இலங்கைப்பயணம் - வாஸந்தி
யதார்த்தங்கள் + பாவனைகள் - வாஸந்தி
அசல் பதிவின் சுட்டி :: நன்றி - குமுதம் தீராநதி
இலங்கையில் பத்தாவது நாடாளுமன்ற பொதுத் தேர்தல் தேர்வு முடிவுகள் வந்திருந்தன. நாற்பத்தியன்பது வயது சந்திரிகா குமாரதுங்க, புதிய பிரதமராகப் பதவியேற்றிருந்தார். இலங்கை அரசியலில் மிகுந்த அக்கறை கொண்டிருந்த நான், நிகழ்வுகளை ஆர்வத்துடன் கவனித்துக் கொண்டிருந்தேன். பதினேழு ஆண்டுகாலம் வடகிழக்குப் பிரச்சினைக்கு, அரசியல் தீர்வுக்குப் பதில் யுத்த தீர்வுதான் வழியென்று நினைத்து, இனவாத அடிப்படையிலும் ஆட்சி நடத்திய ஐக்கிய தேசியக் கட்சி [UNP] தோல்வி அடைந்திருந்தது. சந்திரிகாவின் மக்கள் கூட்டணி [P.A.] நூலிழை பெரும்பான்மையே பெற்றிருந்தாலும், ஜனநாயக புனரமைப்புக்கும் இனவாதத்துக்கும் எதிரான வாக்கை மக்கள் அவருக்கு அளித்திருந்தார்கள். பத்து ஆண்டுகளுக்கும் மேலாக வடகிழக்கு மாகாணங்களில் நடந்துவந்த விடிவுகாணாத போரின் ஓசைக்கு முடிவுகாண ஏங்குபவர்கள் அவர்கள்; ரணமாகிப் போன மனத்துக்கு மருந்தாக, அமைதியைத் தேடுபவர்கள்; அவர்களது எதிர்பார்ப்புகள் அசாத்தியமானவை.
அப்போது, இனவாத அரசியலும் வன்முறை கலாச்சாரமும், இலங்கை பிரஜைகளின் சகஜ வாழ்க்கையில் புகுந்து, ஒட்டுமொத்த சமூகத்தையும் நிலைகுலைய வைத்திருந்தது. இப்படிப்பட்ட சூழலில், ஐம்பது வயது நிரம்பாத ஒரு பெண், பிரதமர் பதவிக்கு வரத் துணிந்தது அசாதாரணமானதாகத் தோன்றிற்று. இதைப் பற்றி நேரிடையான தகவல் சேகரிக்க, கொழும்பிலிருந்த சந்திரிகாவின் ஆதரவாளரும் இலங்கைத் தமிழருமான நீலன் திருச்செல்வனைத் தொடர்புகொண்டு பேசும்போது, அவர், ‘‘நீங்கள் இங்கு வாருங்கள், வாஸந்தி. அங்கு அமர்ந்தபடி என்ன எழுதுவீர்கள்?" என்றார். நான் அவரிடம் ஏதும் மறுமொழி கொடுக்கவில்லை. இலங்கைக்கு யாரை அனுப்புவது என்பதை, தில்லி அலுவலகம்தான் தீர்மானிக்கும். சாதாரணமாக ஆங்கிலப் பதிப்பில் வேலை பார்ப்பவர்களைத்தான் அனுப்புவார்கள். அப்போது சேகர்குப்தா என்னுடைய மேல் அதிகாரியாக இருந்தார்.
நீலன் பேசிய சற்று நேரத்தில், சேகர் குப்தாவிடமிருந்து ஃபோன் வந்தது. "நீதான் இலங்கைக்குச் செல்லவேண்டும்" என்று அவர் சொன்னார்; வியப்பாக இருந்தது. பத்திரிகைத் துறையில் தாமதம் என்ற சொல்லுக்கே இடமில்லாததால், நான் கொழும்புக்கு மறுநாளே கிளம்ப முடிவெடுக்கப்பட்டது. ஆனால், என்னுடைய ‘பாஸ்போர்ட்’, தேதி காலாவதியாகிவிட்டதை நான் அப்போதுதான் உணர்ந்தேன். ‘இந்தியா டு டே’ அலுவலகத்துக்கு இருந்த அபிரிமித செல்வாக்கினால் என் பாஸ்போர்ட் புதுப்பிக்கப்பட்டு, இலங்கை விசா கிடைத்து, அன்னியச் செலாவணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு, மறுநாள் நான் கிளம்பியபோது, ஏதோ செப்பிடுவித்தை போல் பட்டது. ஆனால், இந்த சௌகர்யங்களை மட்டும் தான் அலுவலகம் செய்யும். மற்றபடி அந்நிய தேசத்தில் தொடர்புகள் ஏற்படுத்திக்கொள்வது , அதிகாரிகளை, தலைவர்களை சந்திப்பது எல்லாம் பத்திரிகை நிருபரின் பொறுப்பு. அன்று, இன்று இருப்பதுபோல் லேப்டாப் வசதியோ ‘மொகைல் போன்’ வசதியோ இல்லை. சந்திரிகாவைப் பேட்டி கண்டதும், கொழும்பின் சூழலைப் பற்றின கட்டுரை எழுதியபிறகு, முயற்சி செய்து யாழ்பாணத்துக்குப் போய் வரும்படி தில்லி அலுவலகம் சொன்னது. யாழ்ப்பாணம் அப்போது புலிகள் கட்டுப்பாட்டில் இருந்ததால், பத்திரிகை நிருபர்கள் யாரும், கொழும்பிலிருந்தவர்கள்கூட அங்கு இரண்டு ஆண்டுகளாகச் செல்லத் துணிந்திருக்கவில்லை. கொழும்பு அரசுக்கும் யாழ்பாணத்துக்கும் இடையில் போர் நிலை எப்பவும் இருந்ததால், பயணம் என்பதே ஆபத்தான முயற்சி. யாழ்பாணத்தில் போட்டி நிர்வாகம் இருந்தது. அதைப் போல் காவல்துறை, நீதிமன்றம், ராணுவம், வரிமுறை எல்லாமே அவர்களது சொந்த ஏற்பாடுகள்தான். யாரும் அங்கு எளிதில் நுழைந்துவிட முடியாது. யார் சென்றாலும் கடுமையான சோதனைக்கு உட்படவேண்டும்.
