<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar/20242795?origin\x3dhttp://mugamoodireader.blogspot.com', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

என் நூலகம்

இது என் ரசனையின் பத்தாயம். படைப்பாளிகளே எழுத்தின் உரிமையாளர்கள். சேமிப்பில் ஏதும் ஆட்சேபம் இருப்பின் செய்து அறியத்தரவும்.

 

ஜெயமோகன் நேர்காணல்

“ஒரு சோட்டா கவர்மென்ட்டுக்காக ஒருவன் நாவல் எழுதுவானா என்ன?!” -
சந்திப்பு: சுகுணா திவாகர், வெய்யில்
படங்கள் : தி.விஜய்
விகடன் தடம், 2016-AUG-01

சமகாலத் தமிழ் இலக்கியத்தில் முக்கியமான எழுத்தாளர் ஜெயமோகன். நீண்டதொரு வெளிநாட்டுப் பயணத்துக்குப் பிறகு அப்போதுதான் ஊர் திரும்பி இருந்தார். அன்று மாலையே மீண்டும் ஒரு பயணமாம். நாகர்கோவிலில் அவரது இல்லத்தில் சந்தித்தபோது, உற்சாகமாக இருந்தார். இளங்காலை நேரம் அது. தேநீர் பருகியபடி, நேர்காணலுக்கான சம்பிரதாயங்களின்றி இயல்பாக உரையாடலுக்குள் நுழைந்தோம். சினிமா, கலை, இலக்கியம், அரசியல், மதம், வரலாறு என நீண்டுசென்ற கேள்விகளும் பதில்களும்...

‘‘ஒரு பக்கம் தமிழ் எழுத்தாளர்கள் என்றாலே குடி, கலகம், ஒழுங்கின்மை, மிகக்குறைவாக எழுதுவது என்று ஒரு தோற்றம் உண்டு. அதற்கு மாறாக நீங்கள் நிறைய எழுதுகிறீர்கள். திட்டமிட்ட நேர ஒழுங்குடன் இருக்கிறீர்கள். இது எப்படி சாத்தியமாகிறது?’’

‘‘நீங்கள் குறிப்பிடுகிற இலக்கியவாதிகளின் முகத்திற்கு ஒரு கலாசாரப் பின்னணி உண்டு. அறுபது, எழுபது காலகட்டம் வெறுமையும் விரக்தியும் நிறைந்த காலம். சுதந்திர இந்தியாவின் மீதான நம்பிக்கைகள் குலைந்திருந்த காலம் அது. கடுமையான வேலையில்லா திண்டாட்டம், அனைத்து அரசியல் நம்பிக்கைகளும் தோற்றுப்போகும் நிலை. அப்போதுதான் நக்சல்பாரி இயக்கம் தோன்றியது. இப்படியாக அந்தச் சோர்வு காலத்தை பிரதி பலிப்பதாகத்தான் அன்றைய இலக்கியம் இருந்தது.

மேலும், தமிழில் இலக்கியத்துக்கு எந்த மரியாதையும் கிடையாது. வாசிப்பவர்களும் குறைவு. ஒரு கதையை எழுதினால், அது பிரசுரமாக இரண்டு, மூன்று வருடங்கள் ஆகும் நிலையெல்லாம் இருந்தது. ஆக, ஒருவர் தனது வாழ்க்கையிலேயே 15 கதைகள்தான் எழுத முடியும். அரசியல் ரீதியான சோர்வு, யாரும் கவனிக்கவில்லை என்கிற விரக்தி ஆகியவற்றைத்தான் அன்றைய இலக்கியவாதிகள் பிரதிபலித்தார்கள்.

ஆனால், உலகளவில் முக்கியமான மாஸ்டர் எழுத்தாளர்கள் யாருமே இப்படி இருந்தவர்கள் கிடையாது. வரலாற்றை மாற்றியமைத்த படைப்பாளிகள் எல்லோருமே சலிக்காமல் பல வருடங்கள் உழைத்தவர்கள். டால்ஸ்டாய், தஸ்தாயெவ்ஸ்கி, காப்ரியல் கார்சியா மார்க்வெஸ், தாகூர் இவர்களோடு தமிழில் எழுதியவர்களை ஒப்பிட்டால், மிகக் குறைவாகவே எழுதியிருக்கிறார்கள். என்னுடைய முன்மாதிரிகள் மேற்கண்ட  மாஸ்டர் எழுத்தாளர்களே ஒழிய, சோர்வு காலத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல. நான் எழுதவரும்போது அந்தச் சோர்வு காலம் முடிந்திருந்தது. எனக்குத் தனிப்பட்ட வாழ்வு சார்ந்த சோர்வு இருந்தது. அரசியல் சார்ந்த சோர்வு இருந்தது. ஆனால், நான் அவற்றிலிருந்து ஒரு தீவிரத்தையும் ஊக்கத்தையுமே உணர்ந்தேன். என்னுடைய முன்னுதாரணம் டால்ஸ்டாயோ தஸ்தாயெவ்ஸ்கியோதானே தவிர, வருடத்திற்கு இரண்டு மூன்று கதை, கவிதைகள் எழுதுகிறவர்கள் அல்ல!’’

‘‘தமிழில் வாசிப்புப் பழக்கம் குறைந்து வருவதாகச் சொல்லப்படுகிறது. ஆனால் நீங்களோ, `வெண்முரசு’ போன்ற பெரிய படைப்புகளை எழுதுகிறீர்களே?’’

‘‘இது எத்தனை பேருக்குச் சென்று சேரும்... எத்தனை பேர் படிப்பார்கள்... அது என்னவிதமான மாற்றங்களை உருவாக்கும் என்கிற கணக்குகளோடு எழுதினால், என்னால் எதுவும் எழுதவே முடியாது. மோனியர் மோனியர்-வில்லியம்ஸ் என்ற ஜெர்மானிய அறிஞர் 36 வருடங்கள் சமஸ்கிருத அகராதிக்காக உழைத்திருக்கிறார். ஆனால், அதை முடிப்பதற்குள் அவர் இறந்துவிட்டார். அதற்கான புகழோ, பணமோ, அங்கீகாரமோ, எதுவுமே அவருக்கு வாழும்போது கிடைக்கவில்லை. ஆனாலும், அவர் அதை ஏன் செய்தார் என்றால், அதன் மூலம் கிடைக்கின்ற நிறைவு. ஆக, எந்த ஒரு படைப்பின் மீதும் அது தருகிற நிறைவுதான் முக்கியமே தவிர, உடனடியாக அது எத்தனை பேரைச் சென்று சேர்கிறது என்பதே அல்ல.

`வெண்முரசு’ எழுதத் தொடங்கும்போது, நான் எனது எட்டு நண்பர்களிடம் பேசினேன். ‘கடைசி வரை நீங்கள் எட்டு பேரும் வெண்முரசை முழுவதுமாக வாசிக்க வேண்டும்’ என்ற உறுதிமொழியை வாங்கினேன். இந்தக் குறைந்தபட்ச மனநிலையில்தான் எழுதத் தொடங்கினேன். ஆனால், இன்று `வெண்முரசை’ ஐம்பதாயிரம் பேர் படிக்கிறார்கள்.

அப்புறம் வரலாற்றுரீதியாக நீங்கள் கவனித்துப் பார்த்தால், வாசிக்கப்படக்கூடிய பக்கங்களும் அளவும் கூடுகிறதே தவிர குறையவில்லை. `சிலப்பதிகார’த்தை நீட்டி அடித்தால், அறுபது பக்கங்கள்தான் வரும். `கம்பராமாயணம்’, `பொன்னியின் செல்வனி’ல் பாதிதான் வரும். எப்பொழுது அச்சு இயந்திரம் வந்ததோ, அப்போதே நீங்கள் நீளநீளமாக வாசிக்க ஆரம்பித்துவிட்டீர்கள். அச்சில் இருந்து இணைய ஊடகத்திற்கு வரும்போது இன்னும் அதிக வாசிப்பிற்குத்தான் வருகிறீர்களே தவிர, வாசிப்புக் குறையவில்லை.

