<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d20242795\x26blogName\x3d%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLACK\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://mugamoodireader.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://mugamoodireader.blogspot.com/\x26vt\x3d1499038088815249401', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

என் நூலகம்

இது என் ரசனையின் பத்தாயம். படைப்பாளிகளே எழுத்தின் உரிமையாளர்கள். சேமிப்பில் ஏதும் ஆட்சேபம் இருப்பின் செய்து அறியத்தரவும்.

 

கருணா அம்மான் சிறப்பு பேட்டி


புலிகளுடன் தமிழக தலைவர்கள் ஆயுத வியாபாரம்: தினமலர் இதழுக்கு கருணா அம்மான் சிறப்பு பேட்டி- 01
ஜனவரி 15,2009,00:00 IST

"புலிகளுக்குத் தேவையான பயங்கர ஆயுதங்களை தயாரிப்பதற்கான மூலப் பொருட்கள், தமிழகத்தில் இருந்து கடல் வழியாகக் கடத்தப்படுகின்றன. இந்த கடத்தலின் பின்னணியில் தமிழகத்தில் புலி ஆதரவு பேசும் தலைவர்கள் இருக்கின்றனர். கடத்தலை முறியடிக்க இலங்கை ராணுவம் முயலும் போது தான், தமிழகத்தின் அப்பாவி மீனவர்களும் பாதிக் கப்படுகின்றனர்,'' என்று புலிகள் இயக் கத்தில் ராணுவப் பொறுப்பில் இருந்த கருணா அம்மான் தினமலர் நிருபருக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகள் இயக்கத்தில் ராணுவத் தளபதியாக இருந்தவர் கருணா அம்மான். இலங்கை மட்டக் களப்பு மாவட்டத்தில் விவசாயக் குடும்பத்தில், விநாயகமூர்த்தி முரளிதரன் என்ற பெயரில் பிறந்த இவர், '83ம் ஆண்டு புலிகள் இயக்கத்தில் சேர்ந்து, கருணா அம்மானாக மாறினார். படிப்படியாக உயர்ந்து புலிகளின் ராணுவப்பிரிவு தலைமை தளபதியாக இருந்து, இலங்கை அரசுப் படைக்கு எதிராக போர்க்களங்களில் நின்றவர். இலங்கையின் வடக்குப்பகுதி முழுவதையும், போர் நடவடிக்கையால் புலிகள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தவர். தற்போது, இலங்கை ராணுவ வசமாகியுள்ள கிளிநொச்சி, ஆனையிறவு போன்ற பகுதிகளில் இருந்த ராணுவ முகாம்களை தாக்கி அழித்து அவற்றை புலிகள் கட்டுப் பாட்டில் வைத்திருந்தார். பிரபாகரனோடு ஏற்பட்ட மோதலால், 2004ம் ஆண்டு புலிகள் இயக்கத்தில் இருந்து வெளியேறிய இவர், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்(டி.எம்.வி.பி.,) என்ற அமைப்பைத் துவக்கினார். இலங்கை கிழக்கு மாகாணத்தில் இவரது கட்சி தான் தற்போது ஆட்சியில் உள்ளது. இலங்கை அரசில் நியமன எம்.பி.,யாக பதவியில் உள்ளார். இவர், புலிகளின் ராணுவத் தளபதியாக இருந்த போது பிடித்த பகுதிகள் முழுவதும் இப்போது மீண்டும் ராணுவக் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளன. இலங்கையில் புலிகளின் நிலைக்களங்களை ராணுவம் முழுவதுமாக அழித்து, உள்நாட்டுப் போர் முடிவடையும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலைமையில் கடுமையான பாதுகாப்பு கெடுபிடி களுக்கு இடையே, "தினமலர்' இதழுக்கு அவர் அளித்த விரிவான பேட்டி:

உங்கள் குடும்ப பின்னணி பற்றி...
இலங்கை மட்டக்களப்பு மாவட்டத்தில் வயல்களின் ஊடாக இருக்கிறது எனது சொந்த கிராமம்; அருகில் கடலும் உண்டு. அப்பா விவசாயி. சொந்தமாக நிலம் இருந்தது. அம்மாவின் குடும்பத்தில் அனைவரும் படித்தவர்கள். நாங்கள் ஐந்து பேர். நான் கடைசியாக பிறந்தவன். எங்கள் அனைவரையும் அப்பா நன்கு படிக்க வைத்தார். படித்து பட்டம் பெற்று அனைவரும் நல்ல நிலையில் இருக்கின்றனர். குடும்பத்தில் எதற்கும் குறைவில்லாமல் மகிழ்ச்சியாகவே இருந்தது.

இலங்கைத் தமிழர் போராட்டத்தில் ஈடுபட்டதற்கு நேரடியான பாதிப்புகள் எதுவும் உங்களுக்கு இருந்ததா?
இது பற்றி விரிவாக சொல்ல வேண்டும். '83ம் ஆண்டு குடாநாட்டில் அரசியல் ரீதியான போராட்டங்கள் தீவிரமாகியிருந்தன. ஆதே ஆண்டு ஜூலை 23ம் தேதி நடந்த போராட் டத்தின் போது, 13 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இச்சம்பவம் இலங்கை முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. தமிழர்களுக்கு எதிராக துவேஷங்கள் விதைக்கப்பட்டன. அப்போதைய சிங்கள அரசியல்வாதிகள் இப்பிரச்னையை மிகவும் மோசமாக கை யாண்டு, இனமோதலை உருவாக்கினர்; இலங்கையில் கலவரம் வெடித்தது. கிட்டத் தட்ட ஐந்தாயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டனர்; உடைமைகள் நாசமாக்கப்பட்டன. கொழும்பில் கலவரம் தீவிரமாக இருந்தது. கலவரத்தில் சிதைந்து போன பல குடும்பங்கள், எங்கள் பகுதிக்கு அகதிகளாய் தஞ்சம் வந்தனர். அவர்கள் சொன்ன விஷயங்கள் கடுமையான அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தின. இலங்கை முழுவதும் கொந்தளிப்பான நிலையில், விடுதலைப் புலிகள் அமைப்பு இது தொடர்பான துண்டு பிரசுரங்களை கிராமங்கள் தோறும் வெளியிட்டு பிரசாரம் செய்தது. அதில் இருந்த விஷயங்கள் எங்களை ஈர்த்தன. இதைத் தொடர்ந்து எங்கள் பகுதியில் இருந்து 20 இளைஞர்கள் புலிகள் இயக்கத்தில் சேர்ந்தோம். உடனடியாக பயிற்சிக்காக வல்வெட்டித்துறையில் இருந்து, தமிழகத்தின் கோடியக்கரைக்கு படகில் அனுப்பினர். அங்கிருந்து மதுரை சென்றோம். அங்கு தான் பிரபாகரனை சந்தித்தோம். சேலம், கொளத்தூரில் இருந்த மையத்தில் தான் நான் பயிற்சி எடுத்தேன். இந்திய அரசு எங்கள் போராட்டத்தை ஆதரித்து, எல்லாவகை உதவியையும் செய்ததை இப்போதும் நன்றியுடன் நினைவு கூர்கிறேன்.

நீங்கள் புலிகளுடன் சேர்ந்த காலத்தில் இலங்கையில் பல்வேறு விடுதலை இயக்கங்கள் தோன்றியிருந்ததே...
பிளாட், ஈரோஸ், டெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப்., என்று பல அமைப்புகள் இருந்தன. இவை எல்லாமே இந்தியாவில் உதவி பெற்றன. ஆனால், இவைகளில் இல்லாத அமைப்பு ரீதியான ஒழுக்கம் புலிகள் இயக்கத்தில் இருந்தது. குடிப்பது, பெண்கள் மீதான தவறான கண்ணோட்டம் போன்ற பல்வேறு விஷயங்களில் தீவிரமான தனி மனித ஒழுக்கத்தை கடைபிடித்தது. எங்கள் குடும்பம் ஏற்கனவே கட்டுப்பாடு ஒழுக்கத்தை அதிகமாக வலியுறுத்தியது. இந்த பின்னணியால் தான் புலிகள் இயக்கத்தை தேர்ந்தெடுத்தேன்.

ஒழுக்கமான இயக்கத்தைச் சேர்ந்தவர்கள், தமிழகத்தில் தங்கியிருந்த போது, பல நேரங்களில் தங்களுக்குள் மோதிக் கொள்வதும், பொதுமக்களுடன் மோதிக்கொள்வதையும் நடைமுறையில் கடைபிடித்தார்களே. 1986ம் ஆண்டு தீபாவளியன்று சென்னை சூளைமேட்டில் சாலையில் சென்றவர்களை துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தினார்களே. பாண்டி பஜாரில் துப்பாக்கியால் மோதிக்கொண்டார் களே...
உண்மை தான். விடுதலை இயக்கம் என்று இந்தியாவால் அங்கீகரிக்கப்பட்டு, சகல உதவிகளையும் பெற்ற நாங்கள், அதன் பின் தான் உலக நாடுகள் பலவற்றாலும் விடுதலைப் போராளிகள் என்று அங்கீகரிக்கப்பட்ட நாங்கள், எப்படி பயங்கரவாதிகளாக மாற்றம் பெற்றோம் என்பதை சொல்ல வேண்டும்.விடுதலை இயக்கமாக அங்கீகரிக்கப்பட்டதை, அமைப்பின் தலைவராக இருந்த பிரபாகரன் முறையாகப் பயன்படுத்தவில்லை. அவரது எதேச்சதிகாரமான போக் கும், ஆணவமும், வரட்டு கவுரவமும் இதை பயங்கரவாத இயக்கமாக மாற்றியது.இந்திய அமைதிப்படையை அனுப்பி சமாதான முயற்சி நடந்தபோது, பல்வேறு பிரச்னைகள் நடந்தன. அவற்றை அத்துடன் விட்டிருக்க வேண்டும். ஆனால், நன்றி மறந்து, இந்தியாவுக்குள் புகுந்து, அங்கு ராஜிவ் காந்தியை கொலை செய்துவிட்டார். இப்படித்தான், இயக்கத்தை எதேச்சதிகாரமாக பயங்கரவாத இயக்கமாக மாற்றிவிட்டார்.

