<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d20242795\x26blogName\x3d%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLACK\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://mugamoodireader.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://mugamoodireader.blogspot.com/\x26vt\x3d1499038088815249401', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

என் நூலகம்

இது என் ரசனையின் பத்தாயம். படைப்பாளிகளே எழுத்தின் உரிமையாளர்கள். சேமிப்பில் ஏதும் ஆட்சேபம் இருப்பின் செய்து அறியத்தரவும்.

 

நீர்த்துப்போன கொள்கைகள் - வாஸந்தி


அசல் பதிவுக்கான சுட்டி. நன்றி: தீராநதி.

*

முழுநேர பத்திரிகையாளராக தமிழ் நாட்டில் பணியாற்றியபோது, என் பார்வையில், தமிழ் நாட்டுக்கே உரிய சில அம்சங்கள் இருப்பதாகத் தோன்றின. கொள்கை ரீதியாக அரசியல் கட்சிகள் முன்வைக்கும் சில கோட்பாடுகளுக்கும், சாமான்ய குடிமகனின் எதிர்பார்ப்புகளுக்கும் ஏதும் சம்பந்தமில்லை என்பது தெரிந்தது. எனக்கு இது விசித்திரமாக இருந்தது. அடிப்படை விஷயங்களைவிட காலாவதியான சில பிரமைகளை, அவை தமிழனின் வாழ்வுக்கும் சாவுக்குமான பிரச்னை போல, மிக உணர்ச்சி வேகத்துடன் தலைவர்கள் பொது மேடைகளில் பேசுவதைக் கேட்க, எனக்கு வியப்பாக இருக்கும். தொலைவுகள் சுருங்கிப் போனதையும், தொழில் நுட்பங்களும் வேலை வாய்ப்புகளும் பூகோள வரைகோடுகளை அர்த்தமற்றதாக்கிவிட்டதையும், வாழ்வின் ஆதார முக்கியத்துவங்கள் வெகுவாக மாறிவருவதையும், இறக்கை முளைத்து பறக்க ஆசைப்படும் தமிழனை ஒரு இனத்தின் கலாசார எல்லைக்குள் இனி கட்டிப்போடமுடியாது என்பதையும், உணரமுடியாத சிந்தனைத் தேக்கத்தில் அவர்கள் இருப்பார்களோ என்றும் கேள்வி எழும். அவற்றிற்குப் பின்னால் இருக்கும் அரசியல் என்ன என்று சிந்திக்க வைக்கும். அது யாருக்கோ நிகழ்த்தப்படும் ஒரு நிழலாட்டம்போலத் தோன்றும். அது யார் என்பது விளங்காத புதிராக இருக்கும்.