 `ஹாரி பாட்டர்’ போன்ற சிறுவர்களுக்கான கதைப்புத்தகம் இவ்வளவு விற்கும் என்று 20 வருடங்களுக்கு முன்பு உங்களால் சொல்லியிருக்க முடியுமா? சிறுவர்களுக்கு 200 பக்கமே அதிகம் என்பார்கள். ஆனால், 700 பக்கங்களுடன் புத்தகம் விற்கிறது. ஆக, வாசிப்பு அதிகரித்துக்கொண்டுதான் இருக்கிறது. வாசிப்புக்கு ஏற்றவாறு வாசிப்பு ஊடகத்தை, தகுதியானதாக நாம்தான் மாற்ற வேண்டும்.’’

‘‘ஆங்கில எழுத்துருவில் தமிழை எழுதுதல் என்ற கருத்தை நீங்கள் முன்வைத்தபோது, ‘அது தமிழ்மொழியை அழிக்கும் யோசனை’ என்று கடும் எதிர்ப்பு எழுந்ததே?’’


‘‘அறிந்தோ அறியாமலோ எல்லோரின் மொழியாகவும் ஆங்கிலம் ஆகிவிட்டது. ஃபிரான்ஸ், இத்தாலி போன்ற நாடுகளில் நம்மைவிட ஆங்கிலத்திற்கு எதிர்ப்பு அதிகம். ஆனால், அவர்களுக்கும் உயர்கல்விக்கு ஆங்கிலம்தான் பயன்படுகிறது. ஐரோப்பிய மொழிகள் அனைத்திற்கும் ரோமன் லிபிதான் பயன்படுத்தப்படுகிறது. இது அவர்களுக்கான ஒரு முக்கியமான செளகர்யம். இரண்டு லிபிகளை மனதில் வைத்துக்கொண்டு படிக்கவேண்டி வரும்போது, ஏதாவது ஒன்று மேலாதிக்கம் பெறும். இன்னொன்று மறக்கப்படும் என்பது நடைமுறை எதார்த்தம். எல்லோருக்கும் ஒரே லிபியாக இருந்தால் படிக்க எளிமையாக இருக்குமே என்பது ஒரு யோசனை. இன்றைக்கு ‘நான் உன்னைக் காதலிக்கிறேன்’ என்பதைக்கூட தமிங்கிலீஷில் எஸ்.எம்.எஸ் அனுப்பும் தலைமுறை இது.

ஆங்கில லிபிக்கு பழக்கப்படும் சமூகத்திற்கு நாளையே நாம் `வெண்முரசை’ ஆங்கில லிபியில் தரவேண்டி வரலாம். தமிழ் லிபி அறிந்தவர்கள் மட்டுமே வாசிக்க முடியும் என்கிறபட்சத்தில், அது வாசிக்காமல் போகக்கூடிய சாத்தியம் இருக்கிறது.

தமிழின் வரலாறு தெரிந்தவர்களுக்கு இந்த ‘சென்டிமென்ட்ஸ்’ இருக்காது. பிராமி, வட்டெழுத்து, இன்றைய தமிழ் லிபி என மாறி மாறித்தான் தமிழ்மொழி வந்திருக்கிறது. பிராமியில் இருந்து வட்டெழுத்திற்கோ, வட்டெழுத்திலிருந்து தற்கால எழுத்துருவிற்கோ மாறும்போது, தமிழ் அழிந்துவிடவில்லையே. எழுத்துரு என்பது ஓர் அடையாளம்தான்!”

‘‘திரைப்படங்களுக்குத் தொடர்ந்து எழுதிவருகிறீர்கள். கமல், ஷங்கர், பாலா, வசந்தபாலன், மணி ரத்னம் போன்றவர்களுடனான உங்களது அனுபவங்கள் குறித்துச் சொல்லுங்கள்...’’

‘‘நான் சினிமாவிற்கு எழுதுவதை ஒரு தொழில் என்றுதான் கருதுகிறேன்.

பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் என்னுடைய திறன்சார்ந்த பங்களிப்பை வழங்கியது போலவே, சினிமாவிலும் அவர்கள் எதிர்பார்க்கிற பங்களிப்பை வழங்கி, அதற்கான பணத்தைப் பெற்றுக்கொள்கிறேன். அவ்வளவுதான். மற்றபடி ஒரு சினிமாவின் பிரதான பங்களிப்பாளனாக என்னை நான் நினைத்துக்கொண்டதே இல்லை. இன்றைக்கும் தமிழ் சினிமா என்பது இயக்குநரின் சினிமாதான். ஓர் இயக்குநருக்கு புகைப்படக் கலைஞர், கலை இயக்குநர் போன்றோர் எப்படி உதவி செய்கிறார்களோ, அதுபோல நானும் எழுத்தின் வாயிலாக உதவிசெய்கிறேன், அவ்வளவுதான். நான் பணியாற்றிய எல்லாப் படங்களும் இயக்குநர்களின் படங்கள்தானே தவிர, என்னுடைய படம் அல்ல!”

``எழுத்தாளர் என்ற வகையில் சினிமா உங்களுக்கு எந்த வகையில்  உதவியாக இருக்கிறது?”

“ஓர் எழுத்தாளரின் முக்கியமான காலம் என்பது, எழுதுவதற்கான துடிப்பும் முதிர்ச்சியுமான நாற்பதிலிருந்து அறுபது வயது வரைதான். பெரும்பாலும் தமிழ் எழுத்தாளர்கள் இந்தக் காலகட்டத்தில் வாழ்க்கைத் தேவைக்காக கடுமையாக உழைக்கவேண்டியிருக்கும். அப்படியே உழைத்தாலும் போதுமான வருமானமும் இருக்காது. ஆனால், சினிமா என்னைப் பெரிய அளவில் இந்த நிலையிலிருந்து விடுதலை செய்தது. என் நேரம் முழுக்க என்னிடம் இருக்கிறது. சினிமா தந்த பணமும் சுதந்திரமும் இல்லையென்றால், நான் இவ்வளவு தூரம் இயங்கி இருக்க முடியாது. சினிமா என்னைப் பொறுத்தவரை நல்ல தொழில்!’’    

‘‘ஆனால், நீங்கள் வசனம் எழுதியதில் ஒப்பீட்டளவில் மலையாளப் படங்கள் அளவிற்கு தமிழ்ப்படங்கள் வெற்றிபெறவில்லையே... ஏன்?’’

‘‘ஒட்டுமொத்தமாக அப்படித் தோன்றலாம். ஆனால், ‘நான் கடவுள்’, ‘அங்காடித்தெரு’, ‘நீர்ப்பறவை’, ‘ஆறு மெழுகுவர்த்திகள்’, ‘பாபநாசம்’ இவையெல்லாம் வெற்றிப் படங்கள்தான். ஒன்பது படங்கள் எழுதியிருக்கிறேன். ஐந்து படங்கள் வெற்றிபெற்றிருக்கின்றன என்றால், இது நல்ல எண்ணிக்கைதான். மேலும், நான் எழுதுகிற படங்கள் எல்லாம் பிளாக்பஸ்டர் கமர்ஷியல் படங்களும் அல்ல. எல்லாமே பரிசோதனை முயற்சிப் படங்கள்தான் (Experimental Films). அந்தப் படங்களுக்கான வெற்றி சதவிகிதம் இவ்வளவுதான் வரும்.’’

