<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d20242795\x26blogName\x3d%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLACK\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://mugamoodireader.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://mugamoodireader.blogspot.com/\x26vt\x3d1499038088815249401', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

என் நூலகம்

இது என் ரசனையின் பத்தாயம். படைப்பாளிகளே எழுத்தின் உரிமையாளர்கள். சேமிப்பில் ஏதும் ஆட்சேபம் இருப்பின் செய்து அறியத்தரவும்.

 

கலையும் தெய்வமும் அரசியலும் - வாஸந்தி


கலையும் தெய்வமும் அரசியலும் வாழ்வும் கலந்து... வாஸந்தி
அசல் பதிவின் சுட்டி நன்றி: தீராநதி.

நடுஇரவு, மணி ஒன்றோ இரண்டோ. அந்தக் கிராமத்து மக்களுக்குக் கவலையில்லை; பெண்களும் ஆண்களும் முதியவரும் சிறுவருமான அந்தக் கூட்டத்தில், யார் கண்ணிலும் உறக்கத்தின் சாயல்கூட இல்லை. மாறாக தீவிரமான சுவாரஸ்யமும் உற்சாகமும் லயிப்பும் பளபளக்கிறது. விடிய விடிய கூத்து பார்க்க வென்றே அண்டை கிராமங்களிலிருந்தும் வந்திருக்கிறார்கள்; மகாபாரதக் கூத்து. நேற்று கர்ண மோட்சம், இன்று பதினெட்டாம் போர், நாளை படுகளம். அவர்களுக்கு எல்லாம் பரிச்சயம்; நடிகர்கள் மறந்துவிட்ட வரிகளை எடுத்துக்கொடுக்கும் அளவுக்கு. துரியோதனனும் கர்ணனும் கண்ணனும் புராண பாத்திரங்கள் இல்லை; அவர்களது வாழ்வோடு ஒன்றிவிட்ட மிக நெருக்கமான பந்துக்கள்.

அவர்களைப் போலவே நானும் மிகுந்த பரபரப்புடன் (முந்தைய) இரவு பத்துமணிக்கு அவர்களுடன் காத்திருக்கிறேன். இன்னும் சற்று நேரத்தில் கண்ணப்ப தம்பிரானின் தெருக்கூத்து ஆரம்பிக்கவிருக்கிறது. நகரவாசியான எனக்கு எல்லாமே புதிது. கோடைக்கால இரவில், எளிய கிராம மக்களுக்கு இடையே, மண் தரையில் அமர்ந்து, முச்சந்தியில், மேடை ஏதுமில்லா அரங்கில் திரைச்சீலையை இருவர் பிடிக்க, பின்னால் இருந்து வெளிப்படவிருக்கும் ரகசியங்களைப் பார்க்கும் தருணத்தை எதிர்நோக்கும் அனுபவம், புதுசு. சென்னையிலிருந்து 120 கி.மீ தொலைவில் உள்ள, கண்ணப்ப தம்பிரானின் தெருக்கூத்தினாலேயே புகழ்பெற்ற புரிசைக்கு வந்திருக்கிறேன். பத்து நாட்களுக்கு மகாபாரதக் கூத்து நடக்கிறது. பத்து வருஷ இடைவெளிக்குப் பிறகு தம்பிரான் கூத்து நடத்துகிறார் என்பதே அப்போது பெரிய செய்தி.

