<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d20242795\x26blogName\x3d%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLACK\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://mugamoodireader.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://mugamoodireader.blogspot.com/\x26vt\x3d1499038088815249401', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

என் நூலகம்

இது என் ரசனையின் பத்தாயம். படைப்பாளிகளே எழுத்தின் உரிமையாளர்கள். சேமிப்பில் ஏதும் ஆட்சேபம் இருப்பின் செய்து அறியத்தரவும்.

 

முத்திரை கவிதைகள்


01.
அன்பு
என்ற தலைப்பில்
மிகச்சிறிய
கவிதை கேட்டார்கள்...

அம்மா
என்றேன் உடனே!

கேட்டது
அம்மாவாக இருந்தால்
இன்னும் சின்னதாய்
சொல்வேன்

நீ... என்று!

- அம்மா, தாஜ்

*

02.
பதினெட்டு பட்டி சூழ
சந்நதம் கொண்ட மாரியாத்தா
சட்டென இறங்கினாள்
பெரியவீட்டு சாந்தி மீது

"என்ன வேண்டும்
கேள் மகனே" என்றாள்.

ஆவேசங் கொண்டாலும்
அழகு ததும்பும்
அவளிடம்
அத்தனை பேர் முன்
எப்படிக் கேட்பேன்
நீதான் வேண்டுமென்று.

- சாமக்கொடை, வித்யாஷங்கர்

*

03.
எப்படி விடுபட்டேன்... நான் மட்டும்!
ஒரு சொல், ஒரு ஜாடை,
ஒரு முகக்குறி காட்டியிருந்தால்
அந்த இரவில்
நிழலாய் தங்கியிருப்பேன் உன்னோடு.
தொப்பூழ் கொடி சுவாசம்
தந்த தாயே நீ
மாரடைத்து இறந்த அந்த சுவாச
கணத்தில் என் முகம் ஓடிற்றா அம்மா
தகர மயானம் முன் குவிந்த
விராட்டிப் படுக்கையில் நீ.
இரட்டை வடம் மார்புச் சங்கிலி மேல்
மூத்தவனுக்கு குறி.
அன்னம் பொங்கி அடுப்படியில் வெந்த
உன் வலதுகரத்தில்
குறடு நுழைத்து வெட்டிய வளையலோ
அடுத்தவனுக்கு.
மகளே உனக்கு என்னம்மா
வேண்டுமென்ற அப்பாவிடம்
கொடிக்கம்பியில் காயும் உன்
நைந்த உள் பாவாடை காட்டி
அழுகிறேன் பெருங்குரலில்.

- ஈரம் படிந்த வீடு, பா. சத்தியமோகன்

*

04.
நாமிருவரும் சேர்ந்து எடுத்த புகைப்படங்களில்
நாற்காலியில் அமர்ந்திருப்பேன் நான்
அடக்கமாக எனக்குப் பின்னால்
நின்றுகொண்டிருப்பாய் நீ

உன் இனத்துக் கற்புக்கரசிகளைச் சொல்லி
உன்னை மிரட்டுவேன் நான்
என் இனத்து அயோக்கியர்களின் பட்டியல்
தெரிந்தும்
அமைதியாக இருப்பாய் நீ

நீ எனக்கிருப்பதை பிறர் கேட்டாலொழிய
சொல்லிக் கொள்வதில்லை நான்
நான் உனக்கிருப்பதை ஆதாரங்கள் அணிந்து
பறைசாற்றியாக வேண்டும் நீ

எனக்குப் பிறகு என் நினைவுகளோடு
வாழவைக்கிறார்கள் உன்னை
உனக்குப் பிறகு உன் தங்கையோடு
வாழவைக்கிறார்கள் என்னை

- நானும் நீயும், ஜெயபாஸ்கரன்

*

05.
உனது தந்தையின் இறப்புச் செய்தி
ஈ-மெயிலில் வருகிறது.
சாஃப்ட்வேர் சிலந்திவலைப் பின்னலுக்குள்
தகப்பன் நினைவுகளைத் தேடி எடுத்து
கொடுக்கப்பட்ட சிறு இடைவெளியில்
கொஞ்சமாய் அழுகிறாய்.
உயிர்மீட்க உதவாத உனது டாலர்களோடு
நீ வந்து சேரும்போது
எரித்த சாம்பல்கூட எஞ்சியிருக்காது.
அதனாலென்ன நண்பனே..
இறந்துபோனவர்களுடன் தொடர்புகொள்ள
ஒரு வெப்சைட் வராமலா போய்விடும்?