‘‘கமலுடன் நீங்கள் பணிபுரிந்திருக்கிறீர்கள். உங்களுக்கும் அவருக்கும் இடையில் பல முரண்பாடான விஷயங்கள் உள்ளன. அவர் தன்னை பெரியாரிஸ்ட் என்று சொல்லக்கூடியவர். ஆனால், நீங்கள் பெரியார் மீது கடுமையான விமர்சனம் கொண்டவர். இப்படிப்பட்ட முரண்பாடுகள் குறித்து உரையாடுவீர்களா?’’

‘‘கமல் சுவாரஸ்யமான மனிதர். விவாதம் செய்யக்கூடிவர்கள் சூழ இருப்பதை விரும்புவார். பெரியார் என்ற பெயரைக் கேட்டதுமே திட்டுகிற பிராமணர்கள்கூட அவரது நண்பர்கள் குழுவில் இருப்பார்கள். ஒருவகையில் விவாதங்களுக்காகத்தான் இப்படி ஒரு நண்பர் குழுவையே அவர் உருவாக்குகிறார். இப்படியான விவாதங்களின் வழியாகத்தான் அவர் தனக்கான கருத்துகளைத் தொகுத்துக்கொள்கிறார்.

ஓர் உரையாடலில் ‘பெரியாரிஸ்ட்டுகள் யாருமே குறிப்பிடும்படியான படைப்பாளிகள் இல்லை’ என்று ஒரு நண்பர் சொன்னார். ‘ந.பிச்சமூர்த்தியிலிருந்து சுந்தர ராமசாமி வரை பல படைப்பாளிகளை ட்ரிக்கர் செய்தவர் பெரியார், படைப்பாளிகளைத் தூண்டிவிடுவதே ஒரு படைப்புச் செயல்பாடுதான்’ என்று கமல் பதிலளித்தார். இந்தக் கருத்தை விவாதங்களின் வழியாகத்தான் அவர் கண்டுபிடிக்கிறார். கண்டுபிடித்ததும் சந்தோஷமடைகிறார். கமல் என்ற நாயகனின் அந்தரங்கக் கருத்துலகம் அது. அங்கு அவர் இயல்பான கமலாக இருப்பார்.’’

‘‘இந்து தத்துவ மரபு குறித்துத் தொடர்ந்து எழுதிவருகிறீர்கள். பெரியாரிஸ்ட்டுகளும் மார்க்சிஸ்ட்டுகளும் இந்து மதம் என்ற ஒன்றே கிடையாது என்று சொல்வதை மறுத்து, ஒருங்கிணைந்த அளவில் இந்தியா முழுக்க அதற்கான அடையாளங்கள் உள்ளன என்று எழுதிவருகிறீர்கள். இந்து தத்துவ மரபு என்று நீங்கள் முன்வைப்பதற்கும் இந்து என்று அடையாளப்படுத்தப்படும் ஓர் ஏழை விவசாயிக்கும் நடைமுறை வாழ்க்கையில் என்ன தொடர்பு இருக்கிறது?’’

‘‘நீங்கள் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். பல ஆயிரம் வருடங்கள் பழமையான ஒரு தேசம் இது. இதில் ஆயிரக்கணக்கான கடவுள்களும் நூற்றுக்கணக்கான வழிபாட்டுமுறைகளும் இருந்திருக்கின்றன. இவற்றிற்கான மையம் சார்ந்த ஒரு தொகுப்பு முயற்சி ஆரம்பிக்கிறது. அந்த முயற்சி பல ஆயிரம் வருடங்கள் நடந்த பிறகுதான் ரிக் வேதமே உருவாகியது. ஏனென்றால், ரிக் வேதமே பல கடவுள்களை உள்ளே கொண்டு வந்து `பிரம்மம்’ என்கிற கருத்தோடு முடிச்சுப் போடுகிற முயற்சியில்தான் ஈடுபட்டது. அதன் பிறகு இந்தத் தொகுப்புச் செயல்பாடு இன்று வரை நடந்துகொண்டேதான் இருக்கிறது. உயர் தத்துவ உலகம், பெருந்தெய்வ உலகம், நாட்டார் வழிபாட்டு உலகம் என்ற மூன்றடுக்குக் கட்டுமானத்தைக்கொண்டது இந்து மதம்.

முதலாவது - வேதாந்தம், பிரம்மம், மறுபிறவி, ஊழ்வினை போன்றவை. இரண்டாவது - விஷ்ணு, சிவன் போன்ற பெருந்தெய்வங்கள். மூன்றாவது - குல தெய்வங்கள், குல அடையாளங்கள். சாதாரணமாகப் பார்க்கும்போது, இந்திய அளவில் பெரும்பான்மையான மக்களுக்கு மூன்றாவது அடுக்கான குலதெய்வங்களோடுதான் நெருக்கம் அதிகம் என்று தோன்றும். அதனாலேயே இந்து மதத் தத்துவங்களுக்கும் பெரும்பாலான இந்துக்களுக்கும் தொடர்பு இல்லை என்று தோன்றலாம்.

 ஆனால்,  பெரும்பாலான இந்துக்களின் குலதெய்வங்களுக்கும் பெருந்தெய்வங்களுக்கும் தொடர்பு இருக்கத்தான் செய்கிறது. இது மிக முக்கியமான விஷயம். நீங்கள் எவ்வளவு கீழே இறங்கிப் பார்த்தாலும், வெளியில் இருந்து பார்ப்பதற்கு நாட்டார்தன்மை மட்டுமே இருப்பதாகத் தோன்றும். கொஞ்சம் நெருங்கி அணுகினால், அங்கே இந்து மதத்தின் சாரம் என்று சொல்லக்கூடிய தத்துவத் தாக்கம் இருக்கும். தெருவோரமாக இருக்கும் மாரியம்மனைக்கூட `பரபிரும்ம ரூபினி’ என்றுதான் சொல்கிறார்கள். `பரபிரும்மம்’ என்று சொல்வதே இந்து தத்துவ மரபின் தாக்கம்தான்!”

``சாதரண மக்களும், `பரபிரும்ம ரூபினி’ என்று சொல்கிறார்களா, என்ன?’’

``எனக்குத் தெரிந்து 400 வருடங்களாக உள்ள எல்லா துதிகளிலும் இந்த வார்த்தை இருக்கிறது. எல்லா நாட்டார் தெய்வங்களுக்கும் கதைகள் இருக்கின்றன. சுடலை, மாயாண்டி என்று எந்த தெய்வத்தை எடுத்துக்கொண்டாலும் அவர்கள் கதைகளில் பொதுவான சில அம்சங்கள் இருக்கின்றன.

 அவர்கள் கொல்லப்பட்டிருப்பார்கள் அல்லது சாகசம் செய்து மாண்டிருப்பார்கள். ஆனால், இறப்புக்குப் பின் சிவனைச் சந்தித்து வரம் பெறுவார்கள். இப்படி நாட்டார் கதைகளுக்குள்ளும் சிவன் வந்துவிடுகிறார். சுடலையே `ஆறு சாஸ்திரங்கள் அறிந்தவர்’ என்றே சொல்லப்படுகிறது. ஊழ்வினை, மறுபிறப்பு, பெயரற்ற ஒரு பெருங்கடவுளோடு நாட்டார் தெய்வங்களுக்கு உள்ள தொடர்பு என்பதான மூன்று கருத்துகளும் எல்லா நாட்டார் பழங்குடி வழிபாட்டிலும் இருக்கிறது. இது வில்லுப்பாடல்களின் தேசம். 300 வருடங்களாக வாய்மொழியாகத் தொடர்ந்துவருகிறது. வில்லுப்பாட்டைச் சாதாரண மக்கள்தான் பாடுகிறார்கள். ஆனால், அந்தப் பாடல் ஒரு கட்டத்தில் இந்து தத்துவ மரபில் இணைவதை நீங்கள் பார்க்க முடியும்!”