ராஜிவ்காந்தியை கொலை செய்வது பற்றிய முடிவு எடுத்த போது நீங்கள் உடன் இருந்தீர்களா? அப்போது இயக்க ரீதியாக விமர்சனங்கள் சொல்லப்படவில்லையா?
தெரியவே தெரியாது. ஆண்டன் பாலசிங்கத்துக்குக் கூட தெரியாது.

கொலை நடந்து முடிந்த உடனேயாவது தெரியுமா?
அப்போதும் தெரியாது. பின்னர், சிவராசன் ஆட்கள் பெங்களூரில் பிடிபட்டார்களே, அதுக்குப்பிறகு தான் இயக்கத்தில் அனைவருக்கும் தெரிந்தது. சிவராசனை அனைவருக்கும் தெரியும் என்பதால், இதை இயக்கம் தான் செய்தது என்று தெரிந்தது. தொடர்ந்து இயக்கத்தில் அது தொடர்பான விமர்சனங்கள் எழுந்தன. நானும் எனது கருத்தை தெரிவித்தேன். விடுதலைக்காக இயங்கிக் கொண்டிருக்கும் நாம், இது போன்ற செயல்களை செய்வது தேவையற்றது. இது இயக்கத்தை பாதிக்கும் என்று சொன்னேன். பிரபாகரன் அதை நியாயப்படுத்தினார். அமைதிப்படை செய்த காரியம் சரியல்ல... "தமிழ்ப் பெண்களை அவர்கள் கற்பழித்தனர்' என்று, பல விஷயங்களைச் சொல்லி நியாயப்படுத்தினார். மற்றொரு நாட்டில் சென்று ஒரு தலைவரை கொல்வது நியாயமான செயல் அல்ல; இதை எந்த நாட்டுக்காரனும் ஏற்கமாட்டான் என்று சொன்னேன். அதை அவர் ஏற்காமல் மழுப்பி விட்டார்.

இந்த காரணத்தை முன்வைத்து இயக்கத்தில் இருந்து பிரிந்து சென்றவர்கள் யாரும் உண்டா?
அப்படி யாரும் இல்லை. ஆனால் இனி இந்தியாவின் உதவி கிடைக்காது என்பது தெளிவாக தெரிந்தது. அதன்பின் தான், ஐரோப்பிய நாடுகளில் உதவி தேடப்பட்டது. தொடர்புகள் ஏற்படுத்தப்பட்டன.

இயக்கத்தை நடத்துவதற்கும், ஆயுதங்கள் வாங்குவதற்கும் பணம் வேண்டுமே. எந்த உற்பத்தியையும் சாராமல் இருந்த அமைப்புக்கு பணம் எப்படி வந்தது?
ஈழத் தமிழர்கள் அறிவாளிகள். பொருளீட்டுவதற்காக அவர்கள் பல நாடுகளுக்கும் சென்றனர். 40ம் ஆண்டு வாக்கிலே, ஐரோப்பிய நாடுகளில் குடியேறி பல்வேறு தொழில்களில் ஈடுபட்டவர்கள் ஏராளம். '83ம் ஆண்டு கலவரத்துக்குப்பின், வெளியேறி, ஐரோப்பா, அமெரிக்கா, கனடா என்று வெளிநாடுகளுக்கு சென்றவர்கள் ஏராளம். இவர்கள் மத்தியில் பிரசாரம் செய்து புலிகள் பணம் திரட்டினர். கண்டிப்பாக பணம் தரவேண்டும். அவர்கள் பற்றிய பட்டியல் இயக்கத்தில் இருந்தது. கண்டிப்பாக அவர்களிடம் பணம் வசூலிக்கப்பட்டது.

போராட்டத்துக்கான ஆயுதங்களை வாங்குவதற்கு பேரங்கள் நடத்தியது யார்?
கிழக்காசிய நாடுகளில் இருந்து தான் முதலில் ஆயுதங்கள் வாங்கப்பட்டன. கே.பி.என்., என்ற கே.பத்மநாபன் தான் ஆயுத பேரம் நடத்தியவர். கம்போடியா, இந்தோனேசியா, மலேசியா, தாய்லாந்து நாடுகளில் தான் வியாபாரிகளுடன் பேசி ஆயுதங்களை வாங்கி அனுப்புவார். அதன்பின், உக்ரேன் நாட்டில் இருந்து ஆயுதங்கள் வாங்கப்பட்டன. சீன தயாரிப்புகளும், உக்ரேன் கம்பெனிகள் மூலம் எங்களுக்கு கிடைத்துக் கொண்டிருந்தன.

ஆயுதங்களை சிக்கலின்றி எப்படி கொண்டு வந்தீர்கள்?
வெளிநாடுகளில் உள்ள வர்த்தக கம்பெனிகள் பெயரில் உள்ள கப்பல்களில் அனுப்புவர். அதை யாரும் கண்டுபிடிக்க முடியாது. பெரும்பாலும் வெளிநாடுகளில் உள்ள தமிழர்கள் பெயரில் இருந்த கப்பல்களில் தான் ஆயுதங்கள் வந்தன. பல நேரங்களில் உபயோகத்துக்கு இனி உதவாது என்ற நிலையில் உள்ள கப்பல்களில் தான் ஆயுதங்கள் கொண்டுவரப்படும். அத்துடன் அந்த கப்பல் அங்கேயே கிடக்கும்.

தமிழகத்தில் உள்ள தமிழர் கள் யாராவது ஆயுத ரீதியாக உதவி செய்திருக்கிறார்களா?
தமிழகத்தில் இருந்து ஆயுத ரீதியாக பல உதவிகள் கிடைத்திருக்கின்றன. வெடி பொருட்கள், கண்ணிவெடி செய்வதற்கான மூலப் பொருட்கள் தமிழகத்தில் இருந்து பலர் கடத்தி தந்துள்ளனர். அலுமினியம் பவுடர், பைபர் பிளாஸ்டிக் மெட்டரீயல் போன்றவையும் தமிழகத்தில் இருந்து கொண்டு வருவார்கள். அது இப்போது வரை கடத்தப்பட்டது. மன்னார்வளைகுடா வழியாத்தான் அதைக் கொண்டு வருவார்கள். இதை, இலங்கை ராணுவம் தற்போது தனது முழுக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. எனவே இனி கடத்தல் நடத்துவது கடினம்.

தமிழகத்தில், புலி ஆதரவு பேசும் தலைவர்களுக்கு இந்த ஆயுதக் கடத்தல் பேரத்தில் தொடர்பு இருந்ததா?
இருந்தது. இந்த கடத்தலின் ஊடாகத்தான், நெடுமாறன் வந்திருக்கிறார். வைகோ வந்திருக்கிறார். எல்லாரும் இல்லீகலாகத்தான் வந்தனர்; கள்ளத்தோணியில் தான் வந்தனர்.

ஆயுத கடத்தல் ரீதியான நேரடி தொடர்பு தமிழக தலைவர்களுக்கு இருக்கிறதா?
இருக்கிறது; பணம் விடுதலைப் புலிகளால் வழங்கப்படுகிறது. இதுதான் உண்மையான விஷயம். தமிழர்களுக்காக குரல் கொடுப்பதாகக் கூறும் பலத் தலைவர்களுக்கும் அந்த சப்போர்ட் தான், ஆயுதம் தயாரிப்பதற்கான மூலப் பொருட்கள் கடத்துவதற்கு உதவியாக உள்ளது. இதில் கிடைக்கும் பணம் தான் இவர்களை, புலிகளுக்கு ஆதரவாக பேச வைக்கிறது.

பணம் நேரடியாக தமிழகத் தலைவர்களுக்கு போய்ச் சேர்ந்ததா?
இல்லை. மீனவர்கள் போர்வையில் ஆயுத தயாரிப்புக்கான மூலப்பொருள் கடத்தப்படுகிறது. தமிழகத்தில் பல ஏஜென்டுகள், மீனவர்கள் போர்வையில் இதைச் செய்கின்றனர். இந்த ஏஜென்டுகளுக்கு பின்னணியில் புலி ஆதரவு பேசும் தமிழகத் தலைவர்கள் இருக்கின்றனர். அவர்கள் மூலமாக பணம் தாராளமாக போய் சேர்கிறது. இப்படி வரும் மூலப் பொருட்களை இலங்கை கடற்படை மடக்கிப் பிடிக்கிறது. இந்த கடத்தலை தடுக்கும் பொருட்டுத்தான், அடிக்கடி துப்பாக்கிச் சூடுகள் நடக் கின்றன. இலங்கை கடற்படை அனைவரையும் சந்தேகக் கண்ணுடன் பார்ப்பதால் தமிழகத்தில் பல அப்பாவி மீனவர்களும் பாதிக்கப்படுகின்றனர். இலங்கையில் தமிழர் வாழ்க்கை இவ்வளவு நெருக்கடிகளை சந்திக்க யார் காரணம்? இன்றைக்கு இலங்கையில் இந்த அழிவுகளும் விளைவுகளும் யாரால் நடக்கிறது? அது பிரபாகரனால் தானே நடக்கிறது. இதை தமிழ் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இவருடன் நான் 22 ஆண்டுகள் இருந்திருக்கிறேன். ராணுவத்துடனான அனைத்து சண்டைகளையும் நான் தான் நடத்தினேன். அவர் ஒரு முறை கூட போர்க்களத்துக்கு வந்தது கிடையாது. பிரபாகரன் என்றால் ஒரு டம்மி ஆள் போலத்தான். அரசியல் ரீதியாக முதிர்ச்சியடைந்த நபராக மாற்றுவதற்கு நாங்கள் முயற்சி செய்தோம். குறிப்பாக நானே அவரிடம் நேரடியாக பலமுறை பேசியுள்ளேன். நான் ஒருவன் தான் அப்போது அவரிடம் பேச முடியும். இயக்கத்தின் செயல்திட்டத்தை மாற்றியமைக்க வேண்டும். கொள்கைகளை மாற்ற வேண்டும். தனிநபர்களை கொல்வதை நிறுத்த வேண்டும்; பொதுமக்களை கொல்வதை நிறுத்த வேண்டும் என்று சொன்னேன். சிங்கள மக்களை கொலை செய்வதை நிறுத்த வேண்டும்; முஸ்லிம் மக்களுடன் இணக்கம் வேண்டும் என்று சொன்னேன்.