தமிழ் மொழியும் இலங்கைத் தமிழர் பிரச்னையும் இந்த நிழலாட்டத்தில் அடிக்கடி பந்தாடப்படும் விஷயங்கள். சென்ற நூற்றாண்டின் அறுபதுகளில் நடந்த ஹிந்தி எதிர்ப்புப் போராட்ட காலத்திற்குப் பின், தமிழ் மொழிக்காகப் போர் தொடுக்கவேண்டிய அவசியம் மறைந்து போனது. ஆனாலும், தமிழ்ப் பற்றைப் புதுப்பிக்கவேண்டிய அவசியத்தில் தாங்கள் இருப்பதாக, திராவிடத் தோன்றல்களுக்கு அடிக்கடி பீதி ஏற்படுகிறது. மாணவர்களின் கவனம், காலத்தின் கட்டாயத்தால் தமிழுக்குப் பதில் ஆங்கிலத்திற்குத் திரும்பியது தங்களது தோல்வி என்று அவர்களுக்கு உறுத்துகிறதோ என்னவோ? அவ்வப்போது பொது மேடைகளில் தங்களது தமிழ்ப்பற்றைப் பறைசாற்றுவதும், உண்மைத் தமிழன் யார் என்ற கேள்வியை எழுப்புவதும், ஸான்கோபான்ஸா, வெட்டவெளியில் சுழலும் காற்றாடிகளுடன் சண்டைபோடக் கிளம்பிய காட்சிகளை எனக்கு நினைவூட்டும். வாக்காளர் எவருக்குமே, மொழி என்பது ஜீவ மரணப் போராட்டத்தின் அடையாளம் அல்ல இப்போது. பின் இவர்கள் யாருடைய திருப்திக்காக தமிழ் 'உணர்வை' உசுப்பிவிடும் பணியில் இடையிடையில் ஈடுபடுகிறார்கள்? உண்மையில் முன்னெப்போதும் இல்லாதவகையில் இப்போதுதான் தமிழ் படிப்பவர்களும், மிக நுணுக்கமான, நுட்பமான அணுகலுடனும் புதிய சொல்லாடல்களுடனும் தமிழில் எழுதுபவர்களும் அதிகரித்திருக்கிறார்கள் என்பதை யாரும் மறுக்கமுடியாது. முன்னெப்போதும் இல்லாத அளவுக்குத் தரமான நூல் வெளியீடுகளும் வெளியிடும் பதிப்பகங்களும் அதிகரித்திருக்கின்றன. இந்நிலையில் தமிழுக்கு எங்கிருந்து வரும் ஆபத்து?

மற்ற மொழிகளின் சேர்க்கையால் ஒரு மொழிக்கு ஆபத்து என்கிற சரித்திரம் எங்கும் இல்லை. ஆனால் தமிழுக்கு ஆபத்து என்கிற நாடகம் விடாமல், அவ்வப்போது அரசியல் காரணங்களுக்காக நடத்தப்படுகிறது. இது ஒரு நாடகம் என்பது பொதுமக்களுக்கும் தெரியும் என்பதுதான் வேடிக்கை. ஆனால் இத்துடன் எந்த வகையிலோ சம்பந்தப்பட்ட இலங்கைத் தமிழர்ப் பிரச்னை அதிக சிக்கலானது. அது நமது திராவிடக் கட்சிகளுக்கு ஜனன காலத்திலிருந்து இருந்து வரும் அதீத ஈடுபாடு. இதில் அதிக ஆழமாகக் காலை நுழைத்திருப்பவர் வைகோ. என்ற வை.கோபால்சாமி. இதன் நேரடிப் பரிச்சயம் எனது இலங்கைப் பயணத்திற்கு முன்பே ஏற்பட்டது.

1993ஆம் ஆண்டு, நவம்பர் மாதம் திடீரென்று சென்னை முழுவதும் அந்தச் செய்தி காட்டுத் தீயாகப் பரவியது. வை.கோ., திராவிடக் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார் என்பதுதான் அந்த செய்தி. எதிர்பார்க்கப்பட்டதுதான் என்றாலும், செய்தி கேட்டு, மூன்று கட்சித் தொண்டர்களும், இளைஞர்களும் தீக்குளித்தனர். இதில் இருவர் மாண்டார்கள். தி.மு.க. தலைவர் கருணாநிதி, பத்திரிகையாளர்களை அழைத்து ஒரு திடுக்கிடும் செய்தியைச் சொன்னார். தி.மு.க.வில் ஒரு புதிய தலைமைக்கு, அவர்களுக்கு இணக்கமான வை.கோ.வுக்கு வழிவகுக்க, கருணாநிதியைக் கொலை செய்ய எல்.டி.டி.ஈ. திட்டமிட்டிருப்பதாக இந்தியப் புலனாய்வுத்துறைக்குத் தகவல் கிடைத்தது என்று சொல்லப்பட்டது. அப்படியாக அதனிடமிருந்து தனக்குச் செய்தி வந்திருப்பதாக கருணாநிதி சந்திப்பில் தெரிவித்தார். வை.கோ. காணாமல் போனார். பிறகு கொஞ்ச நாட்களாக தலைமறைவாகி இருந்தார். அதோடு மறைவிடத்திலிருந்து அறிக்கை விட்டுக்கொண்டிருந்தார். ‘தன்னை கட்சியிலிருந்து விலக்குவதற்காக நடக்கும் சதி இது’ என்றார். அவரை ‘இந்தியா டுடே’வுக்கு பேட்டி காண நான் முயற்சித்துக் கொண்டிருந்தேன். எனது நெடு நாளைய நண்பரும், வை.கோ.வுக்கு வலது கரம்போல் நெருக்கமாகவும் விசுவாசத்துடனும் இருந்த கே.எஸ். ராதாகிருஷ்ணன் ஒரு ரகசிய சந்திப்புக்கு ஏற்பாடு செய்தார். இரவு பத்து மணிக்கு மேல், நானும் ஆங்கிலப் பதிப்பின் பிரகாஷ் சுவாமியும் அந்த மறைவிடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டோம்.

