<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d20242795\x26blogName\x3d%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLACK\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://mugamoodireader.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://mugamoodireader.blogspot.com/\x26vt\x3d1499038088815249401', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

என் நூலகம்

இது என் ரசனையின் பத்தாயம். படைப்பாளிகளே எழுத்தின் உரிமையாளர்கள். சேமிப்பில் ஏதும் ஆட்சேபம் இருப்பின் செய்து அறியத்தரவும்.

 

போராட்ட உணர்வும் விடுதலை வேட்கையும் கூர்ப்பில் பின்தங்கிய இயல்புகளா? - மயூரன்


மு.மயூரன் போராட்ட உணர்வும் விடுதலை வேட்கையும் கூர்ப்பில் பின்தங்கிய இயல்புகளா?

பொழுதுபோக்காக, சுவாரசியமாக விதண்டாவாதம் புரிவதற்கு இப்போது என்னைச்சுற்றி இருக்கிற நண்பர்கள் யாருக்கும் பெரிதாக ஆர்வமில்லை. எல்லோருக்கும் வயசு போய்விட்டது.
அவர்கள் அர்த்தமுள்ள விவாதங்களுக்கே முக்கியத்துவம் கொடுக்கத்தொடங்கிவிட்டார்கள்.

சில மாதங்களுக்கு முன் பாடசாலை நண்பண் ஒருவன் இங்கே சில நாள் என்னோடு அறையில் தங்கியிருந்தபோது நீண்ட விதண்டாவாதத்திற்கான சந்தர்ப்பம் வாய்த்தது.

விதண்டாவாதங்கள் எப்போதும் வெறும் வாதங்களாக இருப்பதில்லை.

பல்வேறு தலைப்புகளையும் தொட்டு வளர்ந்து உரையாடல் நீண்டபோதும் என்னை எதிர்த்தரப்பில் தள்ளுவதற்கு அவனுக்கு வாய்ப்பு கிடைக்காமற்போய்விட்டது.
விவாதத்திலிருந்து நழுவி நழுவி நான் எல்லாவற்றையும் ஒப்புக்கொண்டு ஓடிக்கொண்டிருந்தேன்.

நீண்டகாலத்துக்குப்பிறகு சந்தித்ததால் நான் இப்படி நழுவுவது அவனுக்கு பெரும் வியப்பாயும் சவாலாயும் போய்விட்டது.

கடைசியாக போராட்டங்களுக்கான ஆதரவு என்ற என் நிலைப்பாட்டில் கைவைத்து ஒருவாறாக என்னை எதிர்முனைக்குத்தள்ளி விவாதிக்க வைத்து வென்றுவிட்டான்.

"நீங்கள் எல்லாம் கூர்ப்பில் பின்தங்கிய ஆட்கள்" என்று ஒரு போடு போட்டுத்தான் நிலைகுலைய வைத்தான்.

விபரங்களைப் பார்க்குமுன் ஒரு சிறிய இடைவேளை- சிறிய கதை.

முன்பொருகாலத்தில் உலகில் ஏதோவொரு பகுதியில் ஓர் உயிரினத்தின் இரண்டு வகைகள் இருந்தன.

சரியாக அந்த உயிரினம் எது என்பது மறந்து போய்விட்டது.

ஒன்று மஞ்சள் நிறம். மற்றது சாம்பல் நிறம்.

அந்த உயிரினத்தைக் கொத்தித் தின்னும் பறவை இனமொன்றும் அந்த பிரதேசத்தில் வாழ்ந்துவந்தது. அந்தப்பறவை, இதனைத் தேடிப்பிடித்துக் கொத்திச் சாப்பிட்டு வந்தது.

பின்னரான காலங்களில் அந்த இடத்தில் மனிதரால் ஒரு தொழிற்சாலை ஆரம்பிக்கப்பட்டது. அத்தொழிற்சாலைக்கழிவான சாம்பல் அந்த பிரதேசமெங்கும் பரந்து படர்ந்தது.

சில காலங்களுக்குப்பிறகு மஞ்சள் நிற உயிரினம் ஏறத்தாழ அழிந்துபோக சாம்பல் நிற உயிரினம் மட்டுமே எஞ்சியது.

ஏன்?

சாம்பல் நிற உயிரினம் அந்த பறவையின் கண்களுக்கு தப்பும் வாய்ப்பு ஏற்பட்டுப்போனது. மஞ்சள் நிற உயிரினம் பறவையால் உண்ணப்பட்டு அழிந்தது.

இதிலிருந்து ஒரு கொள்கை பிறக்கிறது.
அதாவது சூழலில் தன்னை தகவமைத்து வாழக்கூடிய இயல்புள்ளவை தொடர்ந்து வாழ, ஏனையவை இயற்கையில் அழிந்துபோகின்றன.