புலிகள் கட்டுப்பாட்டு பகுதியில் இருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டார்களே...
இது பிரபாகரனின் பாசிச மனநிலை. தான் என்ற அகங்காரத்தில் எடுத்த முடிவு. கிழக்கு மாகாணத்தில் இருந்து முஸ்லிம்களை வெளியேற்றிய போது நான் கடுமையாக எதிர்த்தேன். அங்கே தமிழ், சிங்கள, முஸ்லிம்கள் சேர்ந்து வாழ்கின்றனர். ஒருவரை ஒருவர் சார்ந்திருக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. இதை வலியுறுத்தி சொன்னேன். எதையும் கேட்கவில்லை. யாழ்ப்பாணம் பகுதியில் இருந்த முஸ்லிம்களை விரட்டியடித்தனர். வீடுகளில் இருந்த பொருட்களை சூறையாடினர். வர்த்தக மையங்களை கொள்ளையடித்து பொருட் களை தெருவில் போட்டு விற்றனர். நூறு கோடி ரூபாய்க்கு மேல் இப்படி பொருட்கள் விற்கப்பட்டது. ஒரு பொருளை கூட எடுத்துச் செல்வதற்கு அவர்கள் அனுமதிக்கப்படவில்லை. இப்போது போர்க்களத்தில் நிற்கிற பானு என்பவர் தான் சூறையாடுவதற்கு தலைமை ஏற்றவர். இவையெல்லாம் மறையாத வடுக்கள். இவற்றையெல்லாம் தமிழக மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும். தமிழர் பிரச்னையை தீர்க்க பல வாய்ப்புகள் இருந்தன. பேச்சுவார்த்தைக்கு சாதகமான சூழ்நிலைகள் இருந்தன. இவை எதையும் பிரபாகரன் பயன்படுத்திக் கொள்ளவில்லை. பேச்சுவார்த்தைகளுக்கும் வாய்ப்பு அளிக்கவில்லை.

நீங்கள் இயக்கத்தை விட்டு வெளியேறுவதற்கு இவைதான் காரணமா...
நான் வெளியேறுவதற்கு பல காரணங்கள் இருந்தன. 22 ஆண்டுகள் நான் போர்க்களத்தில் இருந்துள் ளேன். சண்டைகளுக்கு தலைமை ஏற்றிருந்தேன். ராணுவப் பொறுப்பாளராக நான்தான் இருந்தேன். அமைப்பில் 25க்கும் மேற்பட்ட பிரிவுகள் உள்ளன. அவை ஒவ்வொன்றுக்கும் ஒரு பொறுப்பாளர் இருந்தனர். அயல்நாட்டு உறவுக்கு என்று கூட பிரிவு இருக்கிறது. ராணுவத்துக்கு நான் தான் தலைமை பொறுப்பாளன். ஒரு நாட்டின் ராணுவ அமைப்பு போல் தான் செயல்பட்டோம். 30 ஆயிரம் வீரர்கள் இருந்தனர். இதில், ஆறாயிரம் பேர் பெண்கள். ஒரு கட்டத்தில், அரசியல் தீர்வுக்கு வாய்ப்பு இருக்கும் போது ஏன் போராட வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. குறிப்பாக 2000 ஆண்டுகளுக்கு பின், நடந்த பேச்சுவார்த்தைகளை கணக்கில் எடுக்க வேண்டும். 2001ம் ஆண்டில் நடந்த பேச்சுவார்த்தை முக்கியமானது. சர்வதேச சமூகத்தின் கண்காணிப்புடன் பேச்சு நடந்தது. பேச்சு வார்த்தைக் குழுவில் நானும் ஒருவனாக நியமிக்கப்பட்டிருந்தேன். உலக நாடுகளில் நாங்கள் பேசினோம். சமஷ்டி முறையிலான தீர்வு ஒன்றை எடுப்பதற்கு முயற்சி செய்தோம். கடைசியில் நார்வேயில் நடந்த பேச்சு வார்த்தையில் ஓர் ஒப்பந்தத்தை பரிசீலிக்கிறோம் என்பதாக ஒரு அறிக்கையை தயாரித்து ஒப்பந்தம் போடப்பட்டது. இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்து போடுவதற்கான இறுதி வடிவம் தயாரித்து முடிவு எடுக்கப்பட்ட போது, நாங்கள் பிரபாகரனிடம் இது பற்றி கேட்கவில்லை. அதற்கு ஒரு காரணம் இருந்தது. பேச்சு வார்த்தைக்கு எங்களை அழைத்த போதே, "பேச்சு பேச்சு என்று சொல்லி ஐந்து ஆண்டுகளை கடத்துங் கள். அதற்குள் ஆயுதங்களை வாங்கி குவித்து மீண்டும் தாக்குதல் நடத்தலாம்' என்று, பிரபாகரன் எங்களிடம் சொல்லி அனுப்பியிருந்தார். நாட்களைக் கடத்துவது என்றால் விஷயம் இல்லாமல் முடியாது. ஐந்து வருடம் என்பது இயலாது. சர்வதேச சமூகமே இதை பார்த்துக் கொண்டிருக்கிறது. என்ன செய்ய முடியும். மீண்டும் காலம் கடத்த முடியாது. ஒப்பந்தத்தை பரிசீலிப்பதாகத்தான ஒப்பந்தத்தில்தானே கையெழுத்துப் போடுகிறோம். நீங்கள் போடுங்கள் என்று பாலசிங்கத்திடம் நான் சொன்னேன். அவரும் சம்மதித்து கையெழுத்தைப் போட்டார். அதன்பின்தான் சொன்னார், "இதை நான் அங்கு கொண்டு வந்தால், பிரபாகரன் என்னை சுட்டுப்போடுவான். நான் என்ன செய்ய' என்றார். "நார்வேயிலிருந்து நீங்கள் நேராக லண்டனுக்கு போய்விடுங்கள். ஒப்பந்த பத்திரத்தை நான் கொண்டு போகிறேன்' என்று சொன்னேன். நானும், தமிழ்ச்செல்வனும் ஒப்பந்தத்துடன் இலங்கைக்கு கொண்டு வந்து மொழிப் பெயர்ந்து பிரபாகரனிடம் கொடுத்தோம். இதைப் பார்த்ததும் மிகுந்த கோபப்பட்டார். அதைத் தூக்கி வீசி எறிந்தார் பிரபாகரன். (தொடரும்)


****

அப்பாவித் தமிழரைக் காப்பாற்ற, புலித் தலைவர் சரணடைய வேண்டும்': தினமலர் இதழுக்கு கருணா அம்மான் அளித்த சிறப்பு பேட்டி - 02

நார்வேயில் நடந்த பேச்சுவார்த்தையில், ஓர் அமைதி ஒப்பந் தத்தை, "பரிசீலிக்கிறோம்' என, கையெழுத்திட்டு, ஒப்பந்தத்தைக் கொண்டு வந்து 2003ம் ஆண்டு மார்ச் மாதம் பிரபாகரனிடம் கொடுத் தோம். உடனே அதைத் தூக்கி வீசி எறிந்தார். "போராட்டத்தை விற்றுவிட்டு வந்து நிற்கிறீர்கள்' என்று, கத்தினார். "ஆச்சடா போச்சடா' என்று சத்தம் போட்டார். நான் சொன்னேன், நீங்கள் சொல்வது போல் இல்லை. போர்க்களத்தில் நான் தான் நிற்கிறேன். ஆயிரக்கணக்கில் ராணுவத்தைக் கொன்று குவித்துள்ளோம். போராளிகளும் மடிந்து போகின்றனர். ஆனால் மாற்றம் வந்துள்ளதா; வராது. போராளிகள் நம்பிக்கை இழந்து போகின்றனர். நாங்கள் எத்தனை பேரைக் கொன்றாலும், ராணுவமும் கொன்றுகொண்டுதான் இருக்கும். ஏனென்றால் அது ஒரு நாடு; நாட்டை எதிர்த்து போராடுகிறோம். உலகில் ஒரு நாடும் நம்மை அங்கீகரிக்கவில்லை. இந்தியாவின் ஆதரவும் இல்லை. அப்படியே ஆதரித்தாலும், பிரிவினை செய்து தனிநாடாக, இந்தியா ஒரு போதும் அனுமதிக்காது என, பிரபாகரனிடம் கூறினேன்.