- கண்ணீருடன், எஸ்.பாபு

*

06.
மேகங்கள் இருள் இழுத்து வந்து
தூரக் குயில் ஒன்று ஏங்கி
குளிர் காற்று இதயம் நிரப்பி
சில்லிட்ட ஜன்னல் கம்பியில்
கன்னம் சிலிர்த்து

பால்கனி சாரல் முகத்தில் முத்தமிட்டு
மரங்கள் தலை துவட்டி
செடிப் பூக்கள் முகம் கழுவி
வாசல் கடலில் கப்பல்கள் கவிழ்ந்து

மனப்புழுக்கம் அத்தனையும் அடித்துச்
சென்ற
நேற்றைய ரம்மிய மழை நாளில்.. வந்து..

உன் காதலைச் சொல்லியிருந்தால்
சரி என்றிருப்பேன் நானும்.

- சூழல், ஆனந்த் ராகவ்

*

07.
வாழ்ந்து கெட்டவனின்
பரம்பரை வீட்டை
விலை முடிக்கும்போது
உற்றுக்கேள்
கொல்லையில்
சன்னமாக எழும்
பெண்களின் விசும்பலை

- உயிரின் ஒலி, மகுடேசுவரன்

*

08.

காதலர் தினம்,
அன்னையர் தினம்
என வரிசையாய்
எல்லா தினங்களின் போதும்
நீ கொடுத்த
முத்தங்கள், கடிதங்கள்,
வாழ்த்து அட்டைகள், பரிசுகள்
என எல்லாவற்றையும்
அடிக்கடி நினைத்துப் பார்த்து
உயிர்த்திருக்கிறேன் பலமுறை.
வழக்கமானதொரு
மாலைப்பொழுதில்
என் தலை கோதி, உச்சி முகர்ந்து
'.....ப் போல் இருக்கிறார்ய்'
என்று அனிச்சையாய்
யாரோ ஒரு நடிகனின் பெயரை
நீ சொன்னபோது
செத்துப்போய்விட்டேன்
ஒரேயடியாக

- அகத்தகத்தகத்தினிலே, ஆதி

*

09.
நகர்ந்து கொண்டேயிரு
நதிபோல
நான்
காத்திருப்பேன்
ஓரிடத்தில்
கடலாக.

- தவம், அண்ணாமலை

*

10.
அப்பா போனதுக்கப்புறம்
செவலைதான்
எங்களுக்கு சோறுபோட்டுச்சு.

மூட்டை ஏத்தி வந்தப்ப
கால்முறிஞ்ச செவலையை
அடிமாடாய் ஏற்றிப்போனான் யாவாரி.

எங்களை விட்டுப் பிரிந்த
செவலை இறந்துபோனாலும்
எந்தத் தப்பிலாவதும்
தவுலிலாவதும்
அழுதுகொண்டுதானிருக்கும்
எங்களைப்போல.

- செவலையெனும் சித்தப்பு, சிவராஜ்

*

11.
தூக்கம் தொலைந்த இரவில்
எலெக்ட்ரான்கள் ஒளிரும் திரையில்
குறையாடைக் குமரிகளின்
பூனைநடை அலுத்து
கிழநாயகனால் கழுத்து முகரப்பட்ட
இளநாயகியின் பொய்க்கிறங்கலில் சலித்து
ஆண்குரலில் சிரித்த
வெள்ளைக்காரியை வெறுத்து
ஓடுடைந்து வெளியில் வரும்
பறவைக்குஞ்சையும் பார்க்கப்பிடிக்காமல்
ஒற்றைப் பொத்தான் அழுத்தலில்
உலகத்துக் கதவுகளையெல்லாம் மூடிவிட்டு
இருள் சூழ்ந்த அறையின்
ஜன்னலுக்கு அப்பால் விழித்திருந்த
நிலவோடு சிநேகிதமானேன்.