தக்கன பிழைக்கின்றன. அல்லன மடிகின்றன.

இதுதான் கூர்ப்பின் அல்லது பரிணாமத்தின் ஒரு முகம்.

சரி எமது கதைக்கு வருவோம்.

"நீங்கள் எல்லாம் கூர்ப்பில் பின்தங்கிய ஆக்கள்" என்று அவன் விளித்துச்சொன்னது போராடும் முனைப்புள்ள ஆட்களை.

எப்போது பார்த்தாலும் அடிமை நிலையை உடைப்போம், விடுதலை, புரட்சி, சுதந்திரம், மண்மீட்பு என்று சொல்லிக்கொண்டிருக்கும் ஆட்களை.

இவர்கள் எல்லாம் ஆயுதம் தூக்கி போராடிச் செத்துக்கொண்டு இருக்கிறார்கள். இப்படியே செத்துப்போய்விடுவார்கள்.
போர் முனைப்புக்கொண்டவர்கள் இயற்கையில் தம்மை தகவமைத்து வாழ முடியாமல் குறைந்து மடிந்துபோவார்கள். எனவே இவர்களது அழிவுக்குக் காரணமாயிருக்கும் போர்க்குணம் கூர்ப்பில் பின்தங்கிய இயல்பு என்பது அவன் வாதம்.

இது வெறும் விதண்டாவாதமாக உண்மையில் எனக்குப்படவில்லை.

அவன் போதாமை நிறைந்த பார்வையோடு பெரும் உண்மை ஒன்றைக் கண்டுபிடித்திருக்கிறான்.

இயற்கைத்தேர்வுக்கும் மனித இயல்புக்கும் இடையில் ஒரு தொடர்பினை அவன் நிறுவ முயற்சிக்கிறான்.

இந்த கருத்து அடுத்தத்டுத்த நாட்களில் என் மூளையைத் தொற்றிக்கொண்டு தொடர்ந்து யோசித்துக்கொண்டிருக்க வைத்துவிட்டது.

கூர்ப்புக்கொள்கை முழுமையானதில்லை என்பது ஒருபுறமிருக்க, இயற்கையின் தேர்வில் எம்மை தகவமைத்து வாழ்தல் என்பதுதான் உயிர்வாழ்க்கையின் சாரமாக இருக்கிறது.
அதுதான் உண்மை.

தற்கொலை செய்துகொள்வதை மதக் கடைப்பிடிப்பாகக் கொள்ளும் மனிதக்கூட்டம் சில காலங்களில் அழிந்துபோய்விடும்.

நாம் மனித இனத்தின் தொடர்ச்சியான வாழ்தலை ஏற்றுக்கொள்வோமாக இருந்தால் அது தன்னை இயற்கையின் தேர்வில் தகவமைத்தே ஆகவேண்டும் என்பதை வேறு வழியில்லாமல் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். இதுபோன்றதுதான் ஓர் இனத்தின் இருப்புப் பற்றிச் சிந்திப்பதும்.

தமிழீழ விடுதலைப்புலிகளின் கடைநிலைப் போராளிகள் பற்றி ஒருகணம் சிந்தித்துப்பாருங்கள்.

இருபதுவருடம் போராட்டத்தில் ஊறிப்போயிருக்கும் அவர்களுக்கு தெரிந்த வெளி உலகம் என்ன?

மறுபடி மறுபடி அவர்களுக்கு ஊட்டப்பட்டுக்கொண்டிருக்கும் மாவீரர் போதையின் விளைவு என்ன?

அவர்களை வழிநடத்தும் சக்திகளின் திட்டங்களிலும் செயற்பாடுகளிலும் அவர்கள் வெற்று எண்ணிக்கை.
துப்பாக்கி குண்டுகளைப்போல.

இந்த போரை வெல்வதானால் இத்தனை குண்டுகளைச் செலவழிக்க வேண்டிவரும் என்பதுபோல ஒரு எண்ணிக்கைக் கணக்கு.

அவர்கள் நிலையில் நின்று நாம் எம்மை திருப்பிப்பார்க்கும்போது இந்த உண்மை முகத்தில் ஓங்கி அறையும்.

யாரெல்லாம் போராளிகளாக, கரும்புலிகளாகப் போய்ச்சேர்கிறார்கள்?
இலகுவில் பிரசாரத்தால் கவரப்படக்கூடிய மனவமைப்புக்கொண்டவர்கள், போர்முனைப்புக்கொண்டவர்கள், விடுதலை வேட்கை கொண்டவர்கள் .... இப்படி.

இவர்களெல்லோரும் போராடிக், காயப்பட்டு, சித்திரவதைப்பட்டுச் செத்துப்போக, -ஒருவேளை தமிழீழம் கிடைத்தால் - அதில் தம்மை தகவமைத்து வாழப்போவது யார்?

