசை, குட்டையன்கூட அதுல குனிஞ்சுதான் போகணும். அகத்திக் கம்புகள ஊடுமரமா வச்சுத் தென்னங்கீத்துகள்ல கட்டிவச்ச குடிசை. சாமை வைக்கோலப் பரப்பியிருக்கு தரையில; இத்த சாக்கு ஒண்ணு விரிச்சுக்கெடக்கு அதுக்கு மேல. மறுகு கருது அறுத்துவச்ச கம்பங்கருது மூடைக ரெண்டு ஓரத்துல. பச்சைப் பிள்ளக்காரி பிள்ளைய அட்டத்துல போட்டுப் படுத்திருக்க மாதிரி கம்பங்கருதுச் சாக்குகளுக்கு அங்கிட்டு ஒண்ணும் இங்கிட்டு ஒண்ணுமா ரெண்டு பூசணிக்கா. குடிசைக் கூரைக்கு மத்தியில கயிறு கட்டிச் சுக்காக் காஞ்சு தொங்குது சொரக்குடுக்க ஒண்ணு. இடுப்பப் புடிச்சு ‘யப்பே! யாத்தே’ன்னு கத்திக் கதறிச் சாஞ்சு விழுந்து, சரிஞ்சு கெடக்கா கம்பங்கருது மூட்டையில கருவாச்சி.
‘‘கடவுளே! ஒத்தையில பிள்ள பெறுன்னு என் நெத்தியில எழுதிட்டியா?’’
இந்த ஒலகத்துல மொதல் பிள்ள பெத்த பொம்பளைக்கு எவ பிரசவம் பாத்தது? அப்பிடி ஆகிப்போச்சா இந்தக் கருவாச்சி கத?
முண்டித் தவிக்குது பிள்ள; முட்டித் தெறிக்குது வலி. ‘‘இந்தப் பொழப்புக்குச் செத்தே போகலாம் போலிருக்கே!’’ பேறுகால வலியில துடிக்கிற எல்லாப் பொம்பளைகளும் ஒரு தடவையாவது போயிட்டுவார முடிவுக்கு அவளும் போயிட்டு வந்துட்டா.
‘‘முன்னப்பின்னப் பிள்ள பெத்தவ இல்லையே... யாத்தே நான் என்ன பண்ணுவேன்? ஆளுக யாராச்சும் கூட இருந்தா நாம மல்லாக்கக் கெடக்கலாம்; வேலைய அவுக பாப்பாக. இப்ப நானேதான் பிள்ளத்தாச்சி; நானேதான் மருத்துவச்சி. மல்லாக்கக் கெடந்து எடக்குமடக்காகிப் போனா எந்திரிக்க முடியுமா?’’
அனத்திக்கிட்டே ஒரு கையத் தரையில ஊன்டி ஒருக்களிச்சு எந்திரிச்சா. சரசரசரன்னு சீலயத் தெரைச்சுத் தொடைக்கு மேலே சுருட்டி இடுப்புக்கு மேல ஏத்திவிட்டா. பல்லக் கடிச்சு முனகிக்கிட்டே முன்னுக்க சாக்க இழுத்துப் போட்டு அதுமேல முட்டிக்கால் போட்டா. ரெண்டு பக்கமும் ரெண்டு கையத் தரையில அழுத்தி ஊன்டிக்கிட்டு ஆனமட்டும் தொடை ரெண்டையும் அகலப்படுத்திக்கிட்டா. தலைய முன்னுக்க இழுத்து லேசாக் குனிஞ்சு பாத்தா & சும்மா செஞ்சாந்தக் கரைச்சுவிட்ட மாதிரி செக்கச் செவேர்னு ஒழுகுது ‘தீட்டு’.
வெளிய அடங்கி ருச்சு மேகம்; இருட்டிருச்சு பூமி. என்னமோ ஆகாயத்தி லிருந்து ஆதிசேசன் எறங்கி வார மாதிரி ‘உஸ்ஸ¨ உஸ்ஸ¨’ங்குது ஊதக்காத்து.
மின்னலவிட்டு ஒரு தாக்கல் சொல்லி, இடிய அனுப்பி ஒரு தண்டோரா போட்டு, ‘வரப்போறேன் வரப்போறேன்’னு சொல்லிவிடுது மழை.
‘சடபுட சடபுட’ன்னு ஓலக் குடிச மேல விட்டுவிட்டுத் தாளம் போட்டுட்டுப் போகுது தூறல்.
முட்டிக்கால் போட்டவ முக்குறா. சும்மா கருப்புத் தந்தம் மாதிரி கெடக்குற தொடையில கையவச்சு ஆனமட்டும் அழுத்திப் பாக்குறா.
‘‘கடவுளே! பிள்ள பெக்குறதுங் கிறதுன்னா என்னா? நீயே வெளிய எடுக்கிறதா? தாயே வெளிய தள்றதா?’’