- நிலாசேனல், எஸ்.பாபு

*

12.
எட்டுக்காலியும் நானும் ஒண்ணு!
இருவரும் பிழைப்பது
வாய் வித்தையால்.

எட்டுக்காலிக்கு எச்சில்
எனக்குப் பொய்

இருவரும் வலை பின்னுகிறோம் -
அது எச்சிலைக்கூட்டி
நான் உண்மையைக் குறைத்து.

எட்டுக்காலி வலை
ஜீவித சந்தர்ப்பம்
எனது வலை
சந்தர்ப்ப ஜீவிதம்

எட்டுக்காலிக்குத் தெரியும் -
எச்சிலின் நீளமும் ஆயுளும்.
எனக்கும் தெரியும் -
பொய்யின் தடுமாற்றமும் அற்பமும்.

வாய் வித்தைக்காரர்கள் இருவரும்
எனினும் எட்டுக்காலி
என்னைவிட பாக்கியசாலி...
சொந்த வலையில் ஒருபோதும்
சிக்குவதில்லை அது.

- எட்டுக்காலியும் நானும், சுகுமாரன்.

*

13.
சோகக் கலவை
பூசிய முகங்கள்
எறும்புத் தொடர்தலாய்
துக்க விசாரிப்புகள்
இறுதிச் சடங்குகளில்
இனிய நண்பன்
கவலைக்குள் முங்கி
தேகம் நனைக்கையில்
ஆசையில் நினைத்தது
நேற்றிரவு நான் வாங்கிய
பத்தாயிரக் கடனை
பத்தினியிடம்
சொல்லியிருப்பானா..?

- மனசு, பா.கீதா வெங்கட்


*

25.
ஓங்கி ஒலிக்கும்
கெட்டிமேளத்தில்
அமுங்கிப் போகிறது
யாரோ ஒருத்தரின்
விசும்பல் சத்தம்
எப்போதும்

- வலி, வித்யாஷங்கர்

*

26.
எதைப் பற்றியும் எழுதுகிறாய்
என்னைப் பற்றி எழுதேன்
தினம் தினம் கெஞ்சுவாய்
மழையில் நனைவது சுகமா
மழை பற்றி எழுதுவது சுகமா?

- எது சுகம்? , வெண்ணிலா

*

28.
சீறும் பைக்கின் பின்ஸீட்டில்
டி-ஷர்ட் பெண்ணைப் பார்க்கையிலே
கண்கள் இமைக்கும், படம் விரியும்
சாலையில் கவனம் தடுமாறும்
விரட்டிச் சென்று மறுபடியும்
கிட்டே பார்க்கத் தோன்றும்
சிக்னல் விழுந்து பைக் விரைய
மனசுள் ஏதோ குறுகுறுக்கும்
ப்ளஸ் டூ மகளும் போவாளோ
யாரோ ஒருத்தன் பின்னாடி?

- நகரம், ஜெயந்த்

*

30.
திருவிழாக் கூட்டத்தில்
குழந்தையைத் தொலைத்துவிட்டு
தவிக்கையில்...
சின்ன வயதில்
வீட்டுத் தொழுவத்தில்
தெருநாய் ஈன்ற குட்டிகளை
கோணிப்பையில் திணித்து
ஊருக்கு வெளியே
கள்ளிக்காட்டிலே
கொண்டுபோய் விட்டதெல்லாம்
நினைவுக்கு வருகிறது!