வை.கோ. மிகவும் பதட்டமாகக் காணப்பட்டார். பேட்டி முழுவதும் என் பக்கமே திரும்பவில்லை. எனது கேள்விகளுக்கும் ப்ரகாஷ் சுவாமியைப் பார்த்து பதிலளித்தது எனக்கு விநோதமாக இருந்தது. அப்போது நான் தமிழ்நாட்டுக்கு வந்து சில மாதங்களே ஆகியிருந்தன. தமிழ் அரசியல்வாதிகளின் உணர்ச்சிமிகுந்த தாபப் பேச்சும் எனக்கு அதுவரை பழக்கமில்லாதது. நிலப் பிரபுத்துவ காலத்துக்குச் சென்றதுபோல இருந்தது. "நான் ஒரு தொண்டன் மட்டுமே. கலைஞர்மேல் உயிரை வைத்திருப்பவன். அவரது நிரந்தர விசுவாசி. எங்கு சென்றாலும் என்னை நான் முன் நிறுத்திக் கொண்டதில்லை. கலைஞரின் சார்பாக வந்திருக்கிறேன் என்றுதான் சொல்வேன்" என்றார் வை.கோ.

வை.கோ.வை நான் சந்தித்தபோது கட்சியிலிருந்து நீக்கப்பட்டதைவிட, மத்தியப் புலனாய்வுத்துறை, புலிகள் பற்றின செய்தியை பகிரங்கப்படுத்தியதுதான், அவருக்கு அதிக சங்கடத்தைக் கொடுத்ததாகத் தோன்றிற்று. ‘‘புலிகளுக்கும் உங்களுக்கும் தொடர்பு இல்லையா? என்றேன்.

‘‘இல்லவே இல்லை’’ என்று வை.கோ. மறுத்தார். ‘‘எனக்கு அந்த விஷயத்தைப் பத்தி எதுவும் தெரியாது. கலைஞருக்காக என் உயிரையும் கொடுக்க சித்தமாயிருக்கேன்’’ என்றார், திரும்பத் திரும்ப. ‘‘கலைஞர் என்னைத்தானே தன் உறை வாள் என்று சொல்வார்?’’ என்றார்.

அவரது தாபத்தை செவிமடுக்கும் மனநிலையில் கலைஞர் இருக்கவில்லை என்பது விரைவில் வெளிப்பட்டது. முரசொலியில் கலைஞர் சளைக்காமல் பதில் அளித்தார். ‘ஒரு உறையில் இரண்டு வாள்கள் இருக்கமுடியாது.’ அதற்கு மறு மொழியாக வை.கோ. வெடித்தார்: ‘கருணாநிதி இனி என் தலைவர் இல்லை!’ கட்சியிலிருந்து நீக்கப்பட்டதும், ‘தான்தான் உண்மையான தி.மு.க.வின் பிரதிநிதி’ என்றார் வை.கோ. தன்னை கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என்கிற காரணத்துக்காகவே தன் மீது பழி சுமத்தப்பட்டிருப்பதாகச் சொன்னார்.