எனக்கு எந்தப் பயமும் தோன்றவில்லை. மாறாக, மிக உற்சாகப் பரபரப்பு இருந்தது. அது ஒரு வகையான அசட்டுத் துணிச்சல். புலிகள், என்னுடைய 'நிற்க நிழல் வேண்டும்' நாவலைப் படித்தபிறகு, மிகக் கோபமாக இருந்தது எனக்குத் தெரியும். நான் தொடர்ந்து அவர்களை விமர்சித்துவேறு வந்தேன். எனக்கு, யாழ்பாணத்தில் ஏதாவது ஆகிவிட்டால் என்ன செய்வது என்று, விளையாட்டாக தில்லி அலுவலகத்தைக் கேட்டேன். ‘‘கவலைப் படாதே; அப்படி ஏதாவது நடந்தால், உன்னை அட்டைப்படத்தில் போட்டுவிடுகிறோம்’’ என்று அலுவலகம் உறுதி அளித்தது.
கொழும்பில் சென்று இறங்கியதும் நான் சுறுசுறுப்பானேன். நீலன் எனக்கு அளித்த தொலைபேசி எண்களுடன் தொடர்பு கொண்டு, சந்திரிகாவுக்கு அப்போது நெறுக்கமானவர்களாக இருந்தவர்களுடன் தொடர்புகொண்டு, பின்பு நேரில் சந்தித்து, மறுநாள் காலை எட்டரை மணிக்கு பேட்டிக்கான நேரத்தைப் பெற்றேன். ‘‘சந்திரிகா பிரதமரான பிறகு அளிக்கும் முதல் பேட்டி உங்களுடையது’’ என்று, முன்பு சந்திரிகாவுக்கு மிக நெறுக்கமானவராகவும் அவரது காரியதரிசியாகவும் இருந்த பத்மா மஹாராஜா சொன்னபோது மலைப்பாக இருந்தது. ஆனால் மறுநாள், நான், டிஸில்வா ரோடில் இருந்த பிரதமரின் அலுவலக மாளிகையில் அவருக்காகக் காத்திருக்கையில், அவரது ஆளுமையை நம்பி ஒரு நாடும் மக்களும் காத்திருப்பதான பிரக்ஞை, அவருக்கு இருக்குமா என்றே எனக்குச் சந்தேகம் வந்தது. பத்மா போன் செய்த வண்ணம் இருந்தார். பிரதமர் எங்கே இருக்கிறார் என்றே தெரியவில்லை. சந்திரிகா 11.30 மணிக்கு வந்து சேர்ந்தார். காலையில் கிளம்பும் சமயத்தில்தான் அவருடைய மகனுக்கு உடம்புசரியில்லை என்று தெரிந்ததாம். எனவே டாக்டரிடம் செல்லவேண்டி வந்ததாம்.
பேட்டி ஆரம்பித்ததும் மறுபடி அவருக்கு நேரம் மறந்தது. வெகுநாள் பழகிய தோழி போல சுலபமாகச் சிரித்தார்; உணர்ச்சிவசப்பட்டார். இலங்கை மக்களைப் போலவே துப்பாக்கி கலாசார வன்முறையினால் ஏற்பட்ட வடுக்களைச் சுமப்பவர். தந்தை பண்டார நாயகவும் கணவர் குமாரதுங்கவும் துப்பாக்கிச் சூட்டிற்குப் பலியானதைக் கண்டவர். தன்னையும் இரண்டு குழந்தைகளையும் காத்துக்கொள்ள, மூன்று ஆண்டுகள் அஞ்ஞாதவாசம் செய்தவர். ‘‘இந்த அனுபவங்களின் தாக்கம் மிகப் பயங்கரமானது’’ என்றார், என்னிடம். ‘‘அதில் இருந்து மீளுவேனா என்று பல சமயங்களில் எனக்குச் சந்தேகம் வந்திருக்கிறது. எப்படியோ மீண்டுவிட்டேன். உணர்வு ரீதியாக, இத்தனை அனுபவங்களில் எனக்கு வாழ்க்கை வெறுத்துப் போகவில்லை. மனிதர்களிடம் கசப்பு உணர்வு ஏற்படவில்லை. வெளியே வந்தபிறகு பார்வை விசாலமாகிவிட்ட மாதிரி இருக்கிறது. ஒரு காருண்யம் புகுந்தமாதிரி இருக்கிறது. முக்கியமாக, அப்படிப்பட்ட ஒரு நிலைமைக்கு என்னை ஆளாக்கிய சூழலை மாற்றவேண்டும் என்ற வெறி என்னை தகித்துக் கொண்டிருக்கிறது."
சந்திரிகாவைச் சந்தித்த பிறகு, அவரது நல்லெண்ணத்தில் எனக்கு நிறைய நம்பிக்கை ஏற்பட்டது. ஆனால், அங்கிருந்த அசாதாரண அரசியல் சூழலில், அவர் நிறைய நிர்ப்பந்தங்களுக்கு ஆளாகவேண்டியிருக்கும் என்பதும், அதற்கு அவர் மண்டியிடாவிட்டால் அவருக்கே ஆபத்து என்பதும் விரைவில் தெரிந்து போனது. பேட்டியின்போது சந்திரிகா இன்னொன்றையும் சொன்னார்: ‘முன்பு கனவு காண்பவளாக இருந்தேன். இப்போது நான் யதார்த்தவாதி". இப்போது இலங்கையில் கனவு காண்பவர்கள் யாருமே இல்லை என்று நினைக்கிறேன்.