- வதை, ஜி.விஜயலெட்சுமி

*

32.
நாரை நடக்கும்
குளத்தில்
நண்டு பிடிச்சதில்லை

முங்கு நீச்சல்
போட்டியில்
மூச்சுத் திணறியதில்லை

கண் பறிச்சு
வெல்லமிட்டு
வெடி தேங்கா தின்னதில்லை

அடுக்குப் பானை
அரிசி திருடி
ஆற்றுச் சோறு ஆக்கியதில்லை

ஆனாலும் சொல்கிறாய்
ஐயாம் லிவிங் என்று

- 'சிட்டி'சன், தாயம்மா

*

35.
கடந்து போகும்
ஜோடிக் கால்களின்
பின்னாலெல்லாம்
ஓடி ஓடிக் களைத்து
ஏமாந்து திரும்புகின்றன
அநாதை நாய்க்குட்டிகள்!
செய்யாத உதவிக்கு
வாலாட்டியபடியே!

- பாதசாரிகள் கவனத்திற்கு, வனவை தூரிகா

*

36.
தீர்த்தவாரித் திருவிழாவில்
அலங்கரிக்கப்பட்ட
அர்த்தநாரீஸ்வரரின்
பிரமாண்ட திரு உருவத்தை
கழுத்துப் புண்களில்
ரத்தம் வடிய
கண்களில்
நீர் கசிய
இழுத்து வரும்
வண்டி மாடுகளுக்கு
தெரிந்திருக்காது
அவை
எவ்வளவு பாக்கியம்
பெற்றிருக்க வேண்டுமென்பது!

- புண்ணியம், க.பாலவெங்கடேசன்

*

41.
ஆறாயிரத்துக்கு
விற்றுவிட்ட பிறகும்
ராவோடு ராவாக
புதிய எஜமானனின்
தொழுவத்துக் கயிற்றை
அறுத்துக்கொண்டு
பத்து கிலோமீட்டர்
பயணம் செய்து
மூச்சிரைத்தபடி
வீட்டு வாசலில்
வந்து நிற்கிற
வெள்ளைப் பசுவைப்
பார்க்கும்போது
உறுத்தத்தான் செய்கிறது
தனிக்குடித்தனம்
வந்தவனுக்கு

- குற்ற மனசு, ஜெ.முருகன்

*

43.
வலங்கைமான்
பாடைகட்டி மாரியம்மன் திருவிழால
கலர் கலரா வாங்கின
வளையலும்
டவுன்காரங்க கொண்டாந்து போட்ட
சீனா சர்க்கஸூம்
கோயிலைச் சுத்தி வந்த பொறவு
சுத்தின குடைராட்டினமும்
வெயிலுக்கு இதமா கடிச்ச
குச்சி ஐஸும் தந்த
எல்லா சந்தோஷமும்
குழந்தையின் ஒரு கொலுசோடு
தொலைஞ்சு போயிடுச்சு..
கூட்டத்தில்!

- தொலைத்தல், விஷாலி

*

49.
கிணற்றில் குழந்தை
தவறி விழுந்த
சேதி கேட்டு
ஓடி வந்தார்கள்
காடு கழனிகளுக்கு
சென்றவர்கள்!

பதற்றத்துடன்
பரபரப்புடன்
எல்லோரும் தேடினார்கள்
அவரவர் குழந்தைகளை!

தேடல், வெ.கிருஷ்ணவேணி

*

52.
நகரும் தார்ச்சாலை
இருபக்க மரங்கள்
பசுமையான வயல்வெளிகள்
முப்பரிமான மலைகள்
முகத்தில் மோதும் தென்றல்
எதிர்வரிசை இளமை
எதையும் ரசிக்கவிடவில்லை
சில்லறை பாக்கி

கவனம், சே.சதாசிவம்

*

54.
முரண்டு பிடிக்கும் ஆட்டை
அடிக்க முயன்ற
என்னைத்
தடுத்தவாறு சொன்னாள்
அம்மா
"அடிக்காதேடா..
அது
கருப்பசாமிக்கு நேர்ந்துவிட்டது"

- முரண், பி.மணிகண்டன்

*

61.
துல்லிய நீர்ப்பரப்பில்
துறவிபோல் வந்தமர்ந்து
மெல்லிய தன் உடலை
மேற்பரப்பில் பிரதியாக்கி
தண்ணீரில் தவம் செய்யும்
பார்ப்பதற்கு பரவசம்தான்
மீனுக்குத்தானே தெரியும்
கொக்கின் குரூரம்

