ஒரு சாரல் பொழுது - தேவ்
அசல் பதிவுக்கு சுட்டி
சென்னையில் இப்போ ஒரே மழை...
ஆபிஸ்ல்ல அவன் தான் எனக்கு ரொம்ப க்ளோஸ் பிரண்ட்.
கையிலே சிகரெட் புகைய வானம் பார்த்தவன் மழையை ரசிக்க ஆரம்பிச்சான்.சின்ன பையன் மாதிரி மழையைக் கையிலே பிடிச்சு என் முகத்தில் அடிச்சான்.
ச்சே என்னடா ஆச்சு உனக்கு இப்படி பிஹேவ் பண்ணுறே.., டோன்ட் யூ கேர் அபௌட் வாட் அதர்ஸ் வில் திங்க் அபௌட் யூ. ஸ்டாப் ஆக்டிங் கிட்டிஷ் டியுட்...
என் கார்பரேட் உணர்வு ஆங்கிலத்தில் கொப்பளித்தது..
அவன் சிரித்தான்... மச்சி..படம் போலாமா என்றான்.
மாமூ இன்னிக்கு வீக் டே..வேலைக்கு ஆகாது என்று தப்பிக்க நினைத்தேன்.
ஈவீனிங் ஷோ சத்யம் காம்ப்ளக்ஸ் போலாம் வா...படம் நல்லா இல்லாட்டியும் படம் பாக்க வர்ற கூட்டம் நல்லா இருக்கும்..இன்னிக்கு மழை வேற பெய்யுது என்று கண்ணடித்தான். எனக்கும் ஆசை மெல்ல துளிர் விட்டது. கஜினி போலாமா...அசின் பின்னி பெடல் எடுத்து இருக்காளாம்...என் பங்குக்க்ய் நானும் உற்சாகம் அடைந்தேன்.
இருவரும் பல்ஸரில் சீறி புறபட்டோம். மழை மெல்ல மெல்லிசை பொழிந்தது. அங்கே ஒண்ணு இங்கே ஒண்ணுன்னு தியேட்டரில் கூட்டம் கொஞ்சம் கம்மி. எங்கள் பிகர் பார்க்கும் கனவு பஞ்சர் ஆனது. போஸ்ட்டரில் அசினும் நயந்தாராவும் பல லட்சம் வாங்கிக் கொண்டு பூவாய் சிரித்தனர்.
அப்படியும் கஜினி படம் ஹவுஸ்புல்!!! அடாது மழை பெய்தாலும் தமிழன் விடாது படம் பார்ப்பான். ஷோவுக்கு இன்னும் 20 நிமிஷம் இருந்துச்சு. பக்கத்துல்ல இன்னொரு படம்... பேரு மழை...அட சீசனுக்கு ஏத்த படம் போல...அவன் கேட்டான் ..யாருடா அதுல்லே? ஷ்ரேயான்னு புதுப் பொண்ணு..
சிவாஜில்ல உங்க தலைவருக்கு ஜோடின்னு பேசிக்கிறாங்க... நனைய நனைய நடிச்சுருக்காளாம் போலாமா?...என் மனசு கும்மி அடித்தது...சரி மாப்பி ...ஆனா டிக்கெட் செலவு உன்னோடது ஒகேவா?
அவன் அதற்கும் சிரித்தான். படம் பார்த்தோம் ... வெளியே வந்தோம்...
பணத்தை தண்ணியா செலவழிப்பாங்கன்னு கேள்விப்பட்டு இருக்கேன்..இன்னைக்கு தான் பார்த்தேன்..படமாம் இல்லை படம்...கிறுக்குத்தனமா இல்ல இருக்கு.. இப்படி ஒருத்தி மழையிலே பப்ளிக்கா நனைவாளா...? கேட்கிறவன் கெனையா இருந்தா காபித் தூளைக் கூட கோல்ட் பிஸ்கட் விலைச் சொல்லுவாங்கப் போல இருக்குப்பா...
அவன் சிரித்தான்.
மாமூ என்ன சிரிப்பு... இந்த படத்தைப் பார்த்ததுக்கு ஒரு நைன்டி போட்டுட்டு ரூம்ல்ல மல்லாக்கப் படுத்து கிடந்தா கனவுல்லேக் காசு வாங்காமலே இந்த குட்டி ஒரு டாண்ஸ் போட்டுருப்பா...ஒரு 120 ரூபா தண்டமாப் போச்சு...
மச்சான் சாப்பிட்டுப் போயிருவோம்...என்றான் அவன்.... மழை வலுத்தது. கொட்டு கொட்டு என்று கொட்டியது. கூட ஆட யாரும் இல்லை என்ற ஏக்கத்தில் இட்லியை கிறக்கமாய் உள்ளே தள்ளினேன். ஆமா யாரது நயனிகா.... நம்ம ஆபிஸ்ல்ல அந்த பெயர்ல்ல யாருமில்லையே நான் கேட்க சிரிப்பை குறைத்து அவன் என்னைப் பார்த்தான்.
நயனிகா பெயரு உனக்கு எப்படி தெரியும் என்றான்.