இலங்கையில், வடக்கு கிழக்குப் பகுதிகளில் இனப்போர் தீவிரமாவதற்கு முன்பு, காலையில் கொழும்பிலிருந்து கிளம்பினால் மதிய உணவிற்கு யாழ்பாணத்தை அடைந்துவிடலாம். அல்லது ஐம்பது நிமிடத்தில் விமானம் மூலம் யாழ்பாணத்தின் பலாலி விமான நிலையத்தை அடைந்துவிடலாம். நான் சென்றபோது [1994 செப்டம்பர்], பயணிப்பதே இயலாத காரியம். எல்லா பாதைகளும் அடைபட்டிருந்தன. ஆனால், ஒவ்வொரு வாரமும். ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள், கிளாலி, பூநகரி கடற்பரப்பு வழியாக படகில் [8லிருந்து 12 கிமீ] சென்றார்கள்; உயிரைப் பணயம் வைத்து, ஸ்ரீலங்கா கடற்படையின் குண்டுவீச்சுக்குத் துணிந்து, குண்டுவீச்சுக்குத் தப்பினாலும், கடலில் படகு கவிழ்ந்து இறந்தவர்கள் பலர். தாண்டிகுளம் செக்போஸ்ட்டை கடந்து செல்ல இலங்கை ராணுவத்தின் அனுமதிச் சீட்டு தேவை. எனக்கு அனுமதி வழங்கிய ஸ்ரீலங்கா மிலிட்டரி லயசன் ஆபீசர் பிரிகேடியர் ஃபெரேரோ, ‘‘நீங்கள் வெகு தீரமான பெண்மணி’’ என்றார் திரும்பத் திரும்ப. "தனியாகப் போகப் போகிறீர்களா, ஜாஃப்னாவுக்கு, அதுவும் கிளாலி வழியாக?"
ஸ்ரீலங்கா பாதுகாவல் துறை எனக்கு யாழ்பாணத்திற்குச் செல்ல அனுமதி கொடுத்தது; ‘அவருக்கு வழியில் ஆபத்து ஏற்பட்டால் அவரேதான் பொறுப்பு’ என்கிற ஷரத்துடன். நான் தங்கியிருந்த தாஜ் சமுத்ரா ஹோட்டலில், அப்போது லண்டனிலிருந்து வந்திருந்த பி.பி.ஸி.யின் பணியாளர் ஆனந்தி தங்கியிருந்தார். அவரும் யாழ்பாணத்திற்குச் செல்ல முயன்றுவந்தார். நான் தடை செய்யப்பட்ட எல்லைக்கு இப்பால் இருக்கும், வவுனியா பகுதிக்கு ரயிலில் பயணமாவது தெரிந்து [நான் எனது பயணத்தைப் பற்றி அவரிடம் உளறி வைத்தேன்] மிக வியப்படைந்தார். மிகுந்த பரபரப்புடன், ‘‘எப்படி அனுமதி கிடைத்தது? எப்படிப் போகப்போகிறீர்கள்? மிகக் கடுமையான பயணம் என்று அறிவீர்களா?’’ என்று கேட்டார். ‘‘எதற்காகப் போகிறீர்கள்?’’ என்று துளைத்தார். ‘‘பிரபாகரன் உங்களைக் காண விரும்பமாட்டார்’’ என்று தெரியாதா? கஷ்டப்பட்டுச் சென்றபிறகு புலிகள் உங்களை உள்ளே அனுமதிக்காவிட்டால் என்ன செய்வீர்கள்?’’ என்று எச்சரித்தார். ஆனந்தி, புலிகளுக்கு நெருக்கமானவர் என்று எனக்குத் தெரியும். ஆனால், எனது ஆர்வம் அசைக்கமுடியாததாக இருந்தது.
தாண்டிகுளம் செக்போஸ்ட்டிலிருந்து மூன்று கி.மீ. 'யாருக்கும் சொந்தமில்லாத' நிலப்பரப்பில் நடந்தே புலிகளின் எல்லைக்குச் செல்லவேண்டும். என்னுடன் நிறைய பேர் ஏக சாமான்களுடன் நடந்தார்கள்; 1990லிருந்து செயல்பட்ட பொருளாதாரத் தடையினால், யாழ்பாணத்தில் வாழ, தேவைப்பட்ட அன்றாட சாமான்கள். ஓமந்தையில், வட பகுதிக்குச் செல்ல அனுமதிச் சீட்டு பெற, பாம்பாக நெளிந்து நின்றது மக்கள் வரிசை. அங்கிருந்து எண்பது மைல் தொலைவில் உள்ள கிளினொச்சிக்கு மண்ணெண்ணெயில் ஓடும் பஸ்ஸில் பயணம். பிறகு மணல் கப்பிய பாதையில் டிராக்டரில் பயணித்து, கியூவில் நின்று, கிளாலி படகுக்கு டிக்கெட் வாங்கும்போதும், மணலில் சிக்கிய படகுகள் கிளம்பாதா என்று தவிக்கும்போதும், அந்த மக்கள் காட்டிய பொறுமையும், பரிமாறிக்கொண்ட ஜோக்குகளும், இடையிடையே சிலர் 'எங்கட தலைவிதி' என்று வெளிப்படுத்திய அலுப்பைவிட என்னை ஆழமாகத் தாக்கின. கும்மிருட்டான நேரத்தில், 11.30 மணிக்கு, அக்கரைக்குச் செல்ல, கரிய நிழல்களாய் இறுக்கமான நிசப்தத்தில் நூறு படகுகளுக்குமேல் ஒன்றன் பின் ஒன்றாகக் கிளம்பிய காட்சியின் நினைவும், அதில் நான் பங்கு கொண்டதும், இப்பவும் எனக்கு நம்பமுடியாத கனவுபோல் இருக்கிறது. மண்ணெண்ணெயில் ஓடிய விசைப்படகுகள், அலைகளின் கொந்தளிப்பில் மேலெழும்பியபோது, கடல் நீர் ஆவேசமாகத் தாக்கியவுடன், தொலைந்தோம் என்ற பீதி அடிவயிற்றைக் கவ்வியது துல்லியமாக நினைவிருக்கிறது. நினைவு வரும்போதெல்லாம் கடல் நீரின் உப்பு உதடுகளிலும் நாவிலும் கரிக்கிறது.
