<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d20242795\x26blogName\x3d%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLACK\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://mugamoodireader.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://mugamoodireader.blogspot.com/\x26vt\x3d1499038088815249401', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

என் நூலகம்

இது என் ரசனையின் பத்தாயம். படைப்பாளிகளே எழுத்தின் உரிமையாளர்கள். சேமிப்பில் ஏதும் ஆட்சேபம் இருப்பின் செய்து அறியத்தரவும்.

 

காதலாகிக் கனிந்து - பாலகுமாரன்


அசல் கட்டுரையின் சுட்டி நன்றி குமுதம்

பணம் என்பதன் மிகப்பெரிய அவசியத்தை நான் இந்த நேரம் உணர்ந்து கொண்டேன்.

இரண்டு மனைவிகள். இரண்டு குழந்தைகள். இரண்டாவது மனைவிக்கு மகன் பிறந்ததில் பெரிய நிம்மதியும் சந்தோஷமும் ஏற்பட்டது. பெரிய அனுக்ரகம் என்ற எண்ணம் தோன்றியது. வயதான காலத்தில் என்னைத் தாங்குவதற்கு ஒரு பிள்ளை வந்துவிட்டான் என்கிற நிம்மதி எனக்குள் பிறந்தது.

மகள் என்பவள் கடன். மகன் என்பவன் வரவு என்கிற இந்திய எண்ணமும் எனக்குள் இருந்தது. வரவாக இருந்தாலும், செலவாக இருந்தாலும் பொறுப்போடு இருக்க வேண்டும். குழந்தைகள் மீது மிகுந்த பிரியத்தோடு இருக்க வேண்டும். குடும்பத்தில் அக்கறையோடு இருக்க வேண்டும் என்ற எண்ணம் என்னுள் இயல்பாகவே வேரூன்றி இருந்தது. என்னை நம்பி அவர்கள் இருக்கிறார்கள். அவர்களை நம்பி நான் இருக்கிறேன். இந்தப் பரஸ்பர நம்பிக்கையை இன்னும் கெட்டிப்படுத்த வேண்டும் என்கிற முயற்சியை நான் இடைவிடாது மேற்கொண்டேன். இவையெல்லாம் எனக்கு எவரும் சொல்லிக் கொடுத்து வரவில்லை. என்னை உற்றுப்பார்த்து, மற்றவர் வாழ்க்கையை உற்றுப்பார்த்து இவற்றை நான் கற்றுக்கொண்டேன்.

வேலையை விட்டுவிட்ட பிறகு சம்பாத்தியம் சிறு அளவிலேயேதான் இருந்தது. வீட்டுப்பெண்களை குதூகலிக்கச் செய்கிற, குழந்தைகளை குதிக்கவைக்கிற பரிசுப்பொருட்களை வாங்கித்தர முடியாமல் இருந்தது. அதற்காக நான் வருத்தப்பட்டேன். உள்ளூர மருகினேன். என்னசெய்வது என்று யோசித்தேன். யோசிக்க யோசிக்க, பணத்தால் எந்த மனிதரையும் வீழ்த்திவிட முடியாது என்று தெரிந்தது. வருமானம் குறைவாக இருந்தாலும், பரிசுப்பொருட்கள் அதிக விலையுள்ளதாக இல்லாமல் இருந்தாலும் கொடுக்கிறபோது ஒரு கொண்டாட்டத்தோடு கொடுத்தால், அன்பான வார்த்தைகள் பேசி இதமான செய்கைகள் மூலம் நட்பைப் பரிமாறினால் அவர்களுக்கு சந்தோஷமாக இருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டேன்.

இந்தியப் பெண்கள் மிகமிக எளிமையானவர்கள். அதிகம் எதிர்பார்ப்பு இல்லாதவர்கள். சிறிய விஷயங்களில் சந்தோஷம் அடைபவர்கள் என்பதை எங்கோ படித்திருந்தேன். பத்து ரூபாய்க்கு நாலு முழம் பூ வாங்கி வரும்போது இந்தா கண்ணு என்று கொஞ்சலுடன் கொடுத்தால், அவர்களுக்கு நிறைந்துவிடுகிறது. மெல்ல கன்னத்தில் முத்தமிட்டால் மனம் குதூகலமடைகிறது.