மாப்பு உன் மொபைல்ல பார்த்தேன். பேர் புதுசா இருந்துச்சு அதான் கேட்டேன்.
நயனிகா, ஷி வாஸ் இன் காலேஜ் வித் மி...இப்போ கல்யாணம் ஆகி ஹைதராபாத்ல்லே இருக்கா இன்னும் 2 வீக்ஸ்லே யு.எஸ் போறா.. ஹஸ்பெண்ட் ஒரக்கிள்ல்ல பெரிய போஸிஷனாம், இங்கே டெலிவரிக்கு வந்து இருக்கா..
அட அட ஒரு கேள்விக்கு எவ்வளவு பதில்? பழைய பனையோலையில் ஆட்டோகிராபா!!! நம்ம பிராண்ட் நக்கல் தொடர்ந்தது. எனக்கு தெரியல்ல பிரண்ட் ஒருத்தன் அதான் நம்ம சுப்பு ஹதராபாத்ல்ல அவளை பார்த்துப் பேசியிருக்கான். அவன் தான் அவ நம்பர் வாங்கி கொடுத்தான்...அவ இப்போ சந்தோஷமா இருக்காளாம் ஹப்பி, வீடு, குழந்தைன்னு...
தம்பி இட்லிக்கு கொஞ்சம் சாம்பார் ஊத்துப்பா...மாப்பு.. நீ சொல்லுடா.. போன் பண்ணி ஒரு ஹாய் சொல்லு...அப்படியே அவ ஹப்பி மெயில் ஐடி கேளு... நம்ம ரெஸ்யூம் அனுப்பி வைப்போம். அப்படியே பிளைட் ஏறுவோம்டா.
அவன் சிரித்தான்.
ரூம்க்கு போய் கைலி மாற்றி கொண்டோம். அவன் மழை பார்ப்பதை நிறுத்தவில்லை. மாமூ என்னடா மழையை சைட் அடிக்கிறே? ஷ்ரேயா ஞாபகமா? அவன் சிரித்தான்.
இல்லைடா நயனிகா ஞாபகம்..அவளுக்கும் மழை பிடிக்கும். மழையிலே நனைய ரொம்ப பிடிக்கும். shes truly madly deeply crazy about rain...மழை பெய்ஞ்சா அட்லீஸ்ட் 30 செகண்ட்ஸாவது அதுல்ல நனையுணும்னு சொல்லுவா...
எனக்கு தூக்கம் போயேப் போச்சு.
என் கூட பி.ஈ படிச்சா... கோயம்புத்தூர் ஆர்.எஸ் புரம் தான் அவ வீடு.. அவ குஜராத்தி ஆனா நல்லா தமிழ் பேசுவா...இளையராஜான்னா உயிர்.. வைரமுத்து கவிதை எல்லாம் எனனைக் கேட்டு கேட்டுப் படிப்பா... நல்லா கோலம் போடுவா... எனக்கு ஹோலின்னு ஒரு பெஸ்டிவல் இருக்குரதே அவ சொல்லித் தான் தெரியும்...அவளூக்கு அப்போவே டிரைவிங் தெரியும்....பெரிய இடம்.. அளவா சாப்பிடுவா... ஜுஸ் ...பிரஷ் ஜுஸ்ன்னா உயிரை விடுவா....
அவ மத்தியான டிப்பன் பாக்ஸ்ல்ல எனக்கு எப்பவும் ரெண்டு சப்பாத்தி இருக்கும்.. புரியாமலே அவளுக்காக் அவ கூட குச் குச் ஹோத்தா ஹேய் அஞ்சு வாட்டி பார்த்து இருக்கேன்...ஒவ்வொரு வாட்டியும் அவ தான் கதைச் சொல்லுவா...சொன்னதையேத் திரும்பச் சொன்னாலும் அவ குரல்ல அதைக் கேட்கணும்..அப்படி ஒரு ஆனந்தம்.
முக்கியமா மழை பெய்ஞ்சா என் கையிலே குடை இருந்தா கூட அதை மடக்கி வைச்சுடுவா. "கமெஷ்.. நமக்குன்னு கடவுள் கொடுக்கிற ஆசி மழை..அதுக்கு ஒளியலாமா? அப்படின்னு கேட்பா..கை விரிச்சி முகம் மேல மழை துளி பட்டு தெறிக்க சின்ன பொண்ணு மாதிரி சிரிப்பா..அந்த சிரிப்பைப் பார்த்துகிட்டேச் செத்துப் போயிடாலாம்ன்னு தோணும்டா
ம்ம்ம்ம்ம்ம்ம்ம் நான் கொடுத்த ரியக்ஷன்.
பைனல் இயர் ஊட்டி டிரிப் போனோம். அங்கெ சிக்ஸ்த் மைல்லே இறங்கி நிக்குறோம். சுத்தி புல்வெளி. அதுல்ல வெள்ளை சுடியிலே ஒரு வெண்புறா மாதிரி பறக்கிறா துள்ளித் துள்ளி ஓடுறா...