கருணாநிதியைப் பேட்டி காணும் தருணம் இது என்று நான் தயாரானேன். ஆச்சரியமாக கருணாநிதி உடனடியாகப் பேச சம்மதித்தார். அவரது கோபாலபுரம் இல்லத்திற்கு காலை ஒன்பது மணிக்குச் சென்றபோது, நான்கைந்து கட்சிக்காரர்கள் இறுக்கமான முகத்துடன் அமர்ந்திருந்தார்கள். குறுகலான மாடிப்படிகளைக் கடந்து கலைஞரைச் சந்திக்கச் செல்லும்போது, யாரோ, ‘‘முதுகிலெ குத்தினமாதிரி’’ என்று சொல்வது கேட்டது.

கருணாநிதி அமைதியாகக் காணப்பட்டார். ஆனால் பேசும்போது, கவலையோ, பீதியோ, ஏதோ ஒன்று அவரது கண்களில் நிழலாடியதாகத் தோன்றிற்று. பத்திரிகை உலகத்தில் அவரது கவலைகளைப் பற்றிப் பலவிதமான அலசல்கள் இருந்தன. ‘வை.கோ.வின் அதிகரித்துவரும் செல்வாக்கு அவரை அச்சுறுத்துகிறது; தமக்குப் பின் தனது மகன் ஸ்டாலினைப் பொறுப்பேற்கத் தயாரித்து வருபவருக்கு, வை.கோ. ஒரு நீக்கப்படவேண்டிய முட்டுக்கட்டையாகிப் போனார்’ என்று பரவலாகக் கருதப்பட்டது.

கருணாநிதியுடன் நடந்த அந்த நீண்ட பேட்டியின்போது ஒன்று தெளிவாயிற்று. ‘வை.கோ.வின் செல்வாக்கு, ஸ்டாலினின் எதிர்காலத்துக்கு அச்சுறுத்தல்’ என்ற உண்மையான கவலை அவருக்கு இருக்கக்கூடும். ஆனால் வைகோ.வை வெளியேற்ற வேண்டுமென்றே, புலனாய்வுத்துறையின் செய்தி முகாந்திரமாக உபயோகிக்கப்பட்டதாகத் தோன்றவில்லை. அவர் உண்மையிலேயே பீதியில் துவண்டிருந்தார்; ஊழ்வினையை நேரில் சந்தித்த அதிர்ச்சியில் இருப்பவர்போல.

‘‘ஆமாம், வை.கோ.வை என் உறைவாள்னு சொல்லியிருக்கேன். ஆனால் என் நல்லெண்ணத்தை அவர் பயன்படுத்திக்கொண்டு, இரண்டு வருஷமா தலைமைப் பதவியைப் பிடிக்கிற முயற்சியில் இருக்கார். 1989இலே, தி.மு.க. ஆட்சியிலே இருக்கிறப்ப, கட்சிக் கட்டுப்பாட்டுக்குப் புறம்பா, எங்கிட்ட சொல்லாம கொள்ளாம, பிரபாகரனைச் சந்திக்க சிலோனுக்குப் போனார். இது விஷயமா அவரை நான் கடுமையா கண்டிச்சேன். அப்பவே கட்சியிலேந்து அவரை நீக்கியிருக்கணும். அது பண்ணாதது தப்புதான். ஆனா, மன்னிச்சுக்குங்க! மன்னிச்சுக்குங்கன்னு திரும்பத் திரும்பச் சொன்னார். அதுக்குப் பிறகும் அநேகத் தப்புகளுக்கு மன்னிக்கச் சொல்லிக் கேட்பார். உண்மையைச் சொல்றேன், ராஜீவ்காந்தி படுகொலைக்குப் பிறகு கட்சிலே ரொம்பத் தெளிவான முடிவெடுத்தோம். இலங்கைத் தமிழர்களுக்கு ஈழம் கிடைச்சா சந்தோஷப்படுவோம்; ஆனா, தமிழ் ஈழத்துக்கு ஆதரவா கோஷம் போடமாட்டோம்னு. ஆனா, இந்த ஆள் தொடர்ந்து கட்சிக்கு சங்கடத்தை ஏற்படுத்தறார். வெளிப்படையாக தமிழ் ஈழத்துக்கு ஆதரவா, தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு ஆதரவா பேசறார். கடந்த ஓராண்டு காலமா என் தலைமைக்குப் பதிலா வை.கோ.வுடைய தலைமை வந்தா நல்லதுன்னு கனடாவுலே, பாரிஸ்ஸிலெ, யாழ்பாணத்திலெ, எல்.டி.டி.ஈ.யுடைய பிரச்சாரம் பத்திரிகை மூலமாவும் வலைத்தளங்கள்ளேயும் நடப்பது எனக்குத் தெரிஞ்சிருக்கல்லே; சிஙிமிலேந்து தகவல் வர்ற வரைக்கும்.’’