கிளாலியை அடைந்து மீண்டும் கும்மிருட்டில் டிராக்டரில் பயணித்து, இருபது கி.மீ. தொலைவில் இருந்த யாழ்பாணத்துக்கு பஸ்ஸைப் பிடித்து, அது நடுவில் ‘பிரேக் டவுன்’ ஆகி, அடுத்த பஸ்ஸ§க்குக் காத்து, நான் அதிகாலை ஐந்து மணிக்கு சுபாஷ் ஹோட்டல் வாசலைத் தட்டியபோது, அதன் அதிபர், 82 வயது சங்கரன், பேயைக் கண்டவர் போல அரண்டு போனார். நாற்பது அறைகள் கொண்ட சுபாஷ் ஹோட்டல், இரண்டு ஆண்டுகளாகக் காலியாக இருந்ததாகச் சொன்னார். என் ஒருத்திக்கான உணவு அவருடைய வீட்டிலிருந்து வந்தது. ‘‘சந்திரிகா அரசாங்கம் சமாதானம் கொண்டு வரும் என்ற எதிர்பார்ப்பு இருக்கு. நிச்சயம் வரும். காலம் இப்படியே போய்க் கொண்டிருக்க முடியாது" என்றார், தன்னையே தைரியப்படுத்திக் கொள்பவர் போல.
யாழ்பாண மக்களின் அதிசய பொறுமையும், அதனாலேயே இயங்கும் உயிர்த் துடிப்பும், யாழ்பாணத்து வீதிகளில் எதிரொலித்தது. சாரிசாரியாக சைக்கிள்கள் சென்றன. அன்று நல்லூர் முருகன் கோயிலில் தேர்த் திருவிழா. சகஜ காலம் போல், குளித்து புத்தாடை உடுத்து, ஆண்களும் பெண்களும் கோயிலை நோக்கிச் சென்றுகொண்டிருந்தார்கள். எனக்கு மிக நெகிழ்ச்சியளித்தது. 1990_ல் ஏற்பட்ட பொருளாதாரத் தடைக்குப் பிறகு, அங்கு மின்சாரம் இல்லை. பெட்ரோல், பாட்டரி, ரேடியோ, தொலைபேசி இல்லை. கட்டடத்துக்கு சிமென்ட், விவசாயத்துக்கு எரு இல்லை. பள்ளி, கல்லூரி அறிவியல் கூடங்கள் செயல்படமுடியவில்லை. மூத்த தலைமுறை அனுபவித்த வசதிகளைக்கூட இளைய தலைமுறை அனுபவிக்கவில்லை. ரயிலைப் பார்த்ததில்லை. தொலைபேசி பார்த்ததில்லை. வெளியுலகத் தொடர்பில்லை. எத்தனையோ அத்தியாவசிய பொருள்களுக்குத் தட்டுப்பாடு. இதோடு மனத்தை முடக்கும் போர்; அறிகுறியே இல்லாமல் வந்து தாக்கும் ஷெல் கணைகள்; ராட்ஷஸ நிழலாய் துரத்தும் அச்சம். தேரை நோக்கிக் கும்பிட்டு நிற்கும் மக்களின் மனத்தில், ஒரே பிரார்த்தனைதான் இருக்கும் என்று தோன்றிற்று; 'இறைவா அமைதியைக் கொடு!'
கோயில் வளாகத்தைத் தாண்டி, கடைத்தெருக்களைக் கடந்து, சதுக்கத்துள் நுழைந்ததும் பிம்பங்கள் மாறின. சர்ரியலிச உணர்வை ஏற்படுத்தின. 1987_ல், உண்ணாவிரதம் இருந்து [இந்தியா _ ஸ்ரீலங்கா ஒப்பந்தத்தை எதிர்த்து] உயிர் நீத்த புலி திலீபனின் மாபெரும் ‘கட்அவுட்’ மாலையுடன் நின்றது. அருகிலேயே பிரும்மாண்ட இலங்கை வரைபடக் ‘கட்அவுட்.’
அதில் தமிழீழ எல்லைகள் வண்ணவிளக்குகளில் கண்சிமிட்டின. அதை ஒட்டி புலிகளின் செயல்பாட்டை விளக்கும் பொருட்காட்சி. உள்ளே நுழைந்ததுமே சுவர்களில் வரிசை வரிசையாக இலங்கை ராணுவத்தின், இந்திய ராணுவத்தின் அக்கிரமங்களைப் பறைசாற்றும் புகைப்படங்கள். அதைப் பார்த்தபடி சென்ற மக்களுடன், சீறுடை அணிந்த , துப்பாக்கி ஏந்திய இளம் ஆண்புலிகள், பெண் புலிகள். மந்திரம் போல் ஊடாகக் காதில் விழுந்த பதிவு செய்யப்பட்ட ஒலி நாடாவின் சொற்கள்.. ‘வியட்நாம் போரை, அம்மக்கள் மதிநுட்பத்தால் வென்றதுபோல், நாமும் செயல்படவேண்டும்... எதையும் சமாளிக்கும் நெஞ்சுரம் எமக்கு உண்டு. சோப்பு இல்லையா, இதோ பனம்பழத்தில் சோப்பு செய்வோம்.. உப்பு இல்லையா, இதோ இயங்குகிறது உப்பளம். சர்க்கரைத் தட்டுப்பாடா, பனம் சர்க்கரை செய்வோம். தேவை முன்னிட்டு எத்தனையோ குடிசைத் தொழில்கள். இன்னும் சில ஆண்டுகளில் தமிழீழம் தன்னிறைவு கொண்டதாக, ஸ்ரீலங்காவுக்கு ஏற்றுமதி செய்யக்கூடியதாக இருக்கும்...!’
தமிழீழம் என்பது ஏற்கெனவே சாத்தியமாகிவிட்ட ஒன்றாகத் தோன்றிற்று. ராணுவத்தைக்கண்டு எங்களுக்குப் பயமில்லை, புலிகள் இருக்கிறார்கள் எங்களைக் காப்பாற்ற என்பது மக்களின் தாரக மந்திரம் என்று பட்டது; அவர்களுக்கும் புலிகளுக்கும் தேவைப்பட்ட மந்திரம். ஆட்டோக்களில், கடைத்தெருக்களில், புலிகளைப் போற்றும் பாடல்கள்...