- தோற்ற மயக்கம், எஸ்.ஆர்.இராஜாராம்

*

62.
ஒருபோதும்
பேருந்துப் பயணம் செய்ய
வாய்ப்பேயில்லாத
கலைவாணன் பயல்
ஆணி மினுமினுங்கும்
பம்பரத்தை
மல்லாக்க வைக்கிறான்
கோயில்பட்டி ரோட்டில்

- பம்பரம், வே.இராமசாமி

*

63.
நவக்கிரகங்களை வழிபடுகையில்
சுற்றுகளை எண்ணுவதிலேயே
சுற்றிக்கொண்டிருக்கிறது மனசு.
எதை வேண்டி
எதைப் பெறுவது?

- பக்தி, மாசிலா விநாயகமூர்த்தி

*

64.
அரிசி குருணையைக்
கொத்திக் கொண்டிருந்த
சேவலுக்குத் தெரியாது
இதுதான் தனது கடைசி இரவென்று!

அதிகாலையில்
இது கூவிய பிறகுதான்
தூக்கம் கலைந்தோம்
விருந்து தயாரிப்பதற்காக..!

கத்திக் கீறலில்
ரத்தம் பீறிட்டபோது
முனகி அடங்கியது
அதன் உயிரின் குரல்.

அறுத்து சிதைத்தபோது
பதைபதைத்த மனது
கொதித்த குழம்பு வாசனையில்
அடங்கிவிட்டது.

- கொன்றால் பாவம், கோவி.லெனின்

*

65.
கோவர்த்தன மலையை
குடையென ஆக்கி
மக்களைக் காக்கும்
கண்ணனை
வயிற்றுப் பசியுடன்
வரைந்து முடித்து
நிமிர்ந்து பார்க்க
வந்தது மழை.
குடையுடன்
கடவுள்
அழிந்து கொண்டிருதார்.

- நடைபாதை ஓவியன், எம். மாரியப்பன்

*

66.
தோப்பும் துரவும்
வீடும் கிணறும்
விற்று வாங்கிய
தொகையை
எண்ணிக்கொண்டிருக்கையில்
ஐந்நூறு ரூபாய் நோட்டுகள்
அனைத்திலும்
அப்பாவின் முகம்.

- விற்ற காசு, ந.கண்ணன்

*

67.
பிரகாரம் நிழைந்தவுடன்
கனியாகி விடுகிறது
எலுமிச்சை...

தீர்த்தமாகி விடுகிறது
தண்ணீர்...

பிரசாதமாகி விடுகிறது
திருநீறும் பொட்டும்...

எந்த மாற்றமுமின்றி
வெளியேறுகிறான்
பக்தன்.

- மாற்றங்கள், புன்னகை சேது

*

68.
மெள்ள நகரும்
பேருந்தின் ஜன்னலில்
அவசரமாய் கையேந்தும்
பிச்சைக்காரியின்
இடுப்புக் குழந்தை
டாட்டா காட்டுகிறது
பஸ் பயணிகளுக்கு!

- குழந்தை, பி.பழனிச்சாமி

*

69.
சொக்கத் தங்கம் நூறு பவுன்
ரொக்கப் பணம் ஐம்பதாயிரம்
ஸ்கூட்டர் டிவி என
பட்டியலிடும் பொழுதுதான்
கண்டுகொள்ள முடிந்தது என்னால்
ஆனால்..
கதவு திறக்கும் பொழுதே
கண்டுகொண்டு குரைத்தது
என் வீட்டு நாய்.

- திருடர்கள் ஜாக்கிரதை, தாமிரபரணி

*

75.
விழுங்கிய மீன்
தொண்டையில் குத்துகையில்
உணர்கிறேன்
தூண்டிலின் ரணம்

- வலி, ஜி.ஆர்.விஜய்


நன்றி :: முத்திரை கவிதைகள், 17.11.02 ஆனந்த விகடன் இணைப்பு

š இப்பதிவை மின்னஞ்சலிட