அவரது பேச்சை எனது ஒலி நாடா பதிவு செய்கையில், அவரது உதவியாளர் சண்முகநாதன், விறுவிறுவென்று தனது கையேட்டில் குறித்துக்கொண்டிருந்தார். பலவித பத்திரிகை கட்டிங்குகள், குறிப்புகள் தயாராக மேஜையில் வைக்கப்பட்டிருந்தன. ‘‘தகவல் கிடைச்சதும் வை.கோ.வை நேரிடையாக விளக்கம் கேட்டிருக்கலாமே’’ என்றேன். '‘‘பத்திரிகையாளர் கூட்டம் ஏன்?’’

‘‘சிஙிமி தகவல் ‘கோபால்சாமிக்கு வழிவகுக்கும் [tஷீ யீணீநீவீறீவீtணீtமீ] கொலைத் திட்டம்னு சொன்னதே தவிர, அதுக்குப் பின்னாடி கோபால்சாமி இருந்ததாச் சொல்லல்லே. அவரை எதுக்குக் கேட்கணும்? சிஙிமி தகவலை லேசா எடுக்கக் கூடாதுன்னு மக்கள்கிட்ட போக வேண்டியதாகிவிட்டது.’’ ‘‘எனக்கு முதல்லே நம்பமுடியல்லே’’ என்று கருணாநிதி தொடர்ந்தார். ‘‘ஆனா கோபால்சாமி நடந்துக்கிற விதத்தைப் பார்த்தா இப்ப சந்தேகம் வலுப்படுகிறது. ‘‘சிஙிமி அனுப்பிச்ச கடிதம் தனக்கு அதிர்ச்சி ஏற்படுத்திச்சு’’ன்னு சொல்றார். ‘‘ஆனா என்னைக் கூப்பிட்டு ஏன் பேசல்லே?’’ நான் அவரோடு பேசத்தான் விரும்பினேன். ஆனா அகப்படல்லே. சென்னையிலே இருந்துகிட்டே இல்லேன்னு போக்குக் காட்டறார். பத்திரிகைக்கு அறிக்கை விடறார், அவரை கட்சியிலேந்து நீக்க இது ஒரு சூழ்ச்சின்னு. நாற்பது நாள் காத்திருந்து பிறகுதான் கட்சியிலேந்து நீக்கினோம்.’’

அவருடைய பார்வை மேஜையில் இருந்த புலிகளின் பத்திரிகை கட்டிங்குகள் மேல் பதிந்தது. ‘‘இதையெல்லாம் பார்க்கும்போது சிஙிமி கடிதத்துலே உண்மை இருக்கணும்னு சந்தேகம் வருது, வெளியிலே அவருக்கு ஆதரவு இருக்கலாம்னு; திட்டம் ஏதோ இருக்கணும்னு தோன்றுகிறது."