``வில்லுப்பாடல்களைப் பாடுகிறவர்கள் தாழ்த்தப்பட்ட அல்லது இடைநிலைச் சாதிகளைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். பாடலை எழுத்து வடிவுக்கு மாற்றிய வைதீக நம்பிக்கையுடைவர்கள்தான் பாடலுக்குள் பெருந்தெய்வங்களைச் சேர்த்திருக்க வேண்டும் என்று ஒரு பார்வை உள்ளதே? மேலும், சிவகாசி காலண்டர்கள் கிராமங்களுக்குள் பரவலாக பெருந்தெவங்களைக் கொண்டுசேர்த்தன என்கிற பார்வையும் உண்டே?’’

``நீங்கள் இந்து மதத்துக்கும் சிறுதெய்வ வழிபாட்டுக்கும் தொடர்பு இல்லை என்று நம்ப ஆசைப்படலாம். ஆனால், உண்மை அதுவல்ல. ஆறுமுகப்பெருமாள் நாடார், கன்னியாகுமரியைச் சேர்ந்த படிப்பாளி. அவரை `நாட்டுப்புறப் பாடல்க ளின் உ.வே.சா’ என்று சொல்லலாம். 1920, 30-களில் அவர்தான் ஏட்டுச் சுவடிகளிலிருந்தும் வாய்மொழியிலிருந்தும் பாடல்களைச் சேகரித்தார். திருநீறு, சிவனைச் சந்திப்பது, வரம் பெறுவது போன்ற அம்சங்கள் அந்தக் காலகட்டப் பாடல்களிலேயே வலுவாக உள்ளன. அதற்கும் முன்பே இதில் பெருந்தெய்வக் கலப்பு நடந்திருக்கலாம் என்று சொல்லத் தரவுகள் தேவை!”

``தமிழகத்தின் குக்கிராமப் பகுதிகளில் வாழும் சாமான்ய மனிதனுக்கு இந்து மதத் தத்துவம் சார்ந்த பெரிய புரிதல்கள் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லையே?’’

``இது உங்கள் மனப்பதிவுதான். இந்து மதத்தில் பறையர்கள் அடித்தட்டுச் சாதிதான். ஆனால், பறையர் சமூகத்தைச் சேர்ந்த வள்ளுவர்கள் அளவிற்கு இந்து மத சாராம்சமான புராணங்களை, கதைகளைத் தெரிந்தவர்கள் மிகக்குறைவே. 6-ம் நூற்றாண்டு, 7-ம் நூற்றாண்டு வரை பிராமணர்களுக்குப் பதிலாக அவர்கள்தான் பூஜைசெய்து வந்தார்கள். பின்னர் வள்ளுவர்கள் வீழ்ச்சியடைந்தார்கள். பிராமணர்கள் பூஜை செய்யத் தொடங்கினார்கள். இதற்கு வெளியில் இருக்கிறவர்கள் யார் என்று பார்த்தால், தோடர்கள், பளியர்கள் போன்றவர்களைச் சொல்ல முடியும். ஆனால், அவர்களது வழிபாட்டு முறைகளிலும்கூட இந்து மதத்தின் சாயல் இருக்கத்தான் செய்யும்.

கிராமங்களை எடுத்துக்கொள்ளுங்கள்... மகாபாரதத்தின் இரண்டு கதைகளாவது தெரியாத கிராமத்து மனிதர்களை நான் பார்த்ததே இல்லை. இந்து மதத்துடன் எந்தத் தொடர்புமற்றவர் என்று நீங்கள் குறிப்பிடும் ஒருவரை அழைத்து, அவரிடம் `மகாபாரதக் கூத்து பார்த்திருக்கிறீர்களா?’ என்று கேட்டால் ஒரு பட்டியலே சொல்வார். அ.கா.பெருமாள் `நாட்டுப்புறக்கலைகள்’ என்று ஒரு பெரிய புத்தகம் போட்டிருக்கிறார். அதில் பெரும்பாலான கலைகள் மகாபாரதத் தொடர்புள்ளவை!”

‘‘அப்படியானால் இந்து மதப் பரவலாக்கத்தில் மகாபாரதத்துக்கு முக்கியப் பங்கு இருக்கிறது என்று சொல்லலாமா?”

“நிச்சயமாக. மகாபாரதம் மட்டுமல்ல, ராமாயணத்துக்கும் முக்கியப் பங்கு இருக்கிறது!”

‘‘பி.ஜே.பி ஆட்சிக்கு வந்ததற்குப் பிறகு மகாபாரதம் சார்ந்து ஏராளமான சீரியல் தொடர்கள், திரைப்படங்கள் எனப் பல்வேறு வழிகளில் அது தீவிரப் பரவலாக்கம் செய்யப்படுவதாக சொல்லப்படுகிறது. நீங்கள் மகாபாரதத்தை அடிப்படையாகக் கொண்டு ‘வெண்முரசு’ எழுதிவருகிறீர்கள். இம்முயற்சி எந்த வகையில் அவற்றிலிருந்து வேறுபட்டது?”

``ஒன்றை நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும். இந்தியாவில் எந்தக் கலை வடிவம் தோன்றினாலும் அதன் முதல் வெளிப்பாடு மகாபாரதமாக இருக்கிறது. தெருக்கூத்து, நாடகம் என அனைத்தின் முதல் வெளிப்பாடும் மகாபாரதம்தான். சமூக, அரசியல் நாடகங்கள் வருகிற வரை எல்லாம் மகாபாரதம்தான். ஊமைப் படங்கள், பேசும் படங்களின் ஆரம்பகாலத் திரைப்படங்கள் அனைத்திலும் மகாபாரதம்தான். தொலைக்காட்சி இங்கே வந்த உடனே, முதலில் மகாபாரதம்தான் வந்தது. அப்பொழுது பி.ஜே.பி-க்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் கிடையாதே. மகாபாரத டெலிவிஷன் தொடர்களிலே சோப்ராவின் தொடர்தான் மிகச்சிறந்த ஒன்று. அது உருவாக்கிய மகாபாரத அலை, சாதாரண அலை அல்ல. சோப்ராவை பி.ஜே.பி உறுப்பினர் என்று சொல்ல மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.

மகாபாரதம் திரும்பத் திரும்ப எடுக்கப்பட்டுக்கொண்டே இருப்பதன் காரணம், அதன் டி.ஆர்.பி ரேட்டிங்தான்.யானையின் வாலைப் பிடித்துக்கொண்டு இவர்கள் போகிறார்களே தவிர, யானையை இவர்கள் வழிநடத்தவில்லை.

இதை அரசியலாகப் பார்ப்பது குறுக்கல்வாதம்தான். மகாபாரதத்தில், மனித வாழ்வின் நுண்ணுணர்வுகளுக்கான தளம் இருக்கிறது. அதுதான் முக்கியக் காரணம். நிச்சயமின்மை, தவிர்க்க முடியாத வீழ்ச்சி இவை இரண்டும்தான் மனித வாழ்க்கையைத் தீர்மானிக்கிறது. ஜெயமோகன் வாழ்க்கையில் அடுத்து என்ன நடக்குமென்று யாருக்கும் தெரியாது. என்ன ஆனாலும் நான் வயதாகி இறந்துவிடுவேன் என்பதில் மாற்றமே இல்லை. இந்த இரண்டு விஷயங்களைப் பேசும் காவியங்கள் ஒருபோதும் அழியாது.