பெண்புலிகளின் மகளிர் அமைப்பு எனக்கு நேரம் ஒதுக்கிற்று. பணியகத்தில் நுழைந்ததும் திடுக்கிட்டது. ஆயுதம் ஏந்திய, ராணுவச் சீருடையில் கண்ணில் பட்ட பெண்களின் சராசரி வயது இருபத்தி நான்குக்கு மேல் இராது. தீர்க்கமான பார்வையும், சிரிப்பற்ற அறிமுகங்களும் அந்த இளம் மாங்குருத்து முகங்களுக்குப் பொருத்தமில்லாமல் கலக்கத்தை ஏற்படுத்தின. அவர்களது பேச்சும் சொன்ன விஷயங்களும் அதை விட மனத்தைக் கலக்குவதாக, அதிர்ச்சி அளிப்பதாக இருந்தன. இந்திய ராணுவத்தின் அடாவடி அக்கிரமங்களை விவரித்தார்கள். பாலியல் பலாத்காரத்தில் தனது எழுபது வயது பாட்டியையும் அது விட்டு வைக்கவில்லை என்று ஒரு பெண் சொன்னார். ‘‘ஆயுதம் எடுத்தாத்தான் எங்களைக் காப்பாற்றிக்கொள்ளமுடியும் என்று நாங்களே உணர்ந்ததால்தான் இயக்கத்தில் சேர்ந்தோம்’’ என்றார்கள். ‘‘பாரதத்துப் பாரதியால் பாட்டில் மட்டுமே காட்ட முடிந்த புதுமைப் பெண்ணை, எங்கள் தலைவர்காட்டிலே உருவாக்கி களத்திலே காட்டிவிட்டார்’’ என்று கவிதை பாடிய காப்டன் கஸ்தூரியின் வீரச் சாவைப் பற்றி உணர்ச்சி பொங்கப் பேசினார்கள். நான் அவர்களுடன் உரையாடியபோது, அதை ஒரு பெண் புலி வீடியோ படமாக்குவதைக் கவனித்தேன். அது நிச்சயம் தலைவரின் பார்வைக்கு என்று புரிந்தது.
நானோ, தலைவரைச் சந்திக்க பிரம்ம பிரயத்தன முயற்சிகளில் இருந்தேன். கடைசியில் சமிக்ஞைகள் கிடைத்தன.
*****
குற்றங்களும் நியாயங்களும் - வாஸந்தி
அசல் பதிவின் சுட்டி :: நன்றி - குமுதம் தீராநதி
கவிஞர் புதுவை ரத்தினதுரை இயற்றிய புலிகளைப் போற்றும் பாடல்கள் யாழ்ப்பாணத்து வீதிகளில் சதா எதிரொலித்துக் கொண்டேயிருந்தன. ‘‘கடலில் புலிகள் தலைவன் வழியில்’’ என்ற, காலையிலிருந்து காதில் விழுந்துகொண்டேயிருந்த பாடலை, மாலையில் நானே முணுமுணுக்க ஆரம்பித்திருந்தேன். ரத்தினதுரை புலிகளின் ஆஸ்தான கவிஞர். அவர்களது பத்திரிகை தொடர்புப் பணிகளையும் அவர் கவனித்து வந்தார். அவரை பல முறை தொடர்பு கொண்டு, விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனை, நான் சந்திக்க விரும்புவதாகக் கோரிக்கை விடுத்திருந்தேன். அவரிடமிருந்து சுலபத்தில் தகவல் வரவில்லை. மெல்ல மெல்ல காய்கள் நகர்த்தப்படுவதுபோல, அதற்கான தயாரிப்பில் சில சக்திகள் ஈடுபட்டது போல, ஒரு அமானுஷ்ய உணர்வு எனக்கு ஏற்பட்டது.
விடுதலைப் புலிகளின் தினசரி பத்திரிகையான ‘ஈழ நாத’த்தின் நிருபர்கள் நிமால், சசிகரன் இரு இளைஞர்களும் என்னை சந்திக்க வந்தார்கள். அன்றாட வாழ்வில் யாழ்ப்பாணவாசிகள் படும் சிரமங்களைப் பற்றிச் சொன்னார்கள். ‘‘கொழும்பில் புதிய அரசாங்கம் வந்திருக்கிறதே, சமாதானம் வரும், மாற்றம் வரும் என்ற நம்பிக்கை இருக்கிறதா’’ என்று கேட்டேன். ‘‘சந்தேகங்கள், நம்பிக்கையைவிட அதிகமாயிருக்கு. ஏனென்றால் நாங்கள் தொடர்ந்து ஏமாற்றப்பட்டு வரும் சமூகம்’’ என்றார்கள். புலிகள், தங்களுடைய சாகஸத்தால், ஸ்ரீலங்கா ராணுவத்தைக் கட்டுப்படுத்தியவர்கள் என்ற விஷயம், மக்களிடையே ஏற்படுத்தியிருந்த பிரமிப்பு, பெரியவர்களிடமிருந்து சிறியவர்கள் வரை, அவர்களது பேச்சில் வெளிப்பட்டது. ஒவ்வொரு குடும்பத்திலும் யாராவது ஒருவர் இயக்கத்துடன் சம்பந்தப்பட்டிருந்தது அனைவரையும் பிணைத்தது; அவர்களது வாயையும் கட்டிப்போட்டது. ஆனால் அவர்கள் களைத்திருந்தார்கள். ‘‘எல்லாரும் சமாதானத்தை எதிர்நோக்கி இருக்கிறார்கள்’’ என்றார் யாழ்ப்பாண பல்கலைக்கழகத் துணைவேந்தர் குணரத்தினம். மாணவர்களது கண்களில் சஞ்சலம் தேங்கி நின்றது. ‘‘கனவுகள் எங்களுக்கு நிறைய இருக்கு. ஆனால் அவை நிறைவேறுமா என்கிறதுக்கு உத்தரவாதமில்லே’’ என்றனர் அவர்கள்.