இந்த சூழ்நிலையில் தான், பெடரல் மாதிரி ஓர் அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்று நாங்கள் விரும்பினோம். இதற்காக, சுவிட்சர்லாந்தில் தங்கியிருந்து அந்த நாட்டின் அரசின் மாதிரியை படித்தோம். அதே போல் ஓர் அமைப்பை இலங்கையில் கொண்டு வரவேண்டும் என்று தான் விரும்பினோம். அதன் அடிப்படையில் தான், ஒப்பந்தத்தில் கையெழுத்துப்போட துணிந்தோம். அது இந்த மனிதருக்கு விளங்கவில்லை. உடனே, பிரிவின் பொறுப்பாளர்களைக் கூப்பிட்டார் பிரபாகரன். "இவன் போராட்டத்தை விற்று வந்திருக்கிறான். எனக்கு துரோகம் செய்துவிட்டான்' என்று கூறினார்.

அந்த சூழ்நிலையை எப்படி சமாளித்தீர்கள்?

நான் போர்ச்சூழலை விளக்கினேன்; போராளிகளின் மனநிலையைச் சொன்னேன். அதுவரை 14 ஆயிரத்து 500 போராளிகள் மடிந்திருந்ததைச் சொன்னேன். இனி இவர்கள் என்ன நடவடிக்கை எடுப்பார்கள் என்பது எனக்குத் தெரியும். நான் தந்திரமாக நடந்து கொண்டேன். நான் நேராக மட்டக்களப்பு படைப் பிரிவுக்கு சென்று விட்டேன். அங்கு 6,000 போராளிகள் இருந்தனர். மறுநாள் கிளிநொச்சிப் பகுதிக்கு, 2,000 போராளிகளை அனுப்பச் சொன்னார்கள். நான் மறுத்துவிட்டேன். நான் சண்டையை விரும் பவில்லை; போராளிகளை அனுப்ப மாட்டேன் என்று கூறிவிட்டேன்.

அப்போது, கிழக்கு மாகாணத்தில் இருந்த போராளிகள் மனநிலை எப்படி இருந்தது?

இங்கே முக்கியமாக ஒன்றை சொல்ல வேண்டும். இரண்டு மாகாணங்களுக்கும் இடையே பெரிய இடைவெளி இருந்தது. மட்டக்களப்பு பகுதியில் படை பலம் அதிகம். யாழ்ப்பாணம் பகுதியில் பணபலம் அதிகம். மட்டக்களப்பு பகுதி தான் படையில் பலமாக இருந்தது. வடக்குப் பகுதியில் இருந்த தமிழர்களிடம் ஒரு ஆளை போராளியாக்க வேண்டும் என்று கேட்டால், 20 லட்சம் ரூபாய் பணத்தைக் கொடுத்து சமாளித்து விடுவார்கள். அந்த வீட்டில் உள்ளவரை உடனே ரகசியமாக புறவாசல் வழியாக வெளிநாட்டுக்கு அனுப்பிவிடுவார்கள். இதுதான் நடந்து கொண்டிருந்தது. அதுவரை போரில் மடிந்த போராளிகளில் 8,000 பேர் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்கள். வடக்கு மாகாணத்தில் மக்கள் தொகை அதிகம்; கிழக்கு மாகாணத்தில் குறைவு. ஆனால், படைப்பிரிவில் கிழக்கு மாகாண போராளிகள் தான் அதிகம் இருந்தனர். முஸ்லிம்கள் இதில் அடக்கமில்லை. படைப்பிரிவில் இருந்த இந்த முரண்கள் போராளிகளிடமும், பொதுமக்களிடம் அவ்வப்போது முணுமுணுப்பாக வெளிப்பட்டிருந்தது. இந்த விஷயத்தை எடுத்துச் சொல்லி, 2,000 போராளிகளை கிளிநொச்சிக்கு அனுப்ப முடியாது என்று சொல்லிவிட்டேன். அப்போது தான், பிரபாகரன் உத்தரவை முதன்முறையாக, நான் மீறினேன்.

அப்போதை சூழ்நிலை எப்படி இருந்தது?

உடனே என்னை தலைமையகத்துக்கு அழைத்தனர். உடனடியாக வரவேண்டும் என்றனர்; நான் மறுத்துவிட்டேன். அங்கு போனால் என்ன நடக்கும் என்று எனக்குத் தெரியும். சுட்டுத்தான் போடுவார்கள். எனவே, சண்டையில் விருப்பமில்லை என்று கூறிவிட்டேன். அப்போது நான் மிகவும் நிதானமாக செயல்பட்டேன். ஏற்கனவே இது போன்ற அனுபவம் ஒன்று இருந்தது. இந்தியப் படை வெளியேறிய போது, தமிழர்களுக்கான படை (டி.என்.ஏ.,) ஒன்று அமைக்கப்பட்டது. அந்த படையில் இருந்த தமிழ் இளைஞர்கள் 1,200 பேரை 18 நாளில் நாங்கள் கொன்று குவித்தோம். அது வீரமான செயல் அல்ல என்று எனக்குத் தெரியும். அவசரப்பட்டால் அதேப்போன்று ஓர் நிலை ஏற்படும் என்பதும் எனக்குத் தெரியும். அதனால் நிதானமாக செயல்பட்டேன். மீண்டும் நாகரிகமற்ற முறையில் எங்களுக்கு நாங்களே மோதிக் கொண்டு, எங்கள் ரத்தத்தையே ஆறாக ஓடவிடுவதில் எனக்கு விருப்பம் இல்லை. போராளிகளுடன் கலந்து பேசினேன். கிழக்கு மாகாணத்தில் போராளிப் படைப் பிரிவைக் கலைத்து விடுவது என்று முடிவு செய்து பிரபாகரனுக்கு தெரிவித்தோம். உடனடியாக 6,000 போராளிகளையும் வீட்டுக்குப் போகச் சொல்லிவிட்டேன். அவர்கள் அனைவரும் புலிகளின் இயக்கத்தை விட்டு வெளியேறி விட்டனர். படைப் பிரிவு கலைக்கப்பட்டுவிட்டது. கடைசியாக பிரபாகரனுக்கு ஒரு கடிதம் எழுதினேன். படைப்பிரிவு கலைக்கப்பட்டுவிட்டது. கலைத்தது நான்தான். எனவே போராளிகள் யாருடனும் மோதலில் ஈடுபடவேண்டாம். அப்படி மோதுவதானால் என்னுடன் மோதுங்கள். நான் இதற்கு காரணமான ஆள். இவ்வாறு கடிதத்தில் எழுதியிருந்தேன். 2003ம் ஆண்டு சித்திரை மாதம் இது நடந்தது. அதன்பின் நாங்களும் படைப்பிரிவின் முக்கியஸ்தர்களும் வெளிநாடு சென்றுவிட்டோம்.

அத்துடன் பிரச்னை முடிந்ததா?

முடியவில்லை. வடக்கு மாகாண போராளிகளைக் கொண்டு, கிழக்கு மாகாணத்தில் போர் தொடுக்க வைத்தார் பிரபாகரன். சொந்த நாட்டு மக்களையே, அன்னியர்கள் போல் பாவித்து கொலை செய்ய உத்தரவிட்டார். இந்த வெறியாட்டத்தில் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த 520 பேர், வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த புலிகளால் கொல்லப்பட்டனர். அப்போது மிகவும் வேதனை அடைந்தேன். மக்களை விட்டுவிட்டு வந்திருக்கக் கூடாதோ என்று நினைத் தேன். அந்த சூழ்நிலையில் அடுத்தக் கட்டமாக என்ன நடவடிக்கை எடுப்பது என்று யோசித்தோம். புலிகளிடம் இருந்து எங்கள் பகுதி மக்களை காக்க வேண்டிய கட்டாயம் இருந்தது.

இந்த சூழ்நிலையில் தான் இலங்கை அரசுடன் சேர்ந்தீர்களா?

இலங்கை அரசு எங்களை அழைத்தது. பேச்சுவார்த்தை நடத்தியது. அப்போது புலிகளிடம் இருந்து எங்கள் பகுதி மக்களை காப்பது பற்றி கேட்டோம். ஆயுதங்களை கீழேப் போடுவது பற்றி பேசினோம். கிழக்கு மாகாணத்தில் இலங்கை-இந்திய ஒப்பந்த அடைப்படையில் தீர்வு காண விரும்பித்தான் பேசினோம். ஆயுதப் போராட்டத்தை கைவிட விரும்பினோம். அதன்பின் தேர்தல் நடத்தப்பட் டது. எங்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள் வெற்றி பெற்றனர். முதல்வர் பதவியை பிடித்துள்ளோம். உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்தப் பட்டுள்ளன. அதிலும் எங்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

கிழக்கு மாகாண முதல்வர் பிள்ளையான், உங்கள் கட்சியைச் சேர்ந்தவர். அவருடன் முரண்பாடு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறதே?

இல்லை. இப்படித் தவறான தகவல் பரப்பப்படுகிறது. கிழக்கு மாகாணத்தில் தமிழர், சிங்களர், முஸ்லிம்கள் அதிகமாக வசிக்கின்றனர். அவர்கள் சார்ந்து வாழ வேண்டிய அவசியம் உள்ளது. இதற்கு தேவையான சூழ்நிலையை ஏற்படுத்துவதற்கு நாங்கள் முயற்சி செய்து வருகிறோம். இந்த நிலைமையை விரும்பாத சிலர், இது போன்ற தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர்.

கிழக்கு மாகாணத்தில் நிலைமை எப்படி இருக்கிறது?