என்றைக்காவது ஐரோப்பா, கிரேக்கத் தொன்மங்களை விட்டுவிடுமா என்ன? ஹெர்குலிஸ் இல்லாத ஒருகாலம் அவர்களுக்கு வருமா என்ன? வரவே வராது. அதுபோலத்தான் மகாபாரதமும் இங்கே இருந்துகொண்டே இருக்கும். பி.ஜே.பி இன்றிருக்கிறது; நாளை போகும். அவ்வளவு ஏன்... இந்த நாவல் வெளியான காலத்தில் பி.ஜே.பி ஆட்சியில் இருந்தது என்று `வெண்முரசி’ல் அடிக்குறிப்பு கொடுக்கவேண்டிய காலம் வரும். ஐந்து வருடம், பத்து வருடம் ஆட்சியிலிருந்துவிட்டுப் போகும் ஒரு சோட்டா கவர்மென்ட்டுக்காக ஒருவன் நாவல் எழுதுவானா என்ன? இலக்கியம் என்பது பெரியது. காலம் தாண்டி செல்லக்கூடியது. எனது ‘பின்தொடரும் நிழலின் குரல்’ நாவலைப் படித்துவிட்டு லெனின் என்பவர் யார் என்று விக்கிபீடியாவில் பார்த்து அறிந்துகொண்டதாக வாசகர்கள் எனக்கு கடிதம் எழுதுகிறார்கள். நான் அதிர்ச்சி அடைந்திருக்கிறேன். வரலாறு ரொம்பச் சிறியது. இலக்கியம் பெரியது!”

`` `தமிழ்க் கலாசாரம் குறித்துப் பேசும்போது தமிழர்களை மலையாளிகளோடு ஒப்பிட்டு தாழ்வாகப் பேசும் வழக்கம் ஜெயமோகனிடம் உள்ளது’ என்ற குற்றச்சாட்டு இருக்கிறது. இது ஒருபுறமிருக்க, நீங்கள் தனிப்பட்ட முறையில் தமிழர், மலையாளி என்ற அடையாளச் சிக்கலை உணர்கிறீர்களா?’’

``ஒரு சமூகத்தைப் பற்றி விமர்சனம் செய்யக்கூடிய பொறுப்பும் தகுதியும் எழுத்தாளனுக்கு உண்டு. ஜெயமோகன்  விமர்சனத்தை முன்வைத்தால், `மலையாளி’ என்பீர்கள். சுந்தர ராமசாமி முன்வைத்தால், `பார்ப்பனர்’ என்று சொல்வீர்கள். எனக்கு இதைப் பற்றியெல்லாம் கவலை கிடையாது. எனக்கு விமர்சனம் இருந்தால், நான் சொல்வேன்.

அப்புறம் நான் மலையாளப் பின்னணி கொண்டவன் என்பதாலேயே, நான் தமிழர்களை, அவர்களது பண்பாட்டைப் புகழ்ந்து பேச வேண்டும் என்கிற தன்னுணர்வோடேயே இருந்துகொண்டிருக்க வேண்டும் என்று குற்றம்சாட்டுகிறவர்கள் எதிர்பார்க்கிறார்கள். அது நடக்காது.

`தமிழர்கள் என்னைத் தப்பாக நினைப்பார்களோ’ என்ற மனநிலையோடு நான் பேசினால்தான், எனக்கு அடையாள நெருக்கடி இருப்பதாக அர்த்தம். இன்னொரு முக்கியமான விஷயம், இங்கே தமிழகத்தில் சிலர் சொல்வதைப்போலவே, கேரளாவில் `ஜெயமோகன் தமிழர்களோடு ஒப்பிட்டு மலையாளிகளை மட்டம்தட்டுகிறார்’ என்றும் சிலர் எழுதுகிறார்கள்.

நான் மலையாளி என்று சொல்லிக்கொண்டிருப்பவர்கள் சொல்லிவிட்டுப் போகட்டும். நான் அதைப் பொருட்படுத்துவதில்லை. மேலும் தமிழ்ப் பண்பாட்டின், தமிழ் இலக்கியத்தின் ஒரு நீட்சியாகத்தான் மலையாளத்தைப் பார்க்க வேண்டும். மலையாளத்தை தமிழ்ப் பண்பாட்டிலிருந்து பிரித்துப் பார்க்கக் கூடாது என்று ஒரு சிந்தனைப் பள்ளி கேரளாவில் உண்டு. `எம்.கோவிந்தன் மரபு’ என்று சொல்வார்கள். எம்.கோவிந்தனின் மாணவர்தான் ஆற்றூர் ரவிவர்மா, ஆற்றூர் ரவிவர்மாவின் மாணவன்தான் நான்.

இன்னொரு விஷயம், என்னை மலையாளி என்று விமர்சிக்கக்கூடியவர்கள் யாரும் இலக்கியவாதிகள் கிடையாது. ஒரு கூட்டத்தில் என்னைப் பார்த்து ‘மலையாளத்து ஆளு இங்க வந்து எழுதுறான்’ என்று ஒருவர் சொன்னபோது கூட்டத்தில் இருந்த அ.மார்க்ஸ் எழுந்து ‘ஜெயமோகன் எழுதும் ஒவ்வொரு வரியையும் நான் மறுப்பேன். ஆனால் தமிழன், மலையாளி என்கிற வாதத்தை இங்கே பேசாதீர்கள்’ என்று தன் கண்டனத்தைப் பதிவுசெய்தார். அக்கினிபுத்திரன் ஒருமுறை இதேபோல என்னைச் சொன்னபோது, அங்கிருந்த பார்வையாளர்களே அதற்கு எதிர்வினை செய்தார்கள். தீவிர இலக்கிய வெளியில் என்னை ஒருபோதும் ஒருவரும் மலையாளி என்று சொன்னதில்லை. நான் கடுமையாக விமர்சித்து எழுதியவர்கள்கூட அப்படிச் சொன்னதில்லை. ஒன்றையுமே படிக்காமல் புதிதாக உள்ளே வருகிறவர்கள், முகநூலில் சிலர் அப்படி எழுதித் திரிகிறார்கள். அதைப் பொருட்படுத்தவேண்டியதில்லை.’’

``மொழி சார்ந்த, சாதியம் சார்ந்த சாராம்ச அடையாளப்படுத்துதல்களைத் தவறு என்று சொல்லும் நீங்களே, ‘பார்ப்பன எதிர்ப்பை முன்வைத்தவர்கள் தெலுங்கர்கள்’ என்று எழுதியிருக்கிறீர்களே? ஆனால், சமகாலத்தில் அரசியல் களத்தில் பார்ப்பன எதிர்ப்பை முன்வைப்பவர்களில் கி.வீரமணி, கொளத்தூர்மணி, வே.ஆனைமுத்து, சுப.வீரபாண்டியன், ஓவியா என யாரும் தெலுங்கர் கிடையாது. அதேபோல், அறிவுத் தளத்தில் பார்ப்பன எதிர்ப்பை முன்வைக்கும் அ.மார்க்ஸ், எஸ்.வி.ராஜதுரை, வ.கீதா,  தொ.பரமசிவன், ஆதவன் தீட்சண்யா ஆகியோரும் தெலுங்கர்கள் கிடையாதே. உங்களை மலையாளி என்று சாராம்சப்படுத்துவதை விமர்சிக்கும் நீங்கள், தெலுங்கர்கள் என்று அடையாளப்படுத்துவது என்ன நியாயம்?’’

தமிழகத்தில் பிராமண எதிர்ப்பை முன்வைத்தவர்கள் எல்லோரும் தெலுங்கர்கள் என்று நான் சொல்லவரவில்லை. ஆனால், பிராமண எதிர்ப்புக்குப் பின்னே இருக்கும் ஓர் உளவியல் மிகவும் முக்கியமானது. பிரிட்டிஷார் இங்கு வரும்போது இங்கு பெரும்பாலும் தெலுங்கர்
களிடமே நிலம் இருந்தது. இன்றைக்கும்கூட ஒரு சர்வே எடுத்தால், கணிசமான பகுதி தெலுங்கர்களிடம்தான் இருக்கும். சென்னை போன்ற பல இடங்களில் ரியல் எஸ்டேட் அவர்களிடம்தான் உள்ளது.