அசாதாரண காலகட்டத்தை, புலிகள் தங்கள் பொருண்மீய திட்டங்களினால் திறமையாக சமாளித்து வந்ததை, அதன் இயக்குனர், இளைஞர் ரவி அலுவலகத்தைச் சுற்றிக்காட்டி உத்வேகத்துடன் விளக்கினார். பல இளம் புலிகள், பிரபாகரனை ‘‘அம்மா, அப்பாவை விட அதிகமா மதிக்கிறோம். ‘‘அவரது வழிகாட்டலில் நாடு விடுதலை அடைஞ்சு, சுபிட்சமா இருக்கப் போகிறோம் என்கிற நம்பிக்கை இருக்கு" என்றார்கள். பலருக்குப் பால் மணம் மாறாத முகங்கள். வலிகாமத்தில் உள்ள 'மாவீரர் துயிலும் இல்லத்'துக்கு என்னை அழைத்துச் சென்றார்கள். மனத்தை உலுக்கிவிட்டது, அங்கு எதிரில் விரிந்த காட்சி. கண்ணுக்கெட்டிய தூரம் வரை போரில் உயிர் துறந்த வீரர்களின் 1362 கல்லறைகள். அதைப் போல் இன்னும் இரு இல்லங்கள் இருப்பதாகச் சொன்னார்கள்.
மிகவும் கலங்கிப் போன நிலையில் நான் இருக்கையில், ரத்தினதுரையிடமிருந்து சேதி வந்தது. பிரபாகரனுக்கு அடுத்தபடியாக சக்திவாய்ந்தவர்கள் என்று கருதப்பட்ட, ஆன்டன் பாலசிங்கமும் தமிழ்ச் செல்வனும் என்னை அவர்களது அலுவலகத்தில் சந்திப்பார்கள் என்று. குறித்த நேரத்துக்கு புலிகளின் கார் ஒன்று வந்து என்னை அழைத்துச் சென்றது. அது நல்ல பாதுகாப்பான, உறுதியான கட்டிடம். யாழ்ப்பாணத்தில் எங்கும் நான் பார்க்காத மின்சாரம் அங்கு இருந்தது. மேலே மின்விசிறி சுழல, ஒரு சிறிய அறையில், வட்ட மேஜையைச் சுற்றி நாங்கள் மூவரும் அமர்ந்தோம். தமிழ்ச்செல்வன் நான் எதிர்பார்த்ததைவிட இளைஞராக இருந்தார். சுலபமாகச் சிரித்தார். என்னுடைய எழுத்தையெல்லாம் தாம் வாசித்திருப்பதாகவும் நான் இலங்கைத் தமிழர் போராட்டத்தைப் பற்றின நாவல் எழுதும் வரை என் மீது மிகுந்த மதிப்பு வைத்திருந்ததாகவும் சொன்னார். பேசும்போது சிரித்துக் கொண்டே அவர் பேசியது மிகக் கவர்ச்சியாக இருந்தது. எதிரிகளை சுடும்போதும் சிரித்துக் கொண்டே செய்வார் என்று தோன்றிற்று. பாலசிங்கம்தான் சற்று இறுக்கத்துடன் என்னை எடை போடுபவர் போல் தெரிந்தார்.
எத்தகைய நியாயமான போராட்டமாக இருந்தாலும் வன்முறையை நான் எதிர்ப்பவள். அதனால் ரணம் தான் மிஞ்சுமே தவிர சாதகம் இல்லை என்று நினைப்பவள். சொந்த இனத்தவரையும் ஒழிக்க முற்படும் சகிப்புத்தன்மையற்ற போக்கு, மானுடத்துக்கு எதிரான அசுரத்தனம் என்று நம்புபவள். இந்த எனது நம்பிக்கையே எனது நாவலில் புலிகளைப்பற்றின விமர்சனமாகப் பிரதிபலித்தது. தமிழ்ச்செல்வனே தனது கருத்தை விளக்கட்டும் என்று நான் பேசாமல் இருந்தேன். ‘‘தியாகி கிட்டு மற்றும் தியாகி திலீபன் மரணங்களை நீங்கள் மிகவும் கொச்சைப்படுத்திவிட்டீர்கள். எங்கள் நோக்கங்களைப் புரிந்து கொள்ளாமல் எழுதிவிட்டீர்கள்’’ என்றார். ‘‘என் கருத்து தவறாக இருந்தால் அடுத்த புத்தகத்தில் திருத்தி எழுதி விடுகிறேன்" என்றேன் சிரித்தபடி. ‘‘திறந்த மனத்துடன் யாழ்ப்பாணத்துக்கு வந்திருக்கிறேன்; உங்கள் தலைவரை நேரில் காணும் எதிர்பார்ப்புடன். அவரையும் உங்கள் இயக்கத்தையும் சரியாகப் புரிந்துகொள்ளும் ஆவலுடன்’’ என்றேன். அதைத் தொடர்ந்து, ஆன்டன் பாலசிங்கம் கிட்டத்தட்ட அரைமணிநேரம் இந்திய அரசும் தமிழகமும் இந்தியப் பத்திரிகைகளும் தங்களைத் தவறாகப் புரிந்து கொண்டிருப்பதாகவும், தங்களைப் பயங்கரவாதிகளாகச் சித்தரிப்பதாகவும், அது தங்களுக்கு வருத்தத்தை அளிப்பதாகவும் சொன்னார். ‘‘இந்தியா விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நாங்கள்தான் இங்கு மக்களுடைய போராட்ட சக்தி. இந்தப் பிரதேசமே எங்க கட்டுப்பாட்டிலே இருக்கு’’ என்றார் காட்டமாக.
அதைப் பற்றி எனக்கு சந்தேகமிருக்கவில்லை. "ராஜீவ் காந்தி படுகொலை ஒட்டுமொத்த இந்திய மக்களை உலுக்கிவிட்டது. இந்திய நிலைப்பாட்டிற்கு அதுதான் காரணம்" என்று என்னால் சொல்லாமல் இருக்கமுடியவில்லை.
"எந்த அரசியல் கொலை நடந்திருந்தாலும் எங்களை சம்பந்தப்படுத்துகிறார்கள். அதற்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை. இந்திய ராணுவம் இங்க செஞ்ச அட்டூழியத்தின் எதிர் விளைவா சிலது நடந்திருக்கலாம்" என்றார் பாலசிங்கம்.