போராட்டத்திலிருந்து தப்பியோடி வெளிநாட்டில் வந்து "செட்டில்" ஆகி சாகும் போராளிகளை உற்பத்தி செய்யவும் பராமரிக்கவுமான காசை அனுப்பிவைத்துவிட்டு பிறகு பெரும் மூலதனத்தோடு வந்து தமிழீழப் பொருளாதாரத்தைக் கைப்பற்றப்போகிறவர்கள் தானே?

கூர்ப்பில் முன்னேறிய இயல்பு இந்த நழுவல் இயல்பும், சமரசவாதமும், காட்டிக்கொடுத்துத் தம்மைத் தக்கவைக்கும் இயல்பும்தான் என்கிறான் நண்பன்.

நழுவல்போக்குக்கொண்டு போராட்டச் சன்னங்களிலிருந்து தப்பி எம்மைத் தகவமைத்து இணையத்தோடும், காயம்படாத போராட்ட ஆதரவு வடிவங்களோடும் வாழும் நாங்கள் கூர்ப்பில் முன்னேற்றமான இயல்புகொண்டவர்கள்.
நாம் நாளை பெறப்போகும் இன்னும்சவுகரிகமான வாழ்வுக்கு அங்கே போராளிகள் சாகவேண்டியது முன்நிபந்தனை.

இத்தகைய தப்பியோடும், தங்கி வாழும் இயல்புடையவர்கள்தான் நாளைய தேசத்தில் பெரும் முதலீட்டுடன் பெரும் மனிதர்களாக வாழப்போகிறார்கள்.
வீரமாய், துரோகமிழைக்காமல் செத்துப்போன ஆயிரமாயிரம் இளம்போராளிகளின் சந்ததியே பூண்டோடு அழிந்து வெறும் கல்லறைகளாக மாறப்போகிறது.

genetic pool என்று சொல்வார்கள். அத்தகைய மரபுரிமைப்பெருக்கம், தனக்கேயான மரபியல்புகளை காப்பது ஓர் உயிரியின் தொடர்ச்சியான இருப்புக்கு மிக முக்கியமானது. காக்கப்படப்போகும் மரபியல்புகள் இனி யாருடையது?

உலகெங்கும் நடக்கும் பல்லாயிரக்கணக்கான போராட்டங்களின் கடைநிலைப்போராளிகளினதும் கதி இதுதான்.
அவர்கள் வெறும் துப்பாக்கிக் குண்டுகளுக்குச் சமமானவர்கள்தான்.

புலிகள் மணலாற்றைக் கைப்பற்றுவது மிக முக்கியமானது. இன்றியமையாதது. அது எல்லோருக்கும் தெரியும். ஆனால் அதற்கு கட்டாயமாக சில நூறு போராளிகள் செத்தே ஆகவேண்டும் என்பதும் எல்லாருக்கும் தெரியும்.
பல லட்சம் குண்டுகள் அழிக்கப்பட்டே ஆகவேண்டும் என்பதைப்போல.

யார் சாவது?

இந்தக்கேள்வியை எதிர்கொள்ள நான் வேறுவிதமாக ஒரு போடு போட்டேன்.

போராடினால்தான் வாழ்வு என்ற நிலை இருக்கும்போது போராடும் இனங்கள், போராடும் கூட்டம் தான் தன்னை இயற்கைத் தேர்வில் தகவமைத்துக்கொள்ளலாம்?

சிலரை பலிகொடுத்து பலரது genetic pool இனை காப்பதற்காகவே மக்கள் கூட்டங்கள் போராடுகின்றன என்றேன்.

தமிழைக் காக்க, தமிழர் என்ற இனத்தைக்காக்க, இஸ்லாம் சமயத்தை காக்க என்பது போன்ற எடுத்துக்காட்டுக்கள்.

இந்த விவாதம் இரவிரவாய் அன்று நீண்டது.

எப்படியோ, எல்லாப்போராட்டங்களிலும் ஒரு கூட்டம் போராளிகளாய் களத்தில் இறக்க, இன்னொருகூட்டம் அவர்களது பிணங்களில் வசதியாய் ஏறி நின்று எதிர்கால உலகில் தம்மை தகவமைத்து வாழ்கின்றன. அதுதான் உண்மை.

இந்தக்கூட்டம் வாழ வேண்டுமானால், போர்க்குணமும் எளிய மனவமைப்பும் கொண்ட அந்தக்கூட்டம் செத்தே ஆகவேண்டும். இதுதான் நியதி.

இயற்கையின் நியதி.

தக்கன பிழைத்துவாழ அல்லன மடியும்.


š இப்பதிவை மின்னஞ்சலிட