தலைக்கு மேல தொங்குன சொரக்குடுக்கைய இறுக்கிப் புடிச்சுக்கிட்டா & மரம்விட்டு மரம் தாவுற குரங்கு கழுத்த குட்டி புடிச்சுக்கிட்ட மாதிரி.
‘ம்...ம்...ம்...’னு மொனகுறா. ‘யப்பே யாத்தே’னு பொலம்புறா. எலும்புக்கும் சதைக்கும் மத்தியில ஊசியச் செலுத்திச் செலுத்தி உருவுது ஒரு வலி; இடுப்புல ஒரு பக்கம் நொழைஞ்சு மறுபக்கமா வெட்டி வெளியேறுது ஒரு மின்னலு.
‘அய்யோ’னு சொரக்குடுக்கைய இறுக்கிப் புடிச்சு இழுத்தவதான். அது அந்து தெறிச்சு அங்கிட்டு ஓடி விழுந்துபோச்சு. சொரக்குடுக்க ஓடி வெளியபோயி விழுக, படீர்ன்னு ஒடஞ்சதய்யா உள்ளயிருந்த பனிக்கொடம். இப்பத் தீட்டு நின்னு போச்சு. வழவழவழனு வடிகஞ்சியா ஒழுகுது பனிக்கொடம் ஒடைஞ்ச தண்ணி. பசபசபசனு பசையப் பாத்தவுடன வலியில துடிக்கிறவளுக்கு வந்திருச்சு ஒரு நம்பிக்கை.
‘‘சாமி! எம் பிள்ள வலிக்காம வழுக்கி வழுக்கி வர்றதுக்குத்தான் இந்த வசதி பண்ணி வச்சிருக்கிறியா? கையெடுத்துக் கும்புடணும் ஒன்னிய. ஆனா, கைதூக்க முடியலையே.’’
பனிக்கொடம் ஒடைஞ்சா அதுல நீந்தி வந்திரும் பிள்ளங்கிறது நெசந்தான். ஆனா, வலி குறைஞ்சிரும்கிறது தப்பு. அதுக்குப் பெறகு எடுக்கும் பாருங்க ஒரு இடுப்பு வலி... ஓடிக் கெணத்துல விழுந்து செத்துப் போகலாமானு தோணுமாம் பொம்பளைகளுக்கு.
இப்ப ஒடைஞ்ச பனிக்கொடத்துக் குள்ள ஊர் சுத்துது பிள்ள; அப்படித்தான் ரெண்டு நாலு சுத்துச் சுத்தி அழிச்சாட்டியம் பண்ணுமாம். அது எதுக்குன்னா வெளி வாசல் தேடித்தேடி அலையுதாம் கண்ணு தெரியாத புள்ள கருவுக்குள்ள.
கண்ண மூடிக்கிட்டே வழி கண்டுபுடிக்குது கருவுக்குள்ள புள்ள; பெறந்து வெளியேறிக் கண்ணத் தொறந்தும் வழி கண்டுபிடிக்க முடியல மனுசப்பயபுள்ள. இதத்தான ஈசன் எழுத்துன்னு சொல்லி அலையுதுக பெருசுக.
முக்குறா, மொனகுறா. மார்புக் கூட்டுல மூச்சத் தேக்கி ‘தம்’ கட்டி நிக்கிறா. வலியடக்கப் பல்லக் கடிக்கிறேன்னு ஒதட்டையும் நாக்கையும் ஒரு ஓரமாக் கடிச்சு ரத்தம் கசிய அனத்துறா.
முதல் சுத்துச் சுத்துது பிள்ள வகுத்துக்குள்ள. அந்த ஒரே சுத்துல மேல இருந்த பிள்ள கடக்குனு கீழ எறங்கிருச்சு. எறங்குன பாரமெல்லாம் ஏந்தித் தாங்குனதுல இடுப்போட சேத்து இப்ப முட்டிக்காலும் வலிக்குது. ‘‘யாத்தே’’ன்னு கத்துறா. வெளிய விழுந்த ஒரு இடியும் அவளோட சேந்து கதறுது.
இப்ப ரெண்டாம் சுத்துச் சுத்துது பிள்ள. நெஞ்சுக்கு நேர தலையும் வயித்துக் குள்ள காலுமா நிமிந்திருச்சு இப்பக் கவுந்து கெடந்த பிள்ள. வலியில உசுரு ஒடம்பவிட்டுக் கொஞ்சம் வெளியே போகுது; உள்ள வருது. கொஞ்சம் வெளிய போகுது; உள்ள வருது. முதுகுக்குப் பின்னால கெடந்த சாக்க அழுத்தி அமுக்குனதுல கயிறு அவுந்து பிதுங்கி வழியுது கம்பங் கருது.