காதில் பூ சுத்துவதுபோல் இருந்தது எனக்கு. "உங்களுக்கு அதில் சம்பந்தமில்லையா?" என்றேன். ஒலிநாடா ஓடிக்கொண்டிருந்தது. பாலசிங்கம் இல்லை என்னும் பொருள்பட தலையை மட்டும் அசைத்தார். அந்தக் கட்டிடத்திலேயே பிரபாகரன் எங்கேயோ உட்கார்ந்தபடி எங்கள் உரையாடலைக் கேட்கிறார் என்று எனக்குத் தோன்றிற்று. நான் பேச்சை மாற்ற எண்ணி, சந்திரிகாவின் வரவைப் பற்றி அவர்கள் கருத்தைக் கேட்டேன்.
"பெரிய நம்பிக்கை தோன்றியிருக்கு" என்றார் பாலசிங்கம் தெளிவாக. "படிச்சவர், முற்போக்கு எண்ணம் கொண்டவர், புலிகளோடு பேசினாத்தான் தமிழ் மக்களுடைய பிரச்னையைத் தீர்க்கலாம் என்ற யதார்த்தமான பார்வை இருக்கு."
"நீங்கள் பேசத் தயாரா?"
"நாங்கள் நல்ல சமிக்ஞை கொடுத்திருக்கோம். நிபந்தனையற்ற பேச்சுவார்த்தையிலே பங்கு கொள்வோம்."
"உங்கள் தமிழ் ஈழக் கோரிக்கை?"
"வைக்கப் போவதில்லை!"
இது ஆச்சரியமாக இருந்தது. "கைவிட்டு விட்டீர்களா?" என்றேன் வியப்புடன்.
"ஈழத்துக்கு மாற்றுத் திட்டமாக வடக்கும் கிழக்கும் இணைந்து, ஒரு பூரணமான மாநில சுயாட்சி சமஷ்டி அடிப்படையிலே ஏதாவது ஒரு தீர்ப்பு ஏற்படணும் என்று ஏற்கெனவே சொல்லியிருக்கோம். ஆனால் போர் நிறுத்தம், முழுமையாக பொருளாதார தடை நீக்கம் எல்லாம் வந்தால்தான் சமரசப் பேச்சு சாத்தியம். பேச்சுவார்த்தை முறிந்தால் அதற்கு நிச்சயம் புலிகள் காரணமாக இருக்கமாட்டார்கள்."
"உங்கள் பேச்சுக்களில் மற்ற தமிழ்க் கட்சிகளுக்குப் பங்கு இருக்குமா?"
"அவை கட்சிகள் இல்லை" என்றார் பாலசிங்கம்" ‘வெறும் ஆயுதக் குழுக்கள். ஆனா முஸ்லிம் மக்களுடைய பிரதிநிதிகளாக ஷிலிவிசியைப் பார்க்கிறோம். எங்களுடைய பிரச்னையிலே முஸ்லிம் மக்களுடையதும் அடங்கியிருக்கு."
ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டதன் நினைவில் நான் மௌனம் காக்கையில், பாலசிங்கம் தொடர்ந்தார். "பழசை மறந்து இணக்கமா வாழணும்னு விரும்பறோம்".
என்னுள் நெருடும் சந்தேகத்தைக் கேட்கிறேன். "ஜனநாயக நீரோட்டத்துக்கு புலிகள் எப்போது வருவார்கள்?"
"இனப் பிரச்னை அரசியல் ரீதியாக தீர்க்கப்படணும். அரசியல் கட்டமைப்பு உருவாகணும். அதற்குப் பிறகுதான் ஜனநாயக முறைக்குச் செல்ல முடியும்."
"தமிழ் மக்களின் விருப்பம் என்னவாக இருக்கும்?"
"மக்களும் புலிகளும் வேறு வேறு அல்ல" என்றார் தமிழ்ச்செல்வன், மாறாத சிரிப்புடன்.
"பிரபாகரன் ஏன் வெளியில் வருவதில்லை?"
"அவர் அரசியல்வாதி இல்லே. மக்களுக்காக ஓய்வில்லாமல் செயல்படுபவர். அதற்கு விளம்பரம் தேவையில்லை".
"அவரை நான் சந்திக்கணும். இளைஞர்களிடம் அவருடைய வசீகரம் ஏற்படுத்தும் மாற்றம் ஆச்சரியமானது. நேரில் காண ஆசைப்படுகிறேன்."
பாலசிங்கம் மழுப்பலாகச் சிரித்தார். "அவரை நேரில் கண்டா ஒரு ‘ப்ராஸிக்யூஷன்’ வக்கீலைப் போல் கேள்வி கேட்பீர்களே?"
எனக்கு ஏமாற்றமாக இருந்தது. "உங்கள் நாவலைப் படித்ததில் அவருக்கு நிரம்ப வருத்தம்" என்றார் தமிழ்ச் செல்வன்.
"நேரில் சந்தித்தால் என் எண்ணங்களை மாற்றிக்கொள்ள சந்தர்ப்பம் கிடைக்கும்" என்றேன்.
"நீங்கள் இந்தியா திரும்பிய பிறகு எங்களைப் பற்றி என்ன எழுதுகிறீர்கள் என்பதைப் பொறுத்து இருக்கும் அது." அதே சிரிப்புடன் வந்தது பதில்.
"உங்கள் வேண்டுகோளைத் தெரிவிக்கிறோம். சம்மதித்தால் சொல்லி அனுப்புவோம்" என்றார் பாலசிங்கம்.