அங்கு வளர்ச்சிப் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. மக்கள் சுபிட்சமாக வாழ தேவையான வளர்ச்சிக்கான திட்டங்களை அரசிடம் வலியுறுத்தி வருகிறோம். அரசு தரும் திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். தொழில் வளர்ச்சிக்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.

அங்கு வன்முறை சம்பவங்கள் தொடர்கிறதா?

நான் லண்டனில் இருந்த போது சில சம்பவங்கள் நடந்தன. நான் இங்கு வந்தவுடனே, அது போன்ற சம்பவங்கள் இனி நடக்காமல் தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்தோம். தமிழர் - முஸ்லிம் நட்புறவு அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. கிராம ரீதியாக அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு, பிரச்னைகளை பேசித் தீர்த்துக் கொள்ள கவுன்சிலிங் செய்து வருகிறோம். வன்முறைகளை தடுக்க எந்தெந்த வழிகளில் முடியுமோ அத்தனை வழிகளையும் கையாண்டு வருகிறோம்.

தமிழர் - சிங்களர்களிடையே குரோதம் குறைந்துள்ளதா?

குரோதத்தை வளர்த்ததே அரசியல் தலைவர்கள்தானே. வெறுப்புணர்வுகளை களையும் வகையில் பல செயல்பாடுகள் நடக்கின்றன. கிழக்கு மாகாண மக்களுக்கு பிரபாகரன் என்ற ஆளைத் தெரியாது. அவர் கிழக்கு பகுதிக்கு வந்ததும் இல்லை. அந்த ஆளை, கிழக்கு பகுதி தமிழ் மக்களுக்கு அறிமுகம் செய்தவன் நான்தானே. இப்போது, எங்களுடைய மக்களிடம், "பிரபாகரன் என்ற ஆளை தூக்கி எறியுங்கள். நாம் இலங்கை என்ற நாட்டில் வாழ்கிறோம். இது நமது நாடு. இது நமது ராணுவம். தேசிய அளவில் நாம் விட்டுக்கொடுத்து, இணக்கமாக வாழ வேண்டும்' என்று வலியுறுத்தி வருகிறேன். "பிரச்னைகளை நமக்குள் பேசித் தீர்க்க வேண்டும்' என்றும் கூறி வருகிறேன்.

விடுதலைப் புலிகளுடனான இலங்கை ராணுவத்தின் போர் உச்சக்கட்ட நிலையில் உள்ளதே?

இலங்கை ராணுவம் புலிகள் பரப்பளவை சுருக்கி வருகிறது. புலிகள் ஓடிக் கொண்டே இருக்கின்றனர். நான் படைப்பிரிவில் இருந்து வெளியேறிய பின் போர்முனையில் புலிகளுக்கு எந்த வெற்றியும் கிடைக்கவில்லை. கிழக்கு மாகாணத்தில் இருந்து விரட்டப்பட்ட அவர்கள், இப்போது வடக்கு மாகாணத்திலும் முற்றிலும் ஒடுக்கப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு பகுதியை ராணுவம் நெருங்கிவிட்டது. இந்த நிலை ஏற்படும் என்று எங்களுக்கு அப்போதே தெரியும். நாங்கள் சொன்னபோதே சமாதான ஒப்பந்தத்துக்கு பிரபாகரன் சம்மதித்திருந்தால் இப்போதைய நிலை ஏற்பட்டிருக்காது. தோல்வியடையாமல், பிரச்னைக்கு தீர்வு கண்டிருக்கலாம். பொதுமக்களும் கொல்லப்பட்டிருக்க மாட்டார்கள். 5000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இப்போதைய போரில் மடிந்திருக்கின்றனர். இதற்கெல்லாம் காரணம் பிரபாகரன் தான். பிரபாகரனின் பிடிவாதத்தால், புலிகள் இயக்கம் பயங்கரவாத இயக்கம் என்ற பெயரை மட்டும்தான் பெற முடிந்தது.

இந்த சூழ்நிலையில் பிரபாகரனின் வியூகம் எப்படி இருக்கும்?

புலிகளின் கடைசி நகரம் கிளிநொச்சி தான். அங்கு 80 ஆயிரம் பேர் வசித்தனர். அதை ராணுவம் பிடித்து விட்டது. இந்த நகரை விடமாட்டோம் என்று பிரபாகரன் வெளிநாட்டில் பிரசாரம் செய்து வந்தார். அவரது வாய்ச்சவடால் தகர்க்கப்பட்டுள்ளது. புலிகளின் இயக்கம் 40 சதுர கி.மீ., பரப்பளவுக்குள் சுருக்கப்பட்டுவிட்டது. முல்லைத்தீவு தான் ராணுவத்தின் அடுத்த குறி. கடற்படை வீரர்கள் இப்போது வடக்கு கடல் பகுதியில் இருந்து நெருக்கி வருகின்றனர். இந்த சூழ்நிலையில் பிரபாகரன், அந்த பகுதியில் வசிக்கும் அப்பாவி பொதுமக்களை மனித கேடயங்களாக பயன்படுத்தி வருகிறார். அவர்களை பிடித்து வைத்துள்ளார். தப்ப முயன்றால் சுட்டு விடுவோம் என மிரட்டி வைத்திருக்கிறார். பொதுமக்கள் தப்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.

ராணுவ நடவடிக்கையில் பொதுமக்கள் பாதிக்கும் வாய்ப்பு இருக்கிறதே?

வாய்ப்பு உண்டு. ஆனால் கிழக்கு மாகாணமும் இதேப் போன்று ராணுவ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. அங்கும் பொதுமக்களை கேடயமாக புலிகள் பயன்படுத்தினர். ஆனால் பொதுமக்களுக்கு பாதுகாப்பு கொடுத்து, புலிகளை அடக்கியது ராணுவம். பொதுமக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் ராணுவம் செய்தது. அதே போல்தான் இங்கும் நடக்கும். ஒரு விஷயத்தை புரிந்து கொள்ள வேண்டும். உலக நாடுகள் பலவும் புலிகள் இயக்கத்தை தடை செய்திருந்த போதும், இலங்கையில் அந்த இயக்கம் தடை செய்யப்படவில்லை. சில நாட்களுக்கு முன்தான் தடை செய்யப்பட்டது. அப்படியானால், இலங்கை அரசு எவ்வளவு நிதானமாக நடந்து கொள்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். பிரபாகரன் பிடியில் மனிதக் கேடயங்களாக உள்ள பொதுமக்கள் துணிந்து அங்கிருந்து வெளியேற வேண்டும். மட்டக் களப்பு மாவட்டத்தில் ராணுவ நடவடிக்கையின் போது, இதே போன்ற சூழ்நிலை ஏற்பட்டது. அப்போது 60 ஆயிரம் பொதுமக்கள் இதேப் போன்று வெளியேறினர். அவர்களை ராணுவம் பாதுகாத்தது. அனைவரும் புலிகள் என்று கூறி சுட்டு வீழ்த்திவிட வில்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

முல்லைத்தீவு பகுதியில் ராணுவ நடவடிக்கைகள் வெற்றியடையும் போது பிரபாகரன் நிலை என்னவாக இருக்கும்?

ராணுவம் இன்னும் சில நாட்களில் வெற்றியடையும் என்று அங்கிருந்து வரும் தகவலை வைத்து உறுதி செய்கிறேன். ராணுவம் வெற்றி யடையும் போது பிரபாகரனின் நிலை என்னவாகும் என்று சொல்ல முடியாது. உலக வரலாற்றில் பலரும் பிடிபட்டுள்ளனர். இவர் பிடிபடுவாரா அல்லது சயனைட் சாப்பிடுவாரா என்பதை உறுதி செய்ய முடியாது.பிரபாகரன் என்ற ஆள் வெளி உலகுக்கு தெரிவது போல் மனஉறுதி மிக்கவர் அல்ல. அவரை உறுதி மிக்க ஆளாக காட்டியது, போராளிகளின் தியாகம்தான். அவர் தஞ்சம் தேடி வெளிநாடுகளுக்கு போகவும் வாய்ப்பு உள்ளது.

புலிகள் இயக்க போராளிகள், சுற்றி வளைக்கப்படும் போது, தற்கொலை செய்யும் முடிவை எடுக்கிறார்களே?

இது பயிற்சி பெற்ற போராளிகள் எடுக்கும் முடிவு. ஆரம்ப காலத்தில் இருந்த பிரபாகரனும் சூழ்நிலைகளின் அடிப்படையில் இப்படிப்பட்ட முடிவை எடுக்கும் துணிச்சல் உள்ளவர்தான். பின்னர் அவரது வாழ்க்கை போக்கு மாறிவிட்டது. சொகுசு வாழ்க்கைக்கு வந்துவிட்டார். பல ஆயிரம் கோடி ரூபாய் பணம் வெளிநாட்டு வங்கிகளில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இந்த பணத்தை வைத்து வெளிநாடுகளில் தஞ்சம் தேடத்தான் முயற்சிப்பாரே தவிர, வேறுவகையான முடிவை அவர் எடுப்பார் என்று எனக்கு தோன்றவில்லை.

தமிழ தலைவர்கள் சிலர் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று கோரி வருகின்றனரே...

போர் நிறுத்தம் அவசியம்தான். பொதுமக்களை பாதுகாக்கத்தான் போர்நிறுத்தம் செய்ய வேண்டும்; பிரபாகரனைக் காப்பாற்ற அல்ல. போர் நிறுத்தம் அவசியம் என்றால், இந்த சூழ்நிலையில் பிரபாகரன் சரணடைய வேண்டியதுதானே. போர் நடவடிக்கைக்கு நான்தான் காரணம். அப்பாவி பொதுமக்கள் பாதிக் கப்படக் கூடாது என்றால் அவர் ராணுவத்திடம் சரணடைந்துவிடவேண்டியதுதானே. அவர் சரணடைந்தால், போர்நிறுத்தம் உடனடியாக அமலுக்கு வரும். இதை தமிழகத் தலைவர்கள் வலியுறுத்த வேண்டும். பிரபாகரனை ஒரு கதாநாயகனாக பார்ப்பதை நிறுத்த வேண்டும்.