பிரிட்டிஷ் ஆட்சியில் முக்கியமான அதிகாரிகளாகவும் நிர்வாகிகளாகவும் இருந்தவர்கள் பெரும்பாலும் பிராமணர்கள். குறிப்பாக நிலப் பட்டா வழங்கும் தாசில்தார்களாக பிராமணர்களே இருந்தார்கள். 1910-ம் ஆண்டுக்குப் பிறகு வந்த நிலச்சீர்திருத்த சட்டங்களில் பெரிய அடி வாங்கியவர்கள் தெலுங்கர்கள். அதற்கு முன்பு தமிழகத்தில் நிலம் தனியுடைமை கிடையாது. ரயத்துவாரி முறை வந்தபோது ஒருவருக்கு நிலம் பட்டாபோட்டு கொடுக்கக்கூடிய உரிமை தாசில்தாருக்கு வழங்கப்பட்டது. இந்தக் காலகட்டத்தில் தெலுங்கர்களின் கைகளிலிருந்த நிலம் பல்வேறு ஜாதிகளின் கைக்குப் போனதற்கும் தெலுங்கர்களின் பெரிய அளவிலான வீழச்சிக்கும் பிராமணர்கள் காரணமாக இருந்தார்கள். இந்த வரலாற்றுப் பின்புலத்தில் பிராமணர்கள் மீது ஒரு வெறுப்பு தெலுங்கர்களுக்கு இருக்கிறது. இந்த வெறுப்பு, திராவிட இயக்கத்திற்குள் பிராமணிய எதிர்ப்பு உளவியலாக உள்ளே வருகிறது. இயல்பிலேயே திராவிட இயக்கத்தவர்களுக்கு பிராமண வெறுப்பை அவர்களது குடும்பப் பின்னணி கொடுத்தது. அதை அவர்கள் அரசியலாக மாற்றிக்கொண்டார்கள்.

`உங்களுக்கு நிகழ்ந்த இழப்பை வரலாறாக முன்வையுங்கள், முற்போக்காக மாற்றாதீர்கள்’ என்கிறேன் நான்.  தீண்டாமைக்கு ஆளான ஒரு தலித், பிராமண எதிர்ப்பை வெளிப்படுத்துவதில் ஒரு நியாயம் இருக்கிறது. `உங்களுடைய நிலத்தைப் பறித்தவன் என்கிற கோபத்தை, வெறுப்பை முற்போக்கு என்ற பெயரில் முன்வைக்காதீர்கள்’ என்று சுட்டிக்காட்ட விரும்புகிறேன். பிராமண வெறுப்புக்குப் பின்னே நிலமிழந்த வெள்ளாளர்கள், முதலியார்கள், தெலுங்கு சாதிகளின் வன்மம் முக்கியப் பங்காற்றுகிறது. தெலுங்கர்கள் பொருளாதாரரீதியாக ஏமாற்றப்பட்டார்களா... மோசடி செய்யப்பட்டார்களா... அவர்களுக்கு நடந்தது நியாயமா...  என்பதெல்லாம் வேறு கேள்வி. ஆனால், இதை முற்போக்காக முன்வைக்காதீர்கள். அதை அரசியலாக தலித்துகளின் தலையில் சுமத்தாதீர்கள். `என்னுடைய கோபத்துக்காக நீயும் சேர்ந்து சண்டைபோடு’ என்று சொல்லாதீர்கள். பெரியார் உட்பட பலரிடமும் இந்த உளவியல் செயல்படுவதாக நான் கருதுகிறேன். இது ஒரு வரலாற்று உண்மை.

இன்னும் சொல்லப்போனால் என்னுடைய குடும்பப் பின்னணி சார்ந்து எனக்கும்கூட மிகக் கடுமையான பிராமணிய எதிர்ப்பு இருக்கிறது. ஏனென்றால், திருவாங்கூரில் பெரும்பாலான நிலங்கள் நாயர்களின் கைகளில் இருந்தன. வேலுத்தம்பி தளவாய் கலவரத்திற்குப் பிறகு பிரிட்டிஷாரால் பெரிய அளவில் நாயர்கள் பதவிகளில் இருந்து ஓரங்கட்டப்பட்டார்கள். நாயர்கள் இழந்த பதவிகள் அனைத்திலும் பெரும்பாலும் தெலுங்கு பிராமணர்களும், தமிழ் பிராமணர்களும் வந்தார்கள். ஆக,  பிராமணர்களின் மீதான வெறுப்பு நாயர்களின் ரத்தத்திலேயே கலந்திருக்கிறது. அதற்காக எனது தனிப்பட்ட பிராமண வெறுப்பை நான் அரசியலாக்கக் கூடாது. பிராமணர்கள் எந்த அளவிற்கு வரலாற்றில் சாதியக் கொடுமைகளைச் செய்திருக்கிறார்களோ, அதைவிடப் பலமடங்கு நாயர்கள் செய்திருக்கிறார்கள்.

பிராமணர்களுக்கு எதிராகக் குரல் கொடுத்தார்கள் என்பதற்காக, தெலுங்கு நாயக்கர்களோ, மலையாள நாயர்களோ செய்த கொடுமைகள் எல்லாம் இல்லாமல் ஆகிவிடுமா என்ன? அனைத்து குற்றங்களையும் பிராமணன் தலையில் போட்டுவிட்டு, வரலாற்றில் தான் தப்பிவிட நினைக்கும் உத்தியை விமர்சிக்கத்தான் வேண்டும்.’’

``வைக்கம் போராட்டத்தைப் பற்றி நீங்கள் எழுதும்போது, `பெரியார் போராட்டத்தில் கலந்துகொண்ட பலரில் ஒருவர்தானே தவிர, அவருக்கு அதில் முக்கியமான பங்கு கிடையாது’ என்றும் `அப்பொழுது தமிழக அரசியல் வரலாற்றில் அவருக்கு என்று குறிப்பிடத் தகுந்த இடம் இல்லை, கேரள வரலாற்றிலும் அவர் குறித்த பெரிய பதிவுகளும் இல்லை’ என்பதாக எழுதியிருந்தீர்கள். ஆனால், உங்கள் கட்டுரைக்கு ஆதாரபூர்வமாகப் பல எதிர்ப்புகள் வந்தனவே?’’

``அவர்கள் எழுதியது வேறு; நான் சொல்லவந்தது வேறு. தமிழக அரசு பாடநூல்களில் `Periyar launched Vaikom struggle and he made it successful’ என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. பெரும்பாலும் தமிழில், `பெரியார் வைக்கம் போராட்டத்தை தொடங்கினார், தொடங்கி நடத்தினார்’ என்றுதான் பதிவுசெய்யப்பட்டுவருகிறது. இது வரலாற்றுத் திரிபு. நான் சொல்லவருவது ‘பெரியார் வைக்கம் போராட்டத்தைத் தொடங்கவில்லை; நடத்தவில்லை; முடிக்கவில்லை’ என்பதுதான். வைக்கம் போராட்டத்தில் பெரியாரின் பங்கு முக்கியமானது. அதில் சந்தேகமே இல்லை. அன்று தமிழகத்திலிருந்து போராட்டத்தில் பங்குபெற்ற எம்.பெருமாள் நாயுடு, கோவை அய்யாமுத்து உள்ளிட்ட மூன்று தலைவர்களில் முக்கியமானவர் பெரியார்.