நட்டுக்குத்தலா நின்ன பிள்ள இப்ப மூணாம் சுத்துச் சுத்தி வருது. ‘எங்க? எங்க? நான் பத்து மாசமாக் குடியிருந்த வீட்டுக்கு வெளிவாசல் எங்க?’ கையையும் காலையும் ஒதறி ஒதறித் தேடுது. பிள்ள வெளிய வந்திருமா இல்ல... என் உசுரு வெளிய போயிருமா? ‘‘நான் செத்தாச் சாகுறேன்; சாகப்படாது எம் பிள்ள’’ & அவ நெனவுல வந்துபோற எல்லாச் சாமிகளையும் நெஞ்சில நிறுத்திக் கும்பிடுறா.
இப்ப நாலாம் சுத்துச் சுத்தி வருதய்யா வகுத்துக்குள்ள பிள்ள. ஆகாயம் பாக்க மல்லாக்கக் கெடந்த பிள்ள, கழுக்குனு ஒரு திருகுத் திருகிக் கவுந்து, பனிக்குடத் தண்ணியில மொழுக்கு மொழுக்குனு வழுக்கி மெதந்து, பெறப்பு வாசல்ல தலைய வச்சுப் பொருந்தி உக்காந்திருச்சு.
வலி பொறுக்காம அவ வெறைச்சு வீசுன கையில பட்டு, பூசணிக்கா ஒண்ணு தெறிச்சு உருண்டு விழுந்தோடிப் போச்சு குடிசைக்குள்ள ஒரு மூலையில.
‘‘என் வாசல்ல தல வச்சுப் படுத்துருக்கிற வைராக்கியப் பயபுள்ள... நீ முண்டி வெளிய வாரியா? நான் முக்கி வெளிய வாரியா?’’
‘‘ஒரு வேலைய ரெண்டு பேரு செய்யிற மாதிரி வருமா? தாயும் முக்கணும்; பிள்ளையும் முண்டணும். அப்பத்தான பெற முடியும் பிள்ள.’’
எப்பவோ... யார் கூடவோ சண்ட போட்டன்னைக்கி ஆத்தா பெரியமூக்கி அடிச்சுப் பேசுன சொல்லு, அவ காதுக்குப் பக்கத்துல பட்டாம்பூச்சிக மாதிரி பறக்குது இப்ப.
மொத முக்கு முக்குறா; அசைய மாட்டேங்குது கருவுல வளந்த கல்லு.
ரெண்டாவது முக்கு ஓங்கி முக்குறா; பிள்ள லேசாப் பிதுங்குது.
‘‘யாத்தே! வருது போலிருக்கே! வந்திரும் போலிருக்கே!’’
முட்டிபோட்ட கால இன்னும் ஆனமட்டும் அகலப்படுத்திக்கிட்டு பெறங்கை ரெண்டையும் பின்னால ஊனி எம்புட்டு மூச்சிழுக்க முடியுமோ அம்புட்டு மூச்சிழுத்து, காத்த நெஞ்சில தேக்கி நிறுத்திக்கிட்டு அவ மூணாவது முக்கு முக்க... ‘தளக்’குனு வெளிய வந்திருச்சு தல.
முட்டிப்போட்டு ஒக்காந்தமேனிக்கு முதுக லேசா முன்னுக்கிழுத்து, ரெண்டு தொடை இடுக்கு மத்தியில எட்டிப் பாக்குறா... வழுவழுங்கிற தண்ணியில வந்து நிக்குது மொழுமொழுங்கிற தல.
‘‘ஏ பக்கிப் பய புள்ள! எம்புட்டு முடி?’’
பின்னிச் சடைபோட்டுப் பிச்சுப் பூ வச்சுவிட்றலாம் போலிருக்கே பெறந்த அன்னைக்கே.
‘கழுக்’குனு இன்னொரு முக்கு முக்க.. கழுத்து வந்திருச்சு வெளியில. அவளுக்கு இடுப்பும் வலிக்குது; உறுப்பும் வலிக்குது இப்ப. தலையும் கழுத்தும் வெளியேறச் சின்ன வழி போதும். தோள்பட்ட வரணும்னா வாய் அகலமாகி வழிவிடணும். குயில் வராத சந்து வழி ரயில் வாரது மாதிரி இது அதிசயமான சோலியாச்சே! வருமா? வந்திருமா?
பிள்ளையத் துப்பி எறியத் தாய் உறுப்பு தவிக்குது. கருவறைய எட்டி ஒதைச்சு வெளிய தவ்வப் பிள்ளையும் முட்டிப்பாக்குது.
இவளும் ஒரு முக்கு முக்க, பிள்ளையும் ஒரு முண்டு முண்ட, இறுகிக்கெடந்த வழி எளக்கங் குடுக்கத் தோள்பட்டை பிதுங்கின வேகத்துல இடுப்பு வரைக்கும் வந்திருச்சு பிள்ள.