****

புலித் தலைவர் பதுங்கியுள்ள இடம் எது? : தினமலர் இதழுக்கு கருணா அம்மான் அளித்த சிறப்பு பேட்டி - 03

தமிழர் பிரச்னை தொடர்பாக, நார்வே சமாதானக் கூட்டத்தில் ஓர் ஒப்பந்தத்தை பரிசீலிக்கிறோம் என்று கையெழுத்துப் போட்ட புலிகளின் அப்போதைய போர்ப் படைத் தளபதி கருணா அம்மானுக்கும் பிரபாகரனுக்கு மோதல் ஏற்பட்டது. புலிகளை உதறி வெளியேறிய கருணா அம்மான், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் என்ற அமைப்பை துவக்கி, எம்.பி.,யாக இலங்கையில் பதவி வகிக்கிறார். அவர் தினமலர் இதழுக்கு அளித்த பேட்டியின் தொடர்ச்சி...

தமிழகத்தில் சிலர் சித்தரிப்பது போல் பிரபாகரன் இல்லை. தமிழர் விடுதலைக்காக போராடுவதாகக் கூறிக்கொண்டே, தமிழ் மக்களையே வெட்டிச் சாய்ப்பவர். அமிர்தலிங்கம் போன்ற தலைவர்களை கொடூரமாக கொன்றவர். நீலம் திருச்செல்வம் போன்ற அறிவு மிக்க தலைவர்களை ஈவு இரக்கமின்றி கொன்று குவித்தவர். மாற்று இயக்கத்தில், போராடிய பத்மநாபா போன்றவர்களை இரக்கமின்றி கொன்றார். இலங்கை ராணுவ வீரர்களை விட, சொந்த மக்களை அதிகமாகக் கொன்று குவித்தது தான் இவரது சாதனை. அனைவரையும் கொன்று விட்டு யாரை வைத்து விடுதலையைக் கொண்டாட நினைக்கிறார். இதுபோன்ற பயங்கரவாதியை கதாநாயகனாக பார்ப்பதை முதலில் நிறுத்த வேண்டும். இந்த ஆளை ஹீரோவாக சித்தரிப்பது தமிழகத்துக்கு நல்லதல்ல. மாற்றுக் கருத்து சொல்வோரை துரோகி என்று முத்திரை குத்திவிடுவார். இப்போது என்னையும் துரோகி என்று தான் சொல்லிக் கொண்டிருக்கிறார். நல்ல நோக்கத்துக்காகத்தான் நான் வெளியேறினேன். அவரது பார்வையில் நான் துரோகியானதால் தான் எங்கள் மக்கள், இன்று நிம்மதியாக இருக்கின்றனர். ஓட்டளித்து எங்களை வெற்றி பெற செய்துள்ளனர்.

தலைவர்களை கொல்லும் முடிவை எடுப்பது யார்?
வேறு யார். சர்வாதிகாரமாக முடிவுகளை எடுப்பது பிரபாகரன் தான். முடிவை எடுத்து அதை செயல்படுத்த உரியவரை தேர்ந்தெடுத்து, அந்த பணிக்கான பொறுப்பாளர்களிடமும் மட்டும் தான் அது பற்றி பேசுவார். வேறு யாருக்கும் தெரியாது. மிகவும் ரகசியமாக வைத்திருப்பார்கள். சம்பவம் நடந்த பின்னர் தான், இயக்கத்துக்கு தெரியவரும்.

புலிக் கட்டுப்பாட்டு பகுதியில் நிர்வாக நடைமுறை எப்படி இருந்தது?
நிலம் புலிகள் கட்டுப்பாட்டில் இருந்தாலும், அங்கு இலங்கை அரசு நிர்வாக நடைமுறைதான் செயல்பட்டது. பள்ளிகளை அரசு தான் நடத்தியது. அரசு நாணயமுறைதான் புழக்கத்தில் இருந்தது. நில பத்திரப்பதிவும் அரசு நிர்வாகம் தான். நிலம் வாங்குவோரும், விற்பவரும் புலிகளுக்கு கப்பம் கட்ட வேண்டும். இது கட்டப்பஞ்சாயத்து மாதிரி நடக்கும். தனி நாணய புழக்கமோ, தனி நிர்வாகமோ அங்கு இல்லை.

போலீஸ், நீதி பரிபாலனம் போன்றவை?
நீதி நடைமுறை முதலில் கட்டப் பஞ்சாயத்தாகத்தான் நடந்தது. புலிகள் சொல்வதைக் கேட்க வேண்டும். அவர்களின் ஆதரவாளர்களுக்கு சாதகமான நடைமுறை. மிகவும் சீரழிந்து கிடந்தது. இதனால் மக்கள் அதிருப்தியடைந்தனர். அதன்பின் கொஞ் சம் கொஞ்சமாக புனரமைக்கப்பட்டது. உள்ளூர் போலீஸ் நடைமுறை உருவாக்கப்பட்டது. நீதிபரிபாலனமும் புலிகள் கட்டுப்பாட்டில் தான் நடந்தது. அதுவும் கேலிக்குரிய வகையில் தான் நடக்கும். குற்ற நடைமுறை விசாரணையில் வக்கீல் கள் 8, 9ம் வகுப்பு படித்தவர்களாக இருந்தனர். அவர்கள் என்ன சொல்கின்றனரோ அதைத்தான் இயக்கம் எடுத்துக் கொள் ளும். ஒரு பிரச்னையை அணுகி, அதன் சாதக பாதகங்களை உணர்ந்து செயல்படத் தகுத்த படித்த இளைஞர்கள் இல்லை. சிந்திக்கத் தெரிந்தவர்களை பிரபாகரனுக்குப் பிடிக்காது.

கிழக்கு மாகாணத்தில் இயல்பு நிலை திரும்பிவிட்டதா?
அங்கு புனரமைப்புப் பணி நடந்து வருகிறது. கல்வியிலும் தீவிர கவனம் செலுத்துகிறோம். மீன்பிடித் தொழிலை அபிவிருத்திச் செய்ய, இந்தியா மிகவும் உதவி வருகிறது. வளர்ச்சிப் பணிகள் நடந்தாலும், உடனடியாக நிலைமை மாறிவிடும் என்று சொல்லிவிடமுடியாது. 30 ஆண்டு இடைவெளி என்பது சாதாரணமானது அல்ல. மாற்றியமைக்க கடுமையாக உழைக்க வேண்டும். மக்களுக்கான உடனடி தேவைகளில் அதிக கவனம் செலுத்துகிறோம். வளர்ச்சியை மேற்கொள்வதிலும் கடும் சோதனைகளை கடக்க வேண்டியுள்ளது.

பணத்துக்காக, போதைப் பொருள் கடத்தலில் புலிகளுக்கு தொடர்பு உண்டா?
உண்டு. இது உலக அளவில் வியாபித்து இருக்கிறது. தமிழகமும் இதற்கு பயன்படுத்தப்படுகிறது. ஆப்கானிஸ் தான், கொலம்பியா போன்ற நாடுகளில் இருந்து போதைப் பொருட்களைக் கடத்துகின்றனர். இதில், தமிழகமும் மன்னார்வளைகுடாவும் முக்கிய கேந்திரம்.

தமிழக பிரமுகர்களுக்கு இதில் தொடர்பு உள்ளதா?
இருக்கலாம். புலிகள் பயங்கரவாத இயக்கம் என்று அனைவருக்கும் தெரிந்த பின்னும், அந்த இயக்கத்தை ஆதரித்து பேசுவதற்கு, இதன் மூலம் புழங்கும் பணம் காரணமாக இருக்கலாம். ஆனால் அது பற்றி எனக்கு எதுவும் தெரியாது.

இலங்கை அதிபரை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என்று தமிழகத் தலைவர் ஒருவர் கூறியுள்ளாரே?
இது வேடிக்கையான கோரிக்கை. இலங்கை ஒரு நாடு. தனித்தன்மை பெற்றது. உலக நாடுகள் பலவும் புலிகள் இயக்கத்தை தடை செய்தபிறகும், அந்த இயக்கம் பயங்கரங்களை அரங்கேற்றுவது தெரிந்தும், இலங்கை அரசு தடை செய்யவில்லை. இப்போது தான் தடை செய்துள்ளது. சமாதான தீர்வு ஏற்பட்டு, அரசியல் நீரோட்டத்தில் கலக்க வேண்டும் என்பதற்காக வாய்ப்பு கொடுத்திருந்தது. பிரபாகரன் அதை பயன்படுத்தவில்லை. தமிழகத்தில் பிறக்கும் பிள்ளைகளுக்கும் தெரியும், ராஜிவ் காந்தியை கொன்ற பயங்கரவாதி பிரபாகரன் தான் என்று. இப்படிப்பட்ட நிலையில், சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தப்பட வேண்டியது ஒரு நாட்டின் அதிபரையா? பிரபாகரன் என்ற பயங்கரவாதியையா? தமிழக மக்கள் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும்.