வைக்கம் போராட்டத்துக்கு ஒரு நீண்ட வரலாறு இருக்கிறது. வைக்கம் போராட்டத்துக்கு 75 வருடங்களுக்கு முன்பிருந்தே ஈழவர்கள் போராட முயன்றனர். பிறகு, டி.கே.மாதவன் வைக்கத்துக்குள் நுழைவதற்கான முயற்சிகளை முன்னெடுக்கிறார். தமிழகத்துக்கு வரும் காந்தியைப் போராட்டக்குழுவினர் சந்திக்கிறார்கள். காந்தி, ‘ஈழவர்கள் மட்டுமல்லாமல் அங்குள்ள உயர்சாதிக்காரர்களும் சேர்ந்து போராடினால்தான் போராட்டம் வெற்றிபெறும்’ என்று சொல்கிறார். மேலும், `கோயில் நுழைவுப் போராட்டமாக மட்டும் முன்னெடுத்தால், வெறும் மதப் பிரச்னையாகவும் ஆகமப் பிரச்னையாகவும் மட்டுமே பார்க்கப்படும். பொதுப் பாதையில் நடப்பதற்கான உரிமைப் பிரச்னையாக முன்னெடுக்க வேண்டும். அப்போதுதான் சிவில் பிரச்னையாகி, பிரச்னை வெள்ளைக்காரனிடம் போகும்’ என்கிறார். வெள்ளைக்காரனிடம் போனால்தான் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையுடையவர் காந்தி.

இப்படியாக அந்தப் போராட்டம் தொடங்கப்பட்டு வெற்றிகரமாக நடந்துகொண்டிருந்தது. இந்தப் போராட்டத்தை தொடர்ந்து நடத்திக்கொண்டு போவதற்காக மூன்று செய்திப் பத்திரி்கைகள் தொடங்கப்பட்டன. அது ஒரு பெரிய அலையை உருவாக்கியது.

போலீஸ், அடிதடி எனத் தீவிரமாகப் போராட்டம் தொடர்ந்துகொண்டிருந்த காலகட்டத்தில்தான் எம்.பி.நாயுடு போராட்டத்தில் கலந்துகொள்கிறார். பின் கோவை அய்யாமுத்து கலந்துகொள்கிறார். அதன் பிறகுதான் பெரியார் போய்க் கலந்துகொள்கிறார். சிறைக்குச் செல்கிறார். அடுத்தகட்டமாக ஒரு பிரச்னை வருகிறது. வெளியூர்க்காரர்கள் கேரளாவிற்குள் வந்து பிரச்னை பண்ணுகிறார்கள் என்பதாக சர்ச்சை எழுகிறது. அப்போது காந்தி, ‘இனி வெளியில் இருந்து யாரும் சென்று போராட்டத்தில் கலந்துகொள்ள வேண்டாம். வைக்கத்தில் இருப்பவர்கள், அங்கேயே தங்கி இருப்பவர்கள் மட்டும் போராடலாம்’ என்று சொல்கிறார். அடுத்து இன்னொரு சிக்கலும் எழுகிறது. இந்து மதத்தை அழிப்பதற்காக மாற்று மதத்தினர் செய்யும் போராட்டம் இது என்பதாக பிரசாரம் செய்யப்படுகிறது. `ஜார்ச் ஜோசப் போன்றோர் போராட்டத்திலிருந்து வெளியேற வேண்டும்’ என்று காந்தி சொல்கிறார். பெரியார் இங்கு முரண்படுகிறார். `இது எப்படி இந்துக்களின் தனிப்பட்ட மதப் பிரச்னையாக இருக்க முடியும்? இது சிவில் பிரச்னை’ என்கிறார். ‘இல்லை நமக்குப் போராட்டத்தின் வெற்றிதான் முக்கியம்’ என்கிறார் காந்தி. பெரியார் அங்கிருந்து திரும்பிவிடுகிறார். போராட்டம் தொடர்ந்து ஒன்றரை வருடத்திற்கும் மேலாக நடக்கிறது.

பெருமழையால் இடையில் போராட்டம் நிறுத்திவைக்கப்படுகிறது. போராட்டம் சோர்வு நிலையடைந்து முடிவுறப்போகும் தருவாயில் போலீஸ் ஒரு தாக்குதலை நடத்துகிறது. அப்பொழுது அத்தாக்குதலின் உண்மைநிலையைப் பார்க்கும் பிட் என்ற வெள்ளை அதிகாரி, அதை பிரிட்டிஷ் தலைமைக்கு எடுத்துச் சொல்கிறான். பிரிட்டிஷ் அரசால், ‘இது அடிப்படை உரிமைக்கான போராட்டம். இதற்கு எதிராக இனி போலீஸ் வராது’ என்று அறிவிக்கப்படுகிறது. பிறகுதான் திருவிதாங்கூர் அரசு பணிந்து வருகிறது. பிட் முன்னிலையில்தான் தேவதாஸ் காந்தி, ராஜாஜி கையெழுத்திட  போராட்டம் முடிவுக்கு வருகிறது. வைக்கம் தெருக்களில் நடமாட உரிமை, நான்கு வாயில் வழியாகவும் சென்று வழிபடும் உரிமை, ராஜகோபுரம் மட்டும் பிராமணர்களுக்குரியது என்று ஒப்பந்தம் போடப்படுகிறது. இதுதான் வைக்கம் போராட்டத்தின் உண்மையான வரலாறு. இந்தப் போராட்டத்தில் பெரியார் கலந்துகொண்டார் என்பதை நான் மறுக்கவில்லை. கேரள பாடப்புத்தகத்தில் அவர் இடம்பெற்றிருக்கிறார். அவருக்கு அங்கு சிலை வைக்கப்பட்டிருக்கிறது என்பதெல்லாம் உண்மை. ஆனால், போராட்டத்தை அவர் தொடங்கவில்லை, அவர் வழிநடத்தவில்லை, அவர் முடித்துவைக்கவில்லை. ஆக, வைக்கம் போராட்டம் குறித்து நாம் பேசும்போது இந்த முழுமையான சித்திரத்தை வழங்க வேண்டும்.

 வைக்கம் போராட்டத்தின் முக்கிய தளபதியான கே.பி.கேசவமேனனைப் பற்றி நான் எழுதியிருக்கிறேன். ஆனால், வீரமணி போன்றவர்கள் எழுதவில்லை.  `கேரளத்தில் போராட்டத்திற்கு தலைமை தாங்க ஆளில்லாத நிலையில் பெரியாரை அழைத்தார்கள்’ என்கிற சித்திரத்தை வீரமணி போன்றவர்கள் தருகிறார்கள். இதைத்தான் நான் விமர்சித்தேன்!”

``நித்ய சைதன்ய யதி ஆசிரமம் ஆரம்பித்தபோது, பெரியாரைப் பார்த்து அவர் விபூதி எடுத்துக் கொடுத்து ஆசி வழங்கியதாக எழுதியிருக்கிறீர்கள். அதற்கு ஏதேனும் ஆதாரம் இருக்கிறதா?’’

``நித்ய சைதன்ய யதியே தன் சுயசரிதையில் பதிவுசெய்திருக்கிறார். ஆசிரமம் ஆரம்பிக்கும்போது அல்ல, துறவு பூணும்போது. பெரியாரிடம் அன்று பலர் வந்து ஆசீர்வாதம் வாங்கிச் சென்றிருப்பார்கள். அதில் யதியும் ஒருவர். நாம் இப்பொழுது அறியும் யதி அல்ல அவர். பெரியாரின் பார்வையில் அந்நிகழ்வு அவ்வளவு முக்கியமானதாக இருந்திருக்காது. ஒரு 27 வயது இளைஞன் வந்து ஆசி வாங்கிச் செல்கிறான் என்பதாக இருந்திருக்கும். பெரியாருக்கு அவர் நித்ய சைதன்ய யதி என்று தெரியாது.’’

``ஒன்றுபட்ட இந்தியா என்பது குறித்து தொடர்ந்து பேசி வருகிறீர்கள். தேசிய இனப் போராட்டங்களை `இந்தியாவைப் பிளக்க நினைக்கும் சதி’ என்றும் விமர்சிக்கிறீர்கள். ஆனால், நீங்கள் முன்வைக்கும் ஒன்றுபட்ட இந்தியா என்னும் அமைப்பால் இன்னும் மாநிலங்களுக்கிடையே நதிநீர்ப் பிரச்னையையே தீர்க்க முடியவில்லையே? மொழிவாரியான தேசிய இனங்களின் பிரச்னைகளை முக்கியமற்றவை என்றா கருதுகிறீர்கள்?’’