‘‘புலிகளுடன் தனக்கு இப்போது தொடர்பு இல்லை’’ என்று வை.கோ. சொன்னதைச் சொல்கிறேன்.

‘‘அவர் உண்மை பேசறாரா என்பதைப் பத்தி நான் எதுவும் சொல்ல விரும்பல்லே’’ என்றார் கருணாநிதி.

‘‘உங்கள் விமர்சகர்கள் சொல்கிறார்கள், திமுகவில் இப்போது ஜனநாயகம் இல்லை, வாரிசு அரசியல்தான் நடக்கிறது என்று...’’

கருணாநிதியின் முகத்தில் சட்டென்று எரிச்சல் படர்ந்தது. "நான் எப்பவும் சொல்றேன். தி.மு.க., சங்கர மடமோ, மன்னர் ஆட்சியோ நடத்தவில்லை, வாரிசு அரசியல் செய்ய. பிரதமர் நரசிம்மராவின் மகன் மாநிலத்தில் அமைச்சர். ரங்கராஜன் குமாரமங்கலத்துடைய அப்பாவும் தாத்தாவும் மந்திரிகளா இருந்தார்கள். அதைப் பத்தி யாரும் பேசறதில்லே. என்னைப் பத்தி மட்டும்தான் தப்பு சொல்கிறார்கள். ஏன்னா நான் சூத்திரன்."

"உங்க கட்சியிலேயே அப்படி ஒரு கருத்து இருக்கு" என்று நான் இடைமறித்தேன்.

"அது விஷமத்தனமான பேச்சு" என்றார் அவர். "வாரிசு அரசியல் செய்யணும்னா 1989 இலே தி.மு.க. ஆட்சியிலே இருந்தபோதே செஞ்சிருக்கலாமே.?" அதற்குமேல் அதைப் பற்றிப் பேச ஏதும் இல்லை என்பதுபோல் அதை ஒதுக்கிவிட்டு, மீண்டும் புலிகளைப் பற்றிப் பேச ஆரம்பித்தார். முதல் முதலில் பிரபாகரனையும் அவரது சகாக்களையும் சந்தித்தது, தமிழர்கள் இலங்கையில் படும் சிரமங்களை அவர்கள் விவரிக்கக் கேட்டு பதைத்தது, பிரபாகரனின் இளமையும் கள்ளமில்லா முகமும் தன்னை வெகுவாக ஈர்த்தது, கடைசியில் அவர்களது செயல்கள் தன்னை அதிரவைத்தது, எல்லாவற்றையும் கதைபோல் அவர் சொல்லி வருகையில் நான் ஒரு பத்திரிகையாளர் என்பதை அவர் மறந்து போனதுபோல் இருந்தது. அவர்களைப்பற்றி நினைக்கும்போதெல்லாம் முதுகில் குத்தப்பட்டதாக உணர்வதுபோல் சொன்னார். "நம்பமுடியல்லெம்மா. நீங்க உட்கார்ந்திருக்கிற இந்த சோஃபாவுக்கு நேர் எதிரத்தான் அவங்க உட்கார்ந்திருந்தாங்க, ஏதுமறியாப் பிள்ளெங்க போல. அவங்களுக்கும் வன்முறைக்கும் சம்பந்தப்படுத்த முடியாத தோற்றம். சென்னையிலேயே பத்மனாபாவையும் அவருடைய சகாக்களையும் கொலை செஞ்சபோது அதிர்ச்சியா இருந்தது. ராஜீவ் காந்தியுடைய படுகொலைக்குப் பிறகு இனிமே எந்தத் தொடர்பும் இருக்கமுடியாதுங்கற முடிவுக்கு வந்தேன்."