‘‘உனக்கு சரியான புடவையே இல்ல. நல்ல புடவையா வாங்கித்தரணும்’’ என்று அக்கறை காட்டினால்போதும், நூறு புடவை வாங்கிக் கொடுத்ததற்கு சமானமாகிறது. நல்ல பெண்கள் இவ்வளவுதான் எதிர்பார்க்கிறார்கள். இந்த அன்பு போதும் என்று நினைத்துவிடுகிறார்கள். இந்த அக்கறையில் மனம் குளிர்ந்து, பதிலுக்கு அக்கறையும், அன்பும் காட்ட ஆரம்பித்துவிடுகிறார்கள்.

ஒரு உண்மையைச் சொல்ல வேண்டும். நான் இந்த அக்கறையை நடிப்பாகத்தான் ஆரம்பித்தேன். நடிக்க நடிக்க என் மனம் அதில் முழுதுமாய் ஈடுபட்டது. நான் நடிப்பாக சில வார்த்தைகள் சொல்லி, சில விஷயங்களைச் செய்ய பதிலுக்கு என் குடும்பம் மிகுந்த உண்மையோடும், அக்கறையோடும் என்மீது அன்பு செலுத்தியது. இதில் நான் நெகிழ்ந்து போனேன். அடச்சே... இவர்களிடம் போய் நடிக்கிறோமே என்று உள்ளூர வெட்கப்பட்டேன். என்னிடமிருந்து நடிப்பு விலகி என்னுள்ளும் உண்மையான அக்கறையும், அன்பும் பிறந்தன.

மது குடிப்பதற்கு எனக்கு வாய்ப்புகள் இருந்தபோதும் நான் குடிக்கவேயில்லை. மது அருந்தி நடப்பவர்களை கவனிக்க கவனிக்க மது அருந்துதல் எனக்கு அருவருப்பாகவே போயிற்று. பாதி நினைவில் ஒருவன் இருப்பது பாவம் என்றொரு எண்ணம் வந்தது. தெளிவாய், தீச்சுடராய் மனமும் புத்தியும் இருப்பதே மிகச் சந்தோஷமான விஷயம் என்பதை நான் அறிந்து கொண்டேன். என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் உளறுவது, என்ன செய்கிறோம் என்று தெரியாமல் நடப்பது சரியா என்று கேள்வி வந்தது. மது அருந்துவதில் நெல்முனையளவும் சந்தோஷமில்லை. பாறை உடைத்து பாரம் தூக்கி உடம்பு வலியோடு படுக்கப் போகிறவர்கள் வேண்டுமானால் சிறிதளவு மது அருந்திவிட்டுத் தூங்கலாம். தூங்குவதற்காக செய்கின்ற முயற்சி அது. ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்துவதற்கான மருந்து அது. அந்த அளவில் வைத்துக் கொள்ளாது கூச்சல் போடுவதற்காகவே குடிப்பவர்கள் மனிதர்களே அல்லர்; விலங்குகள் என்ற முடிவுக்கு வந்தேன்.

அதேபோல சூது ஆடுவதிலும் எனக்கு மிகப்பெரிய வெறுப்பு இருந்தது. சீட்டுக்கட்டைத் தொடுவதே அசிங்கம் என்று நினைத்தேன். அந்தச் சீட்டுக்கட்டை விரித்து வைக்கிறபோது, ஒவ்வொரு சீட்டையும் பேராசையோடு எடுக்கிறபோது மனிதனின் நல்ல குணங்கள் செத்துப்போவதை உணர்ந்தேன். வாழ்க்கை என்ற பெரும் விஷயத்தை மறந்துவிட்டு வாழ்க்கையின் பெரும்பகுதி முழுவதையும் கிளப்பில் சீட்டாட்டத்தில் கழிப்பவர்கள் கசடர்கள் என்ற எண்ணம் வந்தது.

வீடுதான் என் அடைக்கலம். வீடுதான் என் இருப்பிடம். வீடுதான் என் சொர்க்கம். சொர்க்கத்தை சுத்தமாக வைத்துக்கொள்வதும், சுகமாக வைத்துக்கொள்வதும் இன்னும் பிரகாசமாக சொர்க்கத்தை மாற்றும் என்பதை நான் புரிந்து வைத்திருந்தேன். காசு சேர்ந்தால் எங்கேனும் வெளியூர் போவோம். காசு சேராவிட்டால் கடற்கரைக்குப் போவோம். எதுவும் வாங்கித்தரமாட்டேன்; பஜ்ஜிகூட வாங்கித்தர மாட்டேன் என்று நான் கத்தியதே இல்லை. குழந்தைகளுக்கு ஒன்றுக்கு இரண்டு பலூன்களும், கூடுதலான உணவுப் பண்டங்களும் வாங்கி சந்தோஷத்தில் ஆழ்த்துவது எனக்குப் பிடித்தமான விஷயம்.