``இந்தியா ஒன்றாக இருப்பதற்கான மிக வலுவான காரணம், ரொம்ப காலமாகவே இது ஒன்றாக இருக்கிறது என்பதுதான். உதாரணமாக, இந்தியாவில் மேற்கு வங்காளம், கேரளா தவிர்த்து பெரும்பாலான மாநிலங்களில் பிற மாநிலத்தவர்கள் அதிகமாக வாழ்ந்துவருகிறார்கள். ஒரு சின்னப் பிரிவினை எவ்வளவு ரத்தம் கேட்கும் என்பது நமக்குத் தெரியும். தமிழ்த் தேசியம் பேசுகிறவர்கள், ஒருவேளை தனித் தமிழ்நாடு அமைத்துவிட்டால், இங்குள்ள தெலுங்கர்களை வெளியேற்றினால், அது எவ்வளவு பெரிய அளவில் அகதிப் பிரச்னையை உருவாக்கும் என்று யோசித்துப் பாருங்கள். இந்த ஃபெடரல் அமைப்பிலேயே இவ்வளவு வெறியை உருவாக்குபவர்கள், இவர்கள் கையில் அதிகாரம் கிடைத்தால் என்ன செய்வார்கள்?

நதிநீர்ப் பிரச்னை இருக்கிறது என்பது உண்மை. இது எந்த அளவிற்கு மாநில அளவிற்குள் இருக்கிறதோ, அதே அளவில் மாவட்ட அளவிற்குள்ளும் இருக்கிறதே! பேச்சிப்பாறை தண்ணீரை திருநெல்வேலிக்கு கொடுப்பதா, இல்லையா என்பதுதான் கன்னியாகுமரியின் பெரிய பிரச்னை. மீன்பிடி, மின்சார உற்பத்தி, நீர்வளம் என தமிழகத்துக்குப் பெரிய அளவில் பங்காற்றும் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு, பதிலாக என்ன கிடைக்கிறது? ஆக, இந்தியாவில் ஏன் தமிழ்நாடு இருக்க வேண்டும் என்கிற கேள்வியைவிட தமிழகத்துக்குள் ஏன் கன்னியாகுமரி மாவட்டம் இருக்க வேண்டும் என்பது இன்னும் வலுவான கேள்வியாக இருக்கிறது.

சரி... தமிழகத்தை இந்தியாவிலிருந்து பிரித்துவிட்டோம் என்றே வைத்துக்கொள்வோம். அப்பொழுது என்ன செய்வீர்கள்? கர்நாடகாவோடு போர் புரிவீர்களா? பேச்சுவார்த்தைதானே நடத்துவீர்கள்? அதை இப்போது நடத்துங்கள். ஓர் அமைப்பாக நாம் இருக்கும்போதே தீர்வுகாண முடியாத பிரச்னையை, தனித்தனி நாடுகளாக பிரிந்த பின் எப்படித் தீர்ப்பீர்கள்? சரி... யாரைத் தேசிய இனம் என்று சொல்வது... எப்படி அதை வரையறுப்பது?  

சங்ககாலத்தில் வாழ்ந்தவர்கள் மட்டும்தான் தமிழர்களாக இருக்க முடியும் என்றால், பாணர், பறையர், கடம்பர், துடியர் தவிர எல்லோரையும் வெளியேற்ற வேண்டுமே? ஒன்றாக இருந்தால் ஒன்றாக இருக்கலாம். பிரிந்தால், மேலும் மேலும் பிரிந்துகொண்டே இருக்கவேண்டியதுதான்.’’

`` `ஈழத்தில் நிகழ்ந்த இனப்படுகொலைக்குப் பின்னால் இந்திய அரசின் கரங்கள் இருந்தன’ என்ற விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. இந்தியத் தேசியத்தை ஆதரிப்பவர் என்ற முறையில் இதுகுறித்த உங்கள் கருத்து என்ன? உங்களது ‘உலோகம்’ நாவல், இந்திய அமைதிப்படை குறித்த கட்டுரை ஆகியவை  தொடர்ச்சியாக ஈழவிடுதலைக் குரல்களுக்கு எதிராக இருக்கின்றனவே?’’

``முதலில், இலங்கையில் நடந்தது இனப்படுகொலை கிடையாது என்பது என் பார்வை. எந்த ஓர் அரசும் தனக்கு எதிராக சில குழுக்கள் போரில் ஈடுபடும்போது அதை ஒரு போராகத்தான் பார்க்குமே தவிர, சிவில் சொசைட்டியின் எதிர்ப்பாகப் பார்க்காது.

1960, 70-களில் புரட்சிகரக் கருத்தியல் காலகட்டம் உருவானபோது, உலகம் முழுக்க அரசுக்கு எதிரான பல புரட்சிகள் நடந்தன. காங்கோ, பொலிவியா, இந்தோனேஷியா, மலேசியா என அது ஒரு பெரிய பட்டியல். இந்தியாவில் நக்சலைட் இயக்கங்களைச் சேர்ந்தவர்களை இந்திய அரசு கொன்றொழித்தது. ஆயிரக்கணக்கான இளைஞர்களைக் கொன்றுதானே இந்தியாவில் நக்சலைட் போராட்டத்தை ஒழித்தார்கள். அதை எந்த இனப்படுகொலை என்று சொல்வது?

இதேமாதிரியான செயல்பாட்டைத்தான் இலங்கை அரசும் மேற்கொண்டது. எனவே, அரசு தனக்கு எதிரானவர்களைக் கொன்றது என்றுதான் பார்க்கிறேனே தவிர, அதை இனப்படுகொலை என்று பார்க்கக் கூடாது.

இலங்கை அரசு, தமிழர்களை  மட்டும் கொல்லவில்லை. இலங்கையைச் சேர்ந்த இடதுசாரி இயக்கமான ஜே.வி.பி-யைச் சேர்ந்த 72,000 பேரையும் அதே அரசுதானே கொன்றழித்தது? கொல்லப்பட்டவர்கள் சிங்களவர்கள்தானே? எங்கே இரக்கம் காட்டியது சிங்கள அரசு? ஜே.வி.பி-க்கு ஓர் அணுகுமுறை, புலிகளுக்கு ஓர் அணுகுமுறை என்றால்தான், அது சிங்கள இனவாதமாக இருக்க முடியும். ஆக, அங்கே நடந்தது அரச வன்முறை.

அரசு தனக்கு எதிரான போரை, போராகத்தான் பார்க்கும். புலிகள் பெரும் போரைத் தொடங்கினார்கள், அவர்கள் போரை எதிர்கொண்டுதான் ஆக வேண்டும். காந்தி ஏன் பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக போரைத் தொடங்கவில்லை? ஆயுதம் ஏந்தினால் என்ன நடக்குமென்று அவருக்குத் தெரியும். பிரிட்டிஷ் ராணுவத்தின் வாளை அதன் உறையிலிருந்து உருவவிடக் கூடாது என்பதில் காந்தி தெளிவாக இருந்தார். புலிகளின் முதன்மையான தவறு, அவ்வளவு வலிமையற்ற மக்களை ஆயுதத்தோடு அரசுக்கு எதிராகக் கொண்டு நிறுத்தியது. இதை ஏற்றுக்கொண்டுதான் நாம் மேலும் இதுகுறித்துப் பேச முடியும்.

மேலும், ‘இலங்கையில் அறவழிப் போராட்டங்கள் நடந்து, அதற்குப் பிறகும் அடக்குமுறை தொடர்