காமேஷ் இந்த மாதிரி இடம் பார்க்கும் போது தான் கடவுள் நம்பிக்கை ஜாஸ்தி ஆகுது.Theres God.... Thank u god nnu சத்தமாக் கத்தற எக்கோ கேட்குது.. என்னையும் பார்த்து நீயும் தாங்க் யூ சொல்லுங்கறா... நான் சொல்ல நினைச்ச 'யூ' வேற... இருந்தாலும் அவ சொல்லச் சொன்னான்னு தாங்க் யூ சொன்னேன்..
திடிரென்னு பேய் மழை பிடிச்சுகிச்சு...அவ நனைய ஆரம்பிச்சுட்டா...she was enjoying rain as usual எல்லோரும் பஸ் பார்த்து ஒட ஆரம்பிச்சோம்... நானும் தான் .. அவ கேஸுவலா நடந்து வந்தா...தலைமுடி அந்த ஈரமான காற்றிலே லேசா ஆட..மார்புகள் மறைய கைக் கட்டிகிட்டு...அதையும் மீறி மார்புகள் திமிற...அழகா அடியெடுத்து வச்சு...she was walking...வெள்ளை டிரஸ்ல்லே ஒரு ஏஞ்சல் நடந்து வந்ததை அன்னிக்குத் தான் லைப்ல்ல பார்த்தேன்...may be that was the first and last time...அசந்துப் போயிட்டேன் அவ அழகைப் பார்த்து...டக்குன்னு பார்த்தா ஒட்டு மொத்த பசங்களும் அவளையேப் பார்த்துட்டு இருக்காங்க...மழை... வெள்ளை உடை...அதிலும் அப்படி ஒரு தேவதை மாதிரி பொண்ணு.... குறுகுறுன்னு பசங்க பேசிகிட்டாங்க....சில வார்த்தைகளை இங்கே சொல்ல முடியாது... எனக்கு ஒரு மாதிரி ஆகிப் போச்சு..
பஸ்ல்ல எனக்கு பக்கத்து சீட்டில்ல தான் உட்கார்ந்தா...அவளோட வாசம் வேற என்னை அப்படியே உலுக்கி போட்டுருச்சு... நான் மௌனமா இருந்தேன்... உள்ளுக்குளே புகைந்தேன்...
காமேஷ் மழை எவ்வளவு அழகு..அதுல்ல நனையாம இப்படி பஸ்க்குள்ளே இருக்கீயே...உனக்கு ரசனையே இல்லப்பா என்றாள்.
ஆமா ஆமா இப்படி நீ நனைஞ்சா ஊரே வாய் பொளந்து வேடிக்கை பார்க்கும்... நான் நனைஞ்சா யார் பார்ப்பா?.. வெடுக்குன்னு வார்த்தை தெறித்து போக என் உதட்டைக் கடித்தேன். அவ முகம் பட்டுன்னு சுருங்கிப் போச்சு...
காமேஷ் என்ன சொன்னே? ஊரு பார்க்கட்டும்... நீயுமா பார்த்த?
எனக்கு என்ன பதில் சொல்லுறதுன்னு தெரியல்ல. என்னையே முறைச்சுப் பார்த்துகிட்டு இருந்தா...நான் எதுவுமே பேசாமலே இருந்தேன்...'ப்ச்'ன்னு உதட்டைப் பிதுக்கினவ அப்படியே முகத்தை வேற பக்கமாத் திருப்பிக்கிட்டா... எனக்கு தூக்கி வாரிப் போட்டது.. என் மண்டையிலே 1000 இடி விழுந்த மாதிரி இருந்துச்சு...
college exams முடிஞ்சது...farewell ஆச்சு...எனக்கு அவ கிட்டே ...அவ முகம் பார்க்கவே தைரியம் வரலே..இதோ ஆச்சு அஞ்சு வருஷம்...எனக்குன்னு ஒரு வேலை...லைப் போகுது...
மழை வரும் போது எல்லாம் எனக்கு அவ ஞாபகம் வரும். கூடவே கோபம் வரும்... என்னப் பெருசாத் தப்பு பண்ணிட்டேன்...ஒரு ஆண்பிள்ளைன்னு இருந்தா ஒரு பெண்ணைப் பார்த்து ரசிக்கிறது தப்பா...அதுக்குன்னு அப்படியா வெட்டிகிட்டுப் போறதுன்னு... கோபம் பொங்கி பொங்கி வரும் அப்புறம் அப்படியே மறந்துப் போயிடுவேன்...
டேய் மாப்பு.. மூணு வருஷமா நான் உன் ரூம் மேட்...ஒரு 300 தடவை ஒண்ணா மழையைப் பார்த்து இருப்போம்...அப்போ எல்லாம் சொல்லாத கதையை இப்போ ஏன்டா சொன்னே?...
சுப்பு சொன்னான்.. கிளம்பும் போது அவ பையன் பேர் என்னன்னுக் கேட்டானாம்...காமேஷ்ன்னு சொன்னாளாம்...சொல்லும் போது அவ கண்ணு லேசா கலங்கிப் போச்சாம்...
இப்போது அவன் சிரிக்கவில்லை..அவன் அந்த பக்கம் திரும்பி நின்றான்...அவன் முகம் பார்க்க என்னால் முடியவில்லை...