‘‘தண்ணிகிட்ட போவாத. மணல்ல உட்காராத’’ _இதுவும் நான் சொன்னதில்லை. ஆடுவதற்கென்றே நாங்கள் போவோம். அரைக்கால் ட்ரவுசரும் டி_ஷர்ட்டுமாக நான் நிற்க, கிட்டத்தட்ட அதே உடையில் குழந்தைகளும் இருப்பார்கள். இடுப்பு ஆழத்தில் நின்று தலைக்குமேல் அலைபோகின்ற சந்தோஷத்தை கலவரமாக அனுபவித்து, கத்திக் கூச்சலிட்டு கைபிடித்துக் கொண்டு அலையில் நிற்பது ஒரு தனி சுகம். இன்றைக்கும் இந்த அறுபது வயதிலும் குதூகலம் மனதில் நிறைந்திருக்கிறது. என் குழந்தைகளும் அதை நினைவுகூர்கிறார்கள்.

ஈரமான உடையோடு வந்து மண்ணில் புரளட்டுமா என்று மகன் கேட்க... புரளு என்று நான் பதில் சொல்ல... அவன் உடம்பு முழுவதும் மணலாக நிற்பான். ஈர உடைகளைக் களைந்து வேறு உடைகளை மாற்றி தலையைத் துவட்டி வீட்டிற்கு வந்து குளிப்பாட்டுவது மனைவியின் வேலை. அவர்களும் இதைச் சந்தோஷமாய் செய்வார்கள்.

படிப்பு என்ற விஷயம் பற்றியும் நான் அதிகம் கண்டித்ததில்லை. ப்ராக்ரஸ் ரிப்போர்ட்டை கண்ணெடுத்தும் பார்த்ததில்லை. எங்கே கையெழுத்துப் போடவேண்டும் என்று கேட்டுவிட்டு அந்த இடத்தில் கையெழுத்துப் போட்டுவிட்டு ப்ராக்ரஸ் ரிப்போர்ட்டை பார்க்காமலேயே கொடுத்துவிடுவேன்.

‘‘நான் என் வேலையை ஒழுங்காகச் செய்கிறேன். கஷ்டப்பட்டு சம்பாதிக்கிறேன். நீ உன் வேலையை ஒழுங்காகச் செய்கிறாயா. கஷ்டப்பட்டு படிக்கிறாயா’’. இவ்வளவுதான் கேள்வி. குழந்தைகள் அதைப் புரிந்து கொள்வார்கள். அப்படியே நடந்து கொள்வார்கள்.

தேர்வு மதிப்பெண்தான் ஒரு மனிதனை நிர்ணயிப்பதாக நான் நினைக்கவேயில்லை. என்னோடு படித்து மிகச்சிறப்பாக தேர்ச்சிபெற்றவர்கள் எல்லோரும் குப்பைத்தொட்டியில் குமாஸ்தாவாக வேலைசெய்கிறார்கள் என்பதை நான் கவனித்துவைத்திருந்தேன். மகிழ்ச்சியாக வாழ்வதற்கும், மதிப்பெண்கள் பெறுவதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. என் குழந்தைகள் மதிப்பெண்கள் வாங்குவது பற்றி நான் மிகப்பெரிய அக்கறைப்படவில்லை. அதே நேரம் அவர்கள் அவர்களுடைய வேலையை தெளிவாகவும், திடமாகவும் செய்ய வேண்டுமென்று நான் விரும்பினேன். வற்புறுத்தினேன்.

மனம் முழுவதும் குடும்ப சுகத்திலேயே ஈடுபட்டு குதூகலித்துக்கிடந்தது. அவர்களை நேசித்து நேசித்து நேசிப்புச் சுகத்திற்குப் பழகி நானும் நேசிக்கப்பட, அதில் மெய்மறந்து ஆழ்ந்து தூங்கி அமைதியான பின்னர், முழுவேகத்தில் வேலை செய்ய என்னால் முடிந்தது. என் எழுத்துகள் பலமாகவும், தெளிவாகவும், சுந்தரமாகவும் இருக்க என் குடும்பமே காரணம்.


š இப்பதிவை மின்னஞ்சலிட