திரை விலகியதும், மேடை ஓரமாக அமர்ந்திருக்கும் அந்த எழுபத்தியேழு வயது முதியவர் கண்ணில் படுகிறார். அந்த ஒடுங்கிய உடலுக்குப் பொருத்தமில்லாமல், கண்டத்திலிருந்து வெளிப்படும் குரல் கம்பீரமாக எழுந்து, அமர்ந்திருப்பவர்களைச் சுண்டுகிறது. ‘‘ஏன் இப்படி மனம் கலங்குகிறீர்?’’ என்ற வார்த்தைகள் மெட்டோடு ஒலிக்கும்போது, கழுத்து நரம்புகள் புடைக்கின்றன. அரங்கில், கர்ணனும் கட்டியக்காரனும் நடத்தும் கூத்தை ஆர்வத்துடன் பார்த்தபடி அவர் பாடுகிறார். கூட்டத்தின் மேல் அவரது பார்வையே இல்லை. அவர் வேறு யுகத்திற்குப் பயணித்து விட்டதாகத் தோன்றுகிறது. கண்ணைக்கூசும் விளக்குகள் இல்லை; காதைத் துளைக்கும் ஒலிபெருக்கி இல்லை; குரல் கணீரென்று ஒலிக்கிறது. ‘‘ஏன் இப்படி மனம் கலங்குகிறீர் மன்னா?’’ தவிலும் மத்தளமும் ஆர்மோனியமும் கூடச் சேர்ந்து கொள்கிறது; மெல்ல மெல்ல உணர்வு நிலையை உயர்த்துவது போல. பாட்டு முடிந்ததும் கர்ணன் சொல்லவேண்டிய அடியையும் எடுத்துக் கொடுக்கிறார், ‘‘மன்னர்க்கு மன்னனே, வணங்காமுடி சேகரனே. இதற்கா நீ தடுமாறுகிறாய்’’ என்று.

கட்டியக்காரன்: ‘‘என்று...’’

கர்ணன்: ‘‘நான் என் குருகுலக் கொழுந்திடம் தேறுதல் சொல்லவேண்டாமா?’’

கட்டியக்காரன்: ‘‘நீ இருந்தாத்தானே சொல்லப் போறே?’’

கர்ணன்: ‘‘இல்லாமெ எங்கடா போகப் போறேன்?’’

கட்டியக்காரன்: ‘‘அங்கே (மேலே கையைக் காட்டி) நம்ம தாத்தா பாட்டா எல்லாம் போனாங்களே...’’

பார்வையாளர்கள் மெய்ம்மறந்து கூத்தில் ஐக்கியமாகி இருக்கிறார்கள். அடுத்த அசைவு என்ன என்பது, அவர்களுக்கு அத்துபடி. இது எனக்கு வியப்பைத் தருகிறது. அது தெரிந்தும், நிகழப்போவதில் அவர்களுக்கு இருக்கும் ஆர்வம் இன்னும் அதிக வியப்பைத் தருகிறது. புராணகாலத்துக்கும் நிகழ்காலத்துக்கும் இடையே வெகு இயல்பாகக் கட்டியக்காரன் ஏற்படுத்தும் தடாலடி பாலம் ஆச்சர்யமானது. அவனது பேச்சுக்கு, சிரித்து ஓய்ந்ததும், சரேலென்று உணர்வு நிலை வேறு தளத்திற்கு உயர்வதிலும் எந்த முரண்பாடும் இல்லை.

கர்ணனின் மனைவி வருகிறாள். கர்ணனை, ‘‘போருக்குப் போகாதே, பொல்லாத சொப்பனம் நானும் கண்டேன்’’ என்று அழும்போது கூத்தைப் பார்க்க வந்த ஆண்கள்கூட நெகிழ்ந்து அழுகிறார்கள். 'அவ அழுவறா; இல்ல, கேட்டாத்தான் என்ன' என்று கீழே அமர்ந்திருக்கும் பெண்கள், தம்மை மறந்து கர்ணனைப் பார்த்துக் கேட்கிறார்கள். புனைவும் நினைவும் இரண்டற கலக்கும் விந்தை நம்பமுடியாததாக இருக்கிறது எனக்கு. புரிசைக்கு வந்திருக்கும் கூத்துப்பட்டறை முத்துசாமி அன்று மாலை என்னிடம் சொன்னது நினைவுக்கு வருகிறது. ‘‘முதல் முதல்லெ கண்ணப்ப தம்பிரானுடைய நிகழ்ச்சியைப் பார்த்ததும், தமிழருடைய தியேட்டர் இதுதான்னு புரிஞ்சிண்டேன்’’ என்றார் ந. முத்துசாமி. கூத்தைப் பார்க்கப் பார்க்க எனக்கு சத்தியமாகப் புல்லரித்துப் போகிறது; ஆதார வேர்களைப் பற்றிக் கொண்டதுபோல. அதன் பிரும்மாண்டமும் தத்ரூப பரிணாமங்களும் கண்ணுக்கெதிரில் விரிந்துகொண்டு போவதுபோல் பிரமை ஏற்படுகிறது. சரளமாய் அழகு தமிழில், பாத்திரங்கள் உச்சரிக்கும் வார்த்தைகளில் மண்ணின் வாசனை கிறங்கடிக்கிறது.