இரண்டுநாள் கழித்து, 'பிரபாகரனுக்கு என்னை சந்திக்க நேரமில்லை' என்ற தகவல் வந்தபோது எனக்கு வியப்பேற்படவில்லை. யாழ்ப்பாணத்தில் நான் கால் வைத்த அடுத்த இருதினங்களில் ‘பிபிஸி’ ஆனந்தி வந்து சேர்ந்திருந்தார். புலிகளுக்கு இணக்கமான அவருக்கு பிரபாகரன் விரிவான ஒரு பேட்டி அளித்தார். நான் இந்தியா திரும்புகையில் அது தினமணியில் ஏக விளம்பரத்துடன் பிரசுரமாயிற்று; எனது தோல்வியைச் சுட்டிக்காட்டுவதுபோல. பிரபாகரனை நான் நேரில் சந்திக்காவிட்டாலும், யாழ்ப்பாண விஜயத்தில் எனக்கு ஏற்பட்ட அனுபவங்களும், கிடைத்த தரிசனங்களும் மிக முக்கியமானவை, என்னுடைய சந்தேகங்கள் எல்லாம் ஊர்ஜிதமாயின. யாழ்ப்பாணத்தில் எழுபது சதவிகிதத்துக்கு மேற்பட்ட மக்களை புலிகள் உடல் ரீதியாகவும் உணர்வு ரீதியாகவும் கட்டுப்படுத்தி வைத்திருந்தது ஒரு திட்டமிட்ட சாதனையாகத் தோன்றிற்று. அவர்களது ராணுவ பலமும், எதிர்ப்பவர் தமிழரானாலும் துரோகிகள் என்று முத்திரை குத்தப்பட்டு கொலை செய்யப்படுவதும், மக்களை விநோதமான மனநிலைக்கு ஆளாக்கியிருந்தது. கண்டும் பதைத்தும், வாய் திறக்கும் திறனை இழந்ததோடு, புலிகள் செய்வதில் ஒரு நியாயம் இருப்பதாகக்கூட நினைக்கும் நிலைக்கு மக்கள் உட்பட்டிருந்தார்கள். புலிகளின் பார்வையும் செவியும் எங்கும் வியாபித்தன. அவர்களுடைய அனுமதியில்லாமல் யாரும் யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேற முடியாது. பலரின் வீடுகள், நிலங்கள் கைப்பற்றப்பட்டன. வெளிநாட்டில் குடியேற நினைத்தவர்கள், பல லட்சங்கள் இயக்கத்துக்குக் கொடுத்தால்தான் செல்ல முடியும். கொழும்பில் பாதிக் குடும்பமும் யாழ்ப்பாணத்தில் பாதிக் குடும்பமுமாக அல்லல்பட்டவர்கள் ஏராளம். இரவோடு இரவாகப் பல முஸ்லிம்கள் துரத்தப்பட்டதைப் பல தமிழர்களால் ஏற்க முடியவில்லை. பீதியுடன் அக்கம் பக்கம் பார்த்து ஒருவர் சொன்னார். "இவங்களை விட்டா இப்ப எங்களுக்கு வேற வழியில்லே என்கிற காரணத்தாலே பேசாம இருக்கோம்."
அதனாலேயெ சட்டம் ஒழுங்குப் பிரச்னை இல்லை. புகை பிடிப்பவர், சாராயம் அருந்துபவர் இல்லை. விபச்சாரம் இல்லை. திருட்டு இல்லை. மின்சாரமில்லாத யாழ்ப்பாணத்தில், நான் தங்கியிருந்த சுபாஷ் ஹோட்டலின் மற்ற முப்பத்தொன்பது அறைகள் காலியாக இருந்த நிலையில், கதவுகள் ஜன்னல்கள் அனைத்தையும் திறந்து வைத்து நான் ஒருத்தியாக இரவுகளைக் கழிக்க முடிந்தது. ஆனால் உறக்கம் கொள்ளவில்லை. ஒரு கற்பனைக் கதையின் ஏட்டைப் பிரித்து அதில் நிற்பதுபோல் இருந்தது எனக்கு. இன்னும் ஒருநாள் அங்கு இருந்தாலும் மூச்சு முட்டிவிடும் என்று தோன்றிற்று. மீண்டும் கிளாலி வழியாகப் பயணம் என்கிற நினைப்பே நடுக்கத்தைத் தந்தது. ‘ரெட் க்ராஸ்’ கப்பல் ஒன்று பருத்தித்துறைக்குக் கிளம்புவதாகவும் அதில் ஏறி அதிர்ஷ்டமிருந்தால் பலாலியில் ஸ்ரீலங்கா ராணுவ விமானத்தில் இடம் பிடித்து கொழும்பு செல்லலாம் என்ற சேதி கிடைத்ததும் கிளம்பிவிட்டேன்.
ராணுவத் தாக்குதலால் இடுகாடு போல் காட்சியளித்த காங்கேசன் துறை இன்னமும் கண்ணில் நிற்கிறது. கொழும்பில் பேராசிரியர் கா. சிவத்தம்பி காலை உணவிற்கு என்னை அழைத்து உபசரித்தது நேற்று போல் இருக்கிறது. ‘‘சமாதானம் வருவதில் நிறைய சிரமங்கள் இருப்பதை நான் உணர்கிறேன்’’ என்றார் சிவத்தம்பி. ‘‘நீண்ட காலமாக நடந்த போரில் இலக்கு புலிகள் என்றாலும் அடிபட்டது பொதுமக்கள். சமாதானப் பேச்சில் புலிகளுக்கு என்ன வேண்டும் என்பது பிரச்னையில்லை. இந்த நாட்டின் அரசியல் சட்ட சாஸனத்தில் தமிழர்களின் நிலை என்ன என்பதுதான் கேள்வி.’’
உள்ளத்தில் எதிர்காலத்தைப் பற்றி எத்தனையோ கலக்கம் இருந்தாலும், அவரும் அவரது மனைவியும் காட்டிய அன்பும் விருந்தோம்பலும் ஆயுளுக்கும் மறக்காது. நான் கிளம்பும்போது அவரது மனைவி மாடியிலிருந்து என்னுடன் கீழ் இறங்கினார். என் கைகளைப் பற்றி பொலபொலவென்று கண்ணீர் உகுத்தார். ‘‘யாழ்ப்பாணத்துக்குப் போக இயலாது. வயசுப் பெண்ணையோ மகனையோ அங்க அனுப்ப இயலாது. ஏனெண்டா அங்கு போனா அவன்களாலெ திரும்பி வர இயலாது. விடிவு காலம் எப்ப வருமோ ஈசுவரா எண்டு இருக்கு.’’ எனக்கு அடிவயிற்றைக் கலக்கிற்று. யாருடனும் பகிர்ந்துகொள்ள முடியாத தன் துயரத்தை என்னிடம் இறக்கிவிட்ட நிம்மதியில் அவர் எனக்கு விடைகொடுத்த காட்சி, இன்னும் கனமாக இதயத்துள் அமர்ந்திருக்கிறது.