வெளிய... சலசலசலனு அடிச்ச சாரல் இப்ப மளமளமளனு மழையாகிப் போச்சு. குடிசை மேல யாரோ மணலவாரி எறைக்கிற மாதிரி மடமடன்னு சத்தம் கேக்குது.
தாய் வகுத்துல பாதிப் புள்ள; தரை மேல பாதிப் புள்ள. எம் புள்ள மூஞ்சி பாக்க இன்னும் எம்புட்டு நேரமாகுமோ கடவுளே! என்ன பண்றது... ஏது பண்றதுனு தெரியாமப் பின் பக்கமாச் சரிஞ்சு, முட்டி போட்ட ரெண்டு கால்ல ஒரு கால ஒசக்கத் தூக்கி அங்கிட்டும் இங்கிட்டும் லேசா ஆட்டி, முழு மூச்ச உள்ள இழுத்து ஒரு முக்கு முக்கினா பாருங்க...
தொப்பூழ்க்கொடி யோட ‘மொழுக்’குனு தரை பாத்து வெளிய வந்து விழுந்த பிள்ள, அட்டஞ் சாச்சுப் பெரண்டு மல்லாக்க விழுந்திருச்சு சாம வைக்கோல் மேல.
‘யாத்தே’னு விட்ட பெருமூச்சில வலிய வெளிய அனுப்புனவ, ஒரு எக்கு எக்கி எட்டிப் பாத்தா;
ஏம் பிள்ள உசுரோட இருக்கா? இருக்கு; கைகால் அசையுது.
ஆணா? பொண்ணா? ஆம்பளைப் புள்ளதான்! கன்னங்கரேல்னு குரவை மீன் மாதிரி அடையாள மிருக்கு. ‘அத’த் தொட்டும் பாத்து மகுந்து மலந்து குளுந்து போனா குளுந்து.
‘‘சாவோட தலமாடு வரைக்கும் கூட்டிட்டுப் போயி, வகுத்துல இருந்த பிள்ளையக் கையில குடுத்திட்டுப் போயிட் டியே காளியாத்தா! ஒனக்குக் கெடா வெட்டுறேன்.’’
பிள்ள தரையில கெடந்தாலும், தொப்பூழ்க் கொடிக்கும் தாய்க்கும் தொடுப்பு அறுபடல; ஆனா, உள்ள இருக்க நஞ்சுப் பை மட்டும் வெளிய வந்து விழுகல.
வாந்தியெடுக்கிறவ மாதிரி ஒரு செருமிச் செருமி அடி வகுத்துல அழுத்தம் குடுத்து ஓங்கி ஒரு இருமு இருமினா. பொசுக்குனு வெளிய வந்தோடி விழுந்து போச்சு நொரை நொரையா நஞ்சுப் பையி.
‘‘மகனே! கருணக் கெழங்கு மாதிரி கருகருனு தரையில கெடக்குற என் மகனே!
ஒனக்கு ஒரே ஒரு தாய்தாண்டா; அது ஒலகத்துல உண்டானது.
எனக்கு நீ ஒரே மகன்தாண்டா; இது நான் உண்டாக்கிக்கிட்டது.’’
வலியில தெரியல; இப்பத் தெரியுது& இடுப்புலயே சொருகிவச்சிருந்த பண்ணருவா. எடுத்தா; தொப்பூழ்க் கொடிய அறுத்தா. ஒழுகிச்சு ரத்தம்; முடிபோட்டா. சாமவைக்கோல வெலக்குனா; பண்ணருவா மூக்குலயே பள்ளந் தோண்டுனா. மாசுமருவை யெல்லாம் அதுலயே போட்டுப் பொதைச்சா. கசகசங்கிற ஒடம்போட பிசுபிசுங்கற சீலையோட எந்திரிச்சா.
தூக்குனா பிள்ளய. முந்தானையில தொட்டில் கட்டி முடிஞ்சுகிட்டா கழுத்துல. செதறிக் கிடந்த சொரக்குடுக்க பூசணிக்காயையெல்லாம் ஒரு கால்லயே தள்ளி ஒதுங்க வச்சா. வெளிய வந்தா.
நனைஞ்சு கெடந்த வெறகுக் கட்ட நிமித்தித் தலைய முட்டுக்குடுத்துத் தாங்கிச் சொமந்தா.
கருவேலங்காட்டு ஒத்தையடிப் பாதையில நடையில கூடிட்டா.
‘‘இந்தா போறா பாரு இவதாண்டா பொம்பள’’னு ‘கடபுட கடபுட’னு கைதட்டுது ஆகாயம்.
‘‘வாடா ராசா வாடா’’ன்னு புதுப் பயலுக்கு ஒரு சரவெளக்க ஏத்தி எறியுது மேகம்!