புலிகள் போர்ப்படையில் சிறுவர்கள் சேர்க்கப்படுவதாக கூறப்படுகிறதே?
ஆரம்ப காலத்தில் இது நடைமுறையில் இல்லை. போர்க்களங்களில் சேதம் அதிகரித்த போது, படைக்கு ஆட்கள் அதிகம் தேவைப்பட்டனர். போரில் மக்களும் அதிகமாக மடிந்து போயினர். படையில் சேர யாரும் ஆர்வம் காட்டவில்லை. தயாராகவும் இல்லை. போர் தீவிரமான போது, அதை சந்திக்க ஆட்கள் தேவைப்பட்டனர். சிறுவர் -சிறுமியரை கட்டாயமாக படையில் சேர்க்க வேண்டியிருந்தது. 16, 17 வயது சிறுவர்- சிறுமியர் சேர்க்கப்பட்டனர். சர்வதேச அளவில் போராளிக் குழுவில் சேர வயது வரம்பு 19 ஆகவும், ராணுவத்தில் சேர 18 ஆகவும் சட்டம் உள்ளது. இந்த நடைமுறையை, புலிகள் ஒரு காலகட்டத்துக்குப் பின் கடைபிடிக்கவில்லை.

இப்படி சேர்க்கப்பட்ட, சிறுவர் -சிறுமியர் கிழக்கு மாகாணப் படையில் இருந்து விடுவிக்கப்பட்டிருந்தால், இப்போது அவர்கள் நிலை என்ன?
இப்போது குடும்பங்களுடன் சேர்ந்து வாழ்கின்றனர். வாழ்க்கையை எதிர்கொள் வதில் அவர்களுக்கு சிக்கல் இருக்கிறது. பெண்களுக்குத்தான் அதிக சிக்கல். அவர் கள் பல பிரச்னையை எதிர்கொள்ள வேண் டியுள்ளது. முற்றாக வேறு வாழ்க்கை தளத் தில் அவர்கள் பயணம் செய்ய வேண்டியுள்ளது. சிக்கல்களை சமாளிக்க உளவியல் ரீதியான கவுன்சிலிங்கிற்கு யுனிசெப் நிறுவனத்துடன் ஓர் ஒப்பந்தம் செய் துள்ளோம்.

இலங்கையில் மனித உரிமை மீறல் நடப்பதாக கூறப்படுகிறதே?
பயங்கரவாத பிரச்னை உலக அளவிலானது. இலங்கையில் மட்டும் இது இல்லை. புலிகள் ஓர் பயங்கரவாத அமைப்பு. இதற்கு தமிழகத்தில் இருந்து சிலர் ஆதரவு தெரிவித்து, குரல் கொடுத்துக் கொண்டிருந்த போதே, மும்பையில் பயங்கரவாதிகள் தாக்கினர். ஒரு பயங்கரவாத இயக்கத்துக்கு ஆதரவாக குரல் கொடுப்பதாலேயே, மற்ற பயங்கரவாதிகள் ஊக்கம் பெறுகின்றனர். பயங்கரவாதத்தை ஒடுக்கும் முயற்சியைத்தான் இலங்கை அரசு எடுத்து வருகிறது. இதை மனித உரிமை மீறல் என்று சொல்ல முடியாது. புலிகள் இயக்கத்தை தங்கள் பிரதிநிதியாக தமிழ் மக்கள் சொல்லவும் இல்லை. ராணுவ நடவடிக்கையின் போது, சேதத்தை தவிர்க்க இயலாது. மீறல்களை தடுக்கவும் முடியாது. முடிந்த அளவு குறைக்க அரசை வலியுறுத்தி வருகிறோம்.

உள்நாட்டுப் போர் எப்போது முடிவுக்கு வரும்?
காலக்கெடு நிர்ணயிக்க முடியாது. அது ராணுவத்தின் தந்திரத்தைப் பொறுத்து அமையும். புலிகள் தோற்கடிக்கப்படுவது நிச்சயம். புலிகளிடம் முறையான தலைமை இல்லை; ஆள்பலம் இல்லை; ஆயுதம் இல்லை.

பிரபாகரன் எங்கு இருப்பார்?
முல்லைத் தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் தான் இருப்பார். அவரது பாதுகாப் புக்கு 1,000 போராளிகள் இருப்பார்கள். நிலப்பரப்பு சுருங்கும் போது, ராணுவ தாக்குதல் வலிமை பெறும். பிரபாகரன் தப்பமுடியாது.

வடக்கு மாகாணத்தில் தேர்தல் நடத்தப் போவதாக இலங்கை அதிபர் அறிவித்துள்ளாரே?
தேர்தலில் நாங்கள் பங்கேற்போம். நாங்கள் தேசிய அளவில் பெரிய கட்சியாக வளர்ந்து வருகிறோம். தமிழர் சிங்களர், முஸ்லிம் மக்கள் ஆதரவுடன் பெரும்பான்மை இடத்தை பிடிப்போம்.

வடக்கில் புலிகள் தவிர வேறு குழுக்கள் இயங்குகிறதா?
அரசியல் கட்சிகள் உள்ளன. கூட்டமைப்பு புலிகளிடம் பணம் வாங்கிக் கொண்டு, அவர்களுக்கு ஆதரவாக கத்திக் கொண்டிருக்கிறது. கத்தாவிட்டால் புலிகள் அவர்களைச் சுட்டுவிடுவார்கள். அங்கு நல்லத் தலைவர்கள் உள்ளனர். அவர்கள் விரைவில் தங்கள் செயல்திட்டத்தை மாற்றிக் கொண்டு சுதந்திரமாக இயங்க துவங்குவார்கள் என்று நம்புகிறேன். வடக்கில் ஆனந்தசங்கரி, டக்ளஸ்தேவானந்தா போன்றோர் ஒரு கூட்டமைப்பை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. காலப்போக் கில் நாங்களும் அந்தக் கூட்டமைப்பில் இணைய வாய்ப்பு உள்ளது. தமிழர்களின் வாழ்வில் அமைதியும் சமாதானமும் ஏற்பட வேண்டும் என்பது தான் எங்கள் விருப்பம்.

உலக மக்களிடம் நீங்கள் வைக்கும் வேண்டுகோள்?
புலம் பெயர்ந்து வாழும் தமிழர்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். தமிழர் முன்னேற்றம் என்ற பெயரில் கோடி கோடியாக பணத்தை தமிழர்களிடம் பிரபாகரன் வாங்குகிறார். அந்த பணம் தமிழ் மக்கள் முன்னேற்றத்துக்கு செலவிடப்படவில்லை. அது பிரபாகரனின் வங்கிக் கணக்கிற்கும், ஆயுதம் வாங்கவும் தான் செல்கிறது. எனவே புலிகள் இயக்கத்துக்கு பணம் கொடுப்பதை நிறுத்த வேண்டும். போரில் சிதைந்து போன பகுதி புனரமைப்புக்கு உலக நாடுகள் உதவ வேண்டும்.

இலங்கைத் தமிழர்களின் ஜாதியமைப்பு, போர்ச் சூழலால் சிதைந்துள்ளதா?
இலங்கை கிழக்கு மாகாணத்தில் ஜாதி தொடர்பான நெருக்கடி மிகவும் குறைவு. அதாவது வடக்குப்பகுதியில் 90 சதம் என்றால், இங்கு 5 சதவீதம் தான். யுத்தம், இடப்பெயர்வுகளால் பழைய அளவில் ஜாதிய அடக்கு முறை இல்லை. போர் முனையில் இருந்து தப்பி ஓடி முகாம்களில் தஞ்சம் அடையும் போது, அங்கு ஜாதி பார்த்துக் கொண்டிருக்கவா முடியும். ஆனாலும், முற்றாக ஒழிந்து விட்டதாகக் கூற முடியாது; யாழ்ப்பாணத்தில் உயர்ஜாதி என்று கூறிக் கொள்பவர்கள், பிரபாகரனைக் கூட ஜாதி ரீதியாக ஏற்றுக் கொள்வதில்லை.

கிழக்கு மாகாணத்தில் திட்டங்களை செயல்படுத்துவதில் சிக்கல் உண்டா?
கிழக்கில் மருத்துவ உதவி அதிகமாகத் தேவைப்படுகிறது. அரசு மருத்துவமனைகளில் டாக்டர்கள் எண்ணிக்கை குறைவு. சிங்கள டாக்டர்களை அழைத்து வருகிறோம். அப்படி வந்த டாக்டர் ஒருவரை புலிகள் சுட்டுக் கொன்றனர். அதேப் போன்று கிழக்கு மாகாண பல்கலையில் படித்த சிங்கள மாணவர் ஒருவரை புலிகள் சுட்டுக் கொன்றுவிட்டனர். இது போன்ற அட்டூழியங்களால் திட்டங்கள் செயல்படுத்துவதில் சிக்கல் ஏற்படுகிறது. இவற்றை தீவிரமாக கண்காணித்து வருகிறோம். ஒரு விஷயத்தை நினைவில் கொள்ள வேண்டும். '83ம் ஆண்டு ராணுவ வீரர்கள் 13 பேரைக் கொன்றதால் தான் கலவரம் பரவியது. இன்று பல சம்பவங்கள் நடந்த போதும், பெரிய பாதிப்பு ஏற்படவில்லை. அதனால் தான் இந்த அரசை நம்புகிறோம். இதை புரிந்து கொண்டு, இணக்கத்தை ஏற்படுத்தி அதன் மூலம் வளர்ச்சிப் பணிகளை திட்டமிட வேண்டியுள்ளது.