கருணாநிதி மீண்டும் தலை அசைத்தார். '‘‘நம்பமுடியல்லே!" கண்களில் நிழலாடிய பீதி, முகத்தில், தசைகளில், திரையாய் போர்த்திற்று. அடுத்த இலக்கு தாமாக இருக்கலாமோ என்கிற பீதி. ‘‘முதுகிலெ குத்தினது போல’’ என்று கீழே யாரோ சொன்னதற்குப் புதிய பரிமாணம் சேர்ந்தது போலத் தோன்றிற்று.

‘‘கடிதம் வந்தது உண்மையா அல்லது வை.கோ.வைக் கட்சியிலிருந்து விலக்கும் முகாந்திரமா அது!’’ என்கிற கேள்வி விரைவில் எல்லோருக்கும் மறந்து போனது. அடுத்த சில மாதங்களில் தி.மு.க. அதிகாரபூர்வமாகப் பிளந்தது, இரண்டாம் முறையாக. முதல் பிளவு ஏற்பட்டபோது கட்சிக்கு நிகழ்ந்த சேதம், இம்முறை ஏற்படாது என்று சில தி.மு.க.வினர் என்னிடம் கருத்து சொன்னார்கள். ‘‘எம்.ஜி.ஆரின் விசேஷ ஆளுமை வை.கோ.வுக்குக் கிடையாது’’ என்றார்கள். ஆனால் இரண்டு கட்சித் தோண்டர்கள் தீக்குளித்து இறந்தார்கள், தங்கள் தலைவனுக்கு நேர்ந்த அநீதிக்காக. அந்தச் சாவைக் கண்டு யாரும் பதைக்கவோ, அதிரவோ இல்லை என்பது எனக்கு விநோதமாக இருந்தது. அத்தகைய சாவுகள் தலைவரின் செல்வாக்கை உறுதிப்படுத்தும் அளவுகோல்களாகப் பார்க்கப்பட்டன. வை.கோ. தமது புதிய கட்சிக்கு, ‘மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்’ என்று பெயர் வைத்தார். அவரது கட்சி ஏடு ‘சங்கொலி’ கர்ஜித்தது. ‘போர்க்களம் தயாராகிவிட்டது. படை திரண்டுவிட்டது. பகைவன் வெல்லப்பட்டான். சங்கே முழங்கு!’

நாடகத்தனமாகத் தோன்றும் இந்த வசனங்களுக்குப் பின்புலத்தில் வேறு அர்த்தங்கள் புதைந்திருப்பதாக நான் உணர்ந்தேன். யாழ்பாணத்திற்கு நான் சென்றபோது, பலர் _ சாமான்யர்களிலிருந்து பல்கலைக்கழகத்தில் பணிபுரிபவர்கள் வரை_ என்னிடம் திட்டவட்டமாகச் சொன்னார்கள்: ‘‘தமிழ்நாட்டு அரசியல்வாதிகளிடம் சொல்லுங்கள்; தயவு செய்து அவர்கள் எங்கள் பிரச்னையில் மூக்கை நுழைக்கவேண்டாம்!’’

தமிழ்நாட்டில் அரசியல்வாதிகளைவிட சுவாரஸ்யமானவர்கள் வேறு யாரும் இல்லை என்று எனக்குத் தோன்றிற்று. பாமரனுக்கு சம்பந்தமே இல்லாத பாசாங்குத்தனங்களில் எத்தனை தீவிர ஆவேசத்துடன் அவர்களால் ஈடுபட முடிகிறது! அப்படித்தான் தஞ்சாவூரில் உலகத் தமிழ் மாநாடு, ஜெயலலிதா அரசின் தலைமையில் நடந்தபோது, பாமரர்கள் இலவசமாகப் பார்க்க நேர்ந்த ஆடம்பரக் கேளிக்கையைக் கண்டு திகைத்தார்கள். தமிழ்த் தாயே திக்குமுக்காடிப் போனாள்.


š இப்பதிவை மின்னஞ்சலிட