"வருத்தமாய் விதுரர்தானும்/வந்து மாமணி முகப்பில்/இருக்கிறான் என்று சொல்லி/ காவல்காரனும் இயம்புகிறான்" என்று கம்பீரமாக தம்பிரான் குரலெழுப்ப, விதுரரை அழைத்து வர பீமன், அர்ஜுனன், நகுலன், சகாதேவனுடன் கூட்டமே கிளம்பத் தாயாராகிறது. நடிகர் வேறு, ஆடியன்ஸ் வேறு என்று பிரிக்கமுடியாத கலவையாக நிற்கிறது. எழுதப்பட்ட இலக்கணம் ஏதும் கூத்துக்கு இல்லாவிட்டாலும், முத்துசாமி சொன்னதுபோல் 'exit', 'entry' போன்ற தீர்மானங்கள் கன கச்சிதம். எனக்கு ஏற்பட்ட பிரமிப்பு என்னுடன் கூடப் பயணித்த ‘இந்தியா டுடே’ புகைப்படக்காரர் ஜி.கிருஷ்ணசாமிக்கும் ஏற்பட்டிருக்கவேண்டும். சுருள் சுருளாகப் புகைபடங்கள் எடுத்தும் மாளவில்லை அவருக்கு. இரவு முழுவதும் பதினெட்டாம் போர் நடந்தது; இரவு பத்திலிருந்து காலை ஏழுவரை. குழந்தைகள் அங்கங்கே சுருண்டு படுத்ததைத்தவிர கிராமத்தில் யாரும் கண்ணுறங்கவில்லை. ஆனால், அயர்வின் அறிகுறி கொஞ்சமும் இல்லாமல், கூத்து முடிந்ததுமே, திரௌபதி அம்மன் சிலைக்கு முன்னால் கிடுகிடுவென்று நூறடிக்கு துரியோதனின் உருவத்தை மண்ணினால் உருவாக்கிவிட்டார்கள், பகல் பத்து மணிக்குத் துவங்க இருந்த படுகளத்துக்காக. கண் சொடுக்கும் நேரத்தில் அதற்கு வண்ணம் (மஞ்சள் முகமும் கருத்த கண்ணும் கொடுவாள் மீசையுமாக) பூசி, வயிற்று பாகத்தில் சிவப்பு நிற திராவகம் கொண்ட பானையை வைத்துஇந்த ஏற்பாடுகள் ஒருபுறம் நடக்கையில், படுகளத்தில் பங்கு கொள்ள இரவு முழுவதும் நடித்திருந்த பீமனுக்கும் துரியோதனனுக்கும் மும்முரமாக ஒப்பனை நடக்கிறது. ஒப்பனையிலேயே ரௌத்திரம் ஏறியிருக்கிறது. கண்ணர்பாளையத்திலிருந்து வந்திருந்த துடும்பாட்டக்காரர்கள் பறை கொட்ட, தெருத்தெருவாக துரியோதனன்_ பீமன் சண்டை ஆரம்பிக்கிறது.

பதினோரு மணி கொளுத்தும் வெயிலில் படுகளத்தைச் சுற்றி பதைப்புடன் நிற்கிறது கூட்டம். துரியோதனின் மண் உருவத்தைச் சுற்றிச் சுற்றி வருகிறார்கள் துரியோதனனும் பீமனும். அவர்களது ஆக்ரோஷம் நிஜமானது; கட்டுக்கடங்காதது. மக்கள் பாய்ந்து பாய்ந்து அவர்களைக் கட்டுப்படுத்தப் பிரித்து இழுக்கையில், பாரதப் போரை இவர்கள் மாற்றி எழுதிவிடுவார்களோ என்ற கவலை ஏற்படுகிறது. பெருக்கெடுத்த உணர்ச்சிவேகத்திலும் பாத்திரங்களுக்கு வேடங்கள் மறக்கவில்லை நல்லவேளை. கடைசியில் தர்மம் வெல்கிறது. துரியோதனனின் மண் உருவத்தில் பீமன் தனது கதையால் ஒரு போடு போட, உள்ளிருக்கும் மண் பானை உடைந்து ரத்தம் வெளியில் பீறிட, ஐதீகமாக துரியோதனன் மடிய, மகாபாரதப் போர் முடிகிறது. பாரதப் போரை நேரில் கண்ட ஆயாசம் கூட்டத்தில் தென்படும்போது, இது கூத்தில்லை, ஒட்டுமொத்த சமூகத்திற்குக் கிடைக்கப்பெற்ற அற்புத தரிசனம் என்று தோன்றுகிறது.

அவர்களுக்கு அதைச் சாத்தியப்படுத்தியிருந்த தம்பிரான் அடக்கமே உருவாக இருந்தார். ‘‘மூதாதையர்கள் எப்படிச் சொன்னார்களோ, அதைத்தான் பின்பற்றணும்னு நான் நினைக்கிறேன்" என்றார். ‘‘புதுமையா ஏதானும் செய்தம்னா இதுக்கு முந்தி இப்படிப்பட்டப் பாத்திரம் இருந்ததாங்கற கேள்விக்குப் பதில் சொல்லணும். புதுமைன்னா அடவுகள், பாவங்கள், இதிலே விருத்தி பண்ணிக்கலாம்.’’

தெருக்கூத்தின் ரிஷிமூலம், நதிமூலத்தைப் பற்றின ஆய்வில் தம்பிரானுக்கு சுவாரஸ்யமில்லை. தமிழ் நாட்டில் பல இடங்களில் தெருக்கூத்து நடக்கிறது. ஒவ்வொன்றுக்கும் அதன் தனித்தன்மை உண்டு. ‘‘அர்ஜுனன் ஹஸ்தினாபுரத்திலே இருந்தவன் எங்கிறாங்க. ஆனா, பாடல்லே காஞ்சி ராமேசுவரத்துக்கு வந்ததாகவும் இருக்கு. இதை பாடல் பாடினவருடைய பண்பு என்கிறதா? என்ன சொல்றதுன்னு தெரியல்லே" என்று தம்பிரான் சொன்னபோது, அர்ஜுனன் புரிசையில் இருந்தவன் என்று அவரும் அவரது ரசிகர்களும் நம்புவதாக நான் நினைத்துக் கொண்டேன். ‘காப்ஸ§ல்’ வடிவத்தில் வெளிநாடுகளில் தெருக்கூத்தைக் காண்பிப்பதில் அவருக்குத் திருப்தியில்லை. அவருக்குக் கூத்து வெறும் தொழில் அல்ல; அர்ஜுனனின் தவத்தைப்போல ஒரு வேள்வி. அதைப் பார்க்க புரிசையின் எளிய மக்கள் இருந்தார்கள்; அவரோடு சேர்ந்து ரசிக்க. ‘‘அவருக்குக் 'கடைசியா வர்ற முடிவுதான்’ ஓய்வு. அதுவரை ‘ஏன் இப்படி மனம் கலங்குறீர் மன்னா?’ என்ற கம்பீரக் குரல் ஓசை, ஆர்மோனியத்துடன் இருளின் நிசப்தத்தைக் கிழித்துக்கொண்டு கிளம்பும்.’’ தவிலும் மத்தளமும் துணை நிற்க, கலையும் தெய்வமும் வேறு வேறு அல்ல என்கிற புரிதலில், மக்கள் தமது ஆதார வேர்களை உணர்வார்கள். எனக்குக் கிடைத்த தரிசனம் அது. நினைக்கும் போதெல்லாம் புனிதப்படுத்தும் ஆன்மிக அனுபவம் அது.

கண்ணப்ப தம்பிரானின் வாழ்நாளில் புரிசைக்குச் சென்றதும், அவரது கூத்தைப் பார்த்ததும், நான் செய்த அதிர்ஷ்டம் என்று இப்போதும் நெகிழ்ச்சி ஏற்படுகிறது. ஆனால் பத்து வருடங்களுக்குப் பிறகு அவர் நிகழ்த்திய கூத்தைப் பார்க்க, தமிழகத்து நகரங்களிலிருந்து மிக மிகச் சிலரே அன்று வந்திருந்தார்கள் என்பதை நினைத்துப் பார்க்கும்போது வியப்பாக இல்லை. நமது ஆதார வேர்களிலிருந்து நாம் விலகி வந்து வெகு காலமாகிறது. உலகமயமாக்கல் மண்ணின் கலாச்சாரத்தைத் தாக்குவதற்கு முன்பே, சினிமாவும் கட்சி அரசியலும் தனி நபர் வழிபாடும் வாழ்வின் இயல்புத் தன்மையை மாற்றிவிட்டது. அதில் மக்கள் அன்னியப்பட்டு நிற்கிறார்கள். அவர்களுக்கே புரியாத வகையில் கூத்துகள் தினம் அரங்கேறுகின்றன. ஆனால் எழுத்தாளருக்கும் பத்திரிகையாளருக்கும் எல்லா நிகழ்வுகளுமே சுவாரஸ்யமானவை. மனித மனத்தின் வக்கிரங்களைப் புரிந்துகொள்ள வாய்ப்பு தருபவை. அன்றாட வாழ்விற்குள் அரசியல் புகுந்துவிட்டதைத் தெளிவுபடுத்துபவை.

றீ றீ றீ

தஞ்சாவூரில் அரசின் செலவில் நடந்த, ‘எட்டாவது உலகத் தமிழ் மாநாடு’, நான் அதற்குமுன் தில்லியில் அரசு நிகழ்ச்சிகளில் பார்த்திராத ஆடம்பர பரிமாணங்கள் கொண்டது. புரிசையில் பார்த்த பாரதக் கூத்து மண்சார்ந்த கலையின் ஆன்மிக வெளிப்பாடு என்றால், தஞ்சாவூரில் தமிழின் பெயரில் நடந்த கூத்து, கட்சி சார்ந்த அரசியலின் வெளிப்பாடு. 1995 ஜனவரி 1லிருந்து 5வரை நடந்த அந்த நான்கு நாள் கோலாகலத்தில், தமிழ்த்தாய் திக்குமுக்காடிப் போனாள். வானை மறைத்த ஜெயலலிதாவின் ‘கட்அவுட்’டுகளைக் கண்டு அயல்நாட்டு பிரமுகர்கள் பிரமிக்க, தஞ்சாவூருக்குக் கிடைத்த திடீர் ஒப்பனையைக் காண சாரை சாரையாக மக்கள் திரண்டார்கள்; அ.இ.அ.தி.மு.க. கட்சி சார்பில், லாரி லாரியாக அழைத்து வரப்பட்ட பத்து லட்சம் மக்கள் வேறு. ‘இந்தியா டுடே’வுக்கு இதைவிட சுவாரஸ்யமான ஒரு கவர் ஸ்டோரி எங்கு கிடைக்கும்? நான் மிகுந்த எதிர்பார்ப்புடன், புகைப்படக்காரர் ராஜசேகர் சகிதம், தஞ்சாவூர் பரிசுத்தம் ஹோட்டலுக்குச் சென்று இறங்கினேன்.

ஊழல் புகார்கள், எதிர்கட்சிகளின் எதிர்ப்புக் கூச்சல், வழக்குகள், ஆளுநரின் ஒத்துழையாமை என்று பல விஷயங்கள் அன்றைய அ.தி.மு.க. அரசை அலைக்கழித்து வந்த காலகட்டம் அது. உலகத் தமிழ் ஆராய்ச்சிக் கழகம் (உ.த.ஆ.க) எட்டாவது மாநாட்டை நடத்தும் யோசனையில் இருப்பது தெரிந்ததும், மக்களின் கவனத்தைத் திருப்பவும், தமது அரசியல் பலத்தை எதிரணிக்கும் மாநில காங்கிரஸ§க்கும் சுட்டிக்காட்டவும் நல்லதருணம் இது என்று ஜெயலலிதா முடிவு செய்திருக்கவேண்டும். தமது அரசு, மாநாட்டை நடத்தும் பொறுப்பை ஏற்றுக்கொள்ளும் என்றும், சோழர்களின் தலைநகரான தஞ்சாவூரில் நடத்தலாம் என்றும், முதல்வர் உ.த.ஆ.க.வுக்குத் தெரிவித்ததும், அதன் ஜப்பானியத் தலைவர் நபரு கரஷிமாவும், ஃப்ரெஞ்சு துணைத்தலைவர் டாக்டர் ஃப்ரான்ஸ்வா க்ரோவும் மிக மகிழ்ச்சியுடன் ஒப்புதல் கொடுக்க, அரசு புகுந்து விளையாடிவிட்டது. கலைவிழா மண்டபத்தின் முகப்பு ஜெயப்பூர் அரண்மனை போல் காட்சி அளித்தது. அதைப் பார்க்கவே எப்பவும் ஒரு கூட்டம் முகப்பில் நின்றது.

தஞ்சை பல்கலைக்கழகத்தில், உ.த.ஆ.க. ஓசைப்படாமல் நடத்திய கருத்தரங்கம்தான் உண்மையான உலகத் தமிழ் மாநாடு என்பது வந்திருந்த சாமான்ய மக்கள் கூட்டத்துக்கு நிச்சயம் தெரிந்திராது. உ.த.ஆ.க.வின் அழைப்பின் பேரில் இலங்கையிலிருந்து கா.சிவதம்பியும், யாழ்ப்பாண பல்கலக்கழகத்தின் ஷண்முகநாதனும் அவர் மனைவியும், ஸ்வீடனிலிருந்து வந்து இறங்கியிருந்த (இலங்கை தமிழர் பிரச்னைக்கு ஆதரவாளர்கள் என்று கருதப்பட்ட) இரு அறிஞர்களும் 31ஆம் தேதி நள்ளிரவு வெளியேற்றப்பட்டு தங்கள் நாட்டுக்குத் திருப்பி அனுப்பப்பட்டார்கள் என்பது பத்திரிகையாளர் மத்தியில் மட்டுமே அறியப்பட்ட விஷயம். ஏன் என்று விளக்க யாரும் முன்வரவில்லை. ‘‘இது மத்திய அரசின் கியூ ப்ராஞ்சின் முடிவு’’ என்றார் தமிழகச் செயலர் ஹரிபாஸ்கர், சுருக்கமாக.

முதல் நாளிலிருந்து அன்னை சந்தியா விளையாட்டு அரங்கத்தில் நடந்த அரசியல் கூட்டங்கள், பேரணிகள், கலைநிகழ்ச்சிகள் எல்லாருடைய கவனத்தையும் சுவீகரித்துக் கொண்டன. தஞ்சையின் பெரிய கோயிலும் அருங்காட்சியகமும் ஜேஜே என்று மக்கள் கூட்டத்தில் அலைபாய்ந்தது. யாருமே அதிகம் செல்லாத சரஸ்வதி மஹால் முதற்கொண்டு நிரம்பி வழிந்தது. பெரிய கோயிலில் இருந்த கூட்டத்தைப் பார்த்து ஃபிரான்ஸ்வா க்ரோ மகிழ்ச்சியில் மாய்ந்து போனார். ‘‘இது ரொம்ப நல்ல அறிகுறி’’ என்றார். நல்ல வேளையாக அவர் எந்த அரசியல் நிகழ்ச்சிக்கும் செல்லவில்லை. அ.தி.மு.க. அமைச்சர்கள் பாடிய புகழ் மழையில் ஜெயலலிதா முங்கி முங்கி எழுந்தார். முதல் நாள் வந்திருந்த (50,000) கூட்டத்தைப் பார்த்து அரசு விருந்தினராக வந்திருந்த முன்னாள் ஜனாதிபதி ஆர்.வெங்கட்ராமன், ‘‘தஞ்சாவூர்க்காரனான நான் இப்படிப்பட்ட கூட்டத்தை எனது வாழ்நாளில் கண்டதில்லை’’ என்று பிரமித்துப் போனார். ஜெயலலிதாவின் சொத்துக்கள் முடக்கப்படாத காலம் அது என்பதால், ஜெயலலிதா மிகப் பிரகாசமான உடையலங்காரத்துடன் பளீரென்று காட்சி அளித்தார். அவரது முகத்தைப் பார்க்கவே கூட்டம் பல இடங்களில் முண்டியடித்து முன்னேறப் பார்த்தது. அ.தி.மு.க. தலைவியின் சக்தியின் உச்சகட்டம் அது என்று தோன்றிற்று. பதைபதைக்கும் வெயிலில், ஒரு பிரதான சாலையில், அலங்கார மிதவைகளின் ஊர்வலம் ஏற்பாடாகியிருந்தது. வி.வி.ஐ.பி.க்களுக்கு என்று ஒரு சிறிய கூரை போட்ட மேடை இருந்தது. அதில் ஜெயலலிதாவும் அவரது தோழியும் வெளிநாட்டிலிருந்து வந்திருந்த அரசியல் பிரதிநிதிகளும் தில்லி தலைவர்களும் அமர்ந்திருந்தார்கள். மற்றவர்கள் எல்லாம், தமிழக அமைச்சர்கள் உள்பட, காயும் வெயிலில், தெருவில், தரையில் நான்கு மணி நேரம் நின்றார்கள். ஜெயலலிதாவுடன் பேச முனைந்த அமைச்சர்கள் சற்று எட்டி நின்று வாய் புதைத்துப் பேசினார்கள். சோழர் காலத்துக்குச் சென்று விட்டதான பிரமை ஏற்பட்டது. இரண்டு நாள் முன்பு ஜெயலலிதா ஹெலிகாப்டரில் வந்து இறங்கியதும், ஒரு அமைச்சர் அவர்முன் சாஷ்டாங்கமாக நமஸ்கரித்ததை, ராஜசேகர் படம் பிடித்தது பின்னாளில் சரித்திர முக்கியத்துவம் பெற்றது.

கடைசி நாளன்று முதல்வருக்கு மிகப் பெரிய அரசியல் வெற்றி. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் உணர்வுகளை மதிக்காமல், அவர்கள் கோரிக்கையைப் புறக்கணித்து பிரதமர் நரசிம்மராவ் ஜெயலலிதாவின் அழைப்பை ஏற்று வந்து உரையாற்றினார். வெற்றித் திருமகளின் உருவமாக ஜெயலலிதா கையை உயர்த்தி கோஷமிட்டார்: ‘‘எங்கும் தமிழ்! எதிலும் தமிழ்! இதோ தமிழுக்காக ஒன்பது அம்ச திட்டம்!’’

நன்றி உரை ஆற்றிய சேடப்பட்டி முத்தையா, '‘‘வெல்லம்போல் திரண்டிருந்த மக்கலே நமது புரட்சித்தலைவியின் புகளுக்கு அத்தாட்சி என்றார். இதுவரை முத்தமிளாக இருந்த தமிளுக்கு அறிவியல் தமிள் என்பதையும் பெற்றெடுத்த தாய் அவர்'’ என்றார். ஒன்பது அம்ச திட்டம் என்பது என்ன என்று யாருக்கும் நினைவில்லை. வேடிக்கை பார்க்கவந்த மக்களுக்கும் அதில் ஆர்வமில்லை. ஆனால், தஞ்சாவூர் மாநாடு அதிகார உச்சத்தின் அடையாளமாகிப் போனது.

'தமிழுக்கு ஜே என்று பெயர்' என்று தலைப்பிட்டு ‘இந்தியா டுடே’ தமிழ்ப் பதிப்பில் கவர் ஸ்டோரி வெளியானது. ஜெயலலிதாவின் முகத்திற்கு ராசிஉண்டு. சூடான பக்கோடா போல இதழ்கள் விற்றுத் தீர்ந்தன.


š இப்பதிவை மின்னஞ்சலிட