உங்கள் திருமண வாழ்வு பற்றி...
எனக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன். மனைவி படித்தவர். இயக்கத்தில் நிர்வாகப் பிரிவில் பணியாற்றிய போது காதலித்து திருமணம் செய்து கொண்டோம். வெளிநாட்டில் வசிக்கின்றனர். திருமணம் முடிந்ததில் இருந்தே பிரிவு என்பது இயல்பாகத்தான் இருக்கிறது. முதல் இரண்டு குழந்தை பிறந்த போதும் போர் முனையில் தான் இருந்தேன். பிறந்து ஆறு மாதம் கழித்துதான் அவர்களை பார்க் கும் வாய்ப்பு கிடைத்தது. பிரிந்து இருப்பது சாதாரணமானதுதான்.

புலிகளிடம் காதல் இருந்ததா?
நான் இயக்கத்தில் சேர்ந்த துவக்க காலத்தில் கடுமையான கட்டுப்பாடுகள் இருந்தன. சட்டத்திட்டங்கள் மிகவும் இறுக்கமாக இருந்தன. அண்ணன் பிரபாகரன் காதல் வயப்பட்டு திருமணம் முடித்த போது, அந்த சட்டத் திட்டங்கள் மாற்றப்பட்டு, இயக்கத்துக்குள் காதல் மலர்ந்தது. ஆனாலும் இயக்கம் மிகவும் கட்டுப்பாடானது.

புலிகள் இயக்கத்தில் பெண்கள் எப்படி நடத்தப்பட்டனர்?
பால் வேற்றுமைகள் இல்லை. படைப்பிரிவிலும் சமமாக நடத்தப்பட்டனர். போர்முனையில் உயிரிழப்புகள் கூட சமமான அளவு இருந்தது. அந்த அளவு, பெண்கள் வலிமையாக சண்டைப் போட்டனர். நிகராக என்று சொல்லக் கூடாது; எல்லாவகை பயிற்சிகளையும் எடுத்துக் கொண்டு முக்கிய பொறுப்புகளில் இருந்தனர். படைப்பிரிவுகளை வழி நடத்தவும் செய்தனர். பல போர்முனைகளில் ஒரு வேளை சாப்பிட்டு விட்டு, ராணுவத்தை சந்தித்துள்ளோம். மருத்துவ வசதியில்லாமல் கொடுமைகளை அனுபவித்துள் ளோம். இதனால் பலரை இழந்துள்ளோம். எங்கள் தியாகத்தை ஒரு உபயோகமும் இல்லாமல், பயங்கரவாதமாக மாற்றிவிட்டார் பிரபாகரன்.

ராணுவ வசமாகியுள்ள ஆனையிறவு எப்போது புலிகளிடம் வந்தது?
ஆனையிறவு ராணுவ முகாமை என் தலைமையிலான படை 2000ம் ஆண்டு கைப்பற்றியது. வன்னியையும் குடா நாட்டையும் இணைக்கும் முக்கிய பகுதி என்பதால் இதை பிடித்து வைத்திருந்தோம். இப்போது ராணுவ வசமாகியிருப்பதால் புலிகளுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

புலிகளிடம் எத்தனை விமானங்கள் உள்ளன?
நான் இருந்த போது மைக்ரோ விமானங்கள் ஆறு இருந்தன. அவற்றை இயக்குவதற்கு பெரிய ஓடுதளம் தேவையில்லை. சாதாரணமாக ரோட்டில் கூட ஓட்டி பறக்கலாம். கடைசி கட்டமாக விமானங்களில் பறந்து தற்கொலைப் படை தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளது. மூன்று சிறிய டேங்குகளும் இருந்தன. அவற்றை பயிற்சிக்காக மட்டும் பயன்படுத்தினோம்.

துப்பாக்கியும் குண்டும் ஓயாமல் முழங்கிய போர்முனையில் இருந்த நீங்கள், இப்போது எப்படி உணர்கிறீர்கள்?
மாற்றம் ஒன்றும் பெரிதாக இல்லை. அப்போது ராணுவத்தை எதிர்த்து போரிட்டோம். இப்போது அதே ராணுவ வீரர்களின் அதிநவீன துப்பாக்கிகளுக்கு நடுவில் பாதுகாக்கப்படுகிறேன். இரண்டும் இருவேறு அனுபவங்கள். போர்க்களத்தில் எல்லா ரக துப்பாக்கியையும், வெடிகுண்டுகளையும் கையாண்டவன் நான். மிகவும் ஒல்லியாகத்தான் இருப்பேன். எங்களிடம் இருந்தது வலிமை குறைந்த படை. அந்த படையை பயன்படுத்தி வெல்ல வேண்டும். இதற்கு தந்திரங்களை கையாண்டேன். அறிவியல் பூர்வமாக சிந்தித்து, படைகளை எதிர்கொண்டு வென்றோம். வீரர்களிடம் எளிமையாக பழகுவேன். என்னை அம்மான் என்று அழைப்பார்கள். அம்மான் என்றால் யாழ்ப்பாணத் தமிழர்கள் பயன்படுத்தும் கவுரவமிக்க வார்த் தை. பிரபாகரனை அண்ணன் என்போம். அவரது பெயரை ரகசிய குறியீடாக எச்.ஏ., என்று அழைப்பார்கள். அந்த பெயரில் தான் ரகசிய தகவல்கள் வரும்.

தமிழகத்தில் இருந்து என்னவிதமான உதவிகளை எதிர்பார்க்கிறீர்கள்?
தமிழகத்தில் சிலர் புலிகளுக்கு ஆதரவாக பேசி வருகின்றனர். தமிழ் இனம் பூண்டோடு அழிந்துவிடும் என்று சொல்கின்றனர். இப்படியெல்லாம் பேசுவோர், உள்நாட்டுப் போரில் பாதிக்கப்பட்டு, பல்லாயிரம் தமிழர்கள் தமிழகத்தில் அகதியாக தஞ்சம் புகுந்திருக்கின்றனர் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அவர்களுக்கு எந்த அடிப்படை வசதியும் இல்லை; கல்வி இல்லை; சுகாதாரம் இல்லை. உங்களைத் தேடி ஓடிவந்திருக்கும் எங்கள் மக்கள் வாழ்வில் மலர்ச்சியை ஏற்படுத்துங்கள். அவர்களின் கல்விக்கு உதவுங்கள். எந்த தலைவராவது அவர்களின் நிலைமை யோசித்துப் பார்த்திருப்பீர்களா? அவர்களின் வாழ்நிலையை நேரில் சென்று ஆய்வு செய்து அதற்காக அரசிடம் குரல் கொடுத்திருக்கிறீர்களா? அவர்களும் இலங்கைத் தமிழர் தானே. அவர்களின் வாழ்க்கைக்காக நிதி திரட்டுங்கள். உயர்வு படுத்துங்கள். நன்றியுடன் உங்களை நினைவு கூர்வோம். தமிழகத்தில் இருந்து பலர் கள்ளத்தோணியில் இலங்கையில் தமிழர் பகுதிக்கு வந்து சென்றுள்ளனர். இந்திய அமைதிப்படையுடன் புலிகள் சண்டைப் போட்டுக் கொண்டிருந்த சூழ்நிலையில், அந்த நாட்டில் இருந்து கொண்டே, அந்த நாட்டுக்கு எதிராக கள்ளத்தனமாக வந்து சென்றீர்கள். அதை விடுவோம். எந்த சூழ்நிலையிலாவது, இந்திய அரசின் அனுமதி பெற்று அதிகாரப்பூர்வமாக பாதிக்கப்பட்ட பகுதிகளை தமிழகத் தலைவர்கள் யாராவது வந்து பார்த்தது உண்டா? பிரபாகரன் செய்யும் பொய் பிரசாரத்தை நம்புகிறீர்கள். இங்கு என்ன நடக்கிறது என்பதை கண்திறந்து பாருங்கள். புலி ஆதரவு கோஷத்தை விடுத்து, உண்மை நிலையை புரிந்து கொண்டு அமைதிக்கு குரல் கொடுங்கள். போரால் சிதைந்து போன பகுதிகளை கட்டி எழுப்ப உதவுங்கள். பின் தங்கிய பகுதிகளில் தொழில் துவங்கி, வளர்ச்சிக்கு வித்திடுங்கள்.

போர் முடிவுக்கு வந்தால் அமைதி திரும்புமா? அதை அனைவரும் ஆதரிப்பார்களா?
அமைதி திரும்பும். அதை அனைவரும் ஆதரிப்பார்களா என்று சொல்ல முடியாது. தனி அதிகாரம், தனி நாடு என்று வறட்டு கவுரவம் பிடித்து வெளிநாடுகளில் வாழும் பல தமிழர்கள் பேசக்கூடும். இங்கே இருப்பவர்களில் சில தலைவர்கள் கூட கவுரவம் பார்க்கலாம். அவர்களுக்கு இங்குள்ள நிலைமை தெரியாது. அவர்கள் இங்கு வரப் போவதும் இல்லை. அவர்கள் வசதியான வாழ்க்கை அமைத்துக் கொண்டு மேற்கத்திய கலாசாரத்துடன் இணைந்து கொண்டவர்கள். இங்கு வாழும் ஏழை, எளிய மக்களைப் பற்றி நாங்கள் சிந்திக்கிறோம். அதனால் அவர்களின் பேச்சு எடுபடாது. இலங்கையில் அமைதி திரும்பி தமிழர் வாழ்வு மலரும். இவ்வாறு கருணா அம்மான் பேட்டியளித்தார்.


š இப்பதிவை மின்னஞ்சலிட


மக்கள்ஸ் கருத்து ::


இவர் கொஞ்சம் பொய் சொல்லுரார்.ஆனாலும் பல விசையங்கள் ஏத்துக்கத்தான் வேணும்.பாப்போம் என்ன நட்க்குதுன்னு.நல்லது நடந்தா சரிதான் ((-:
 



சரி, உங்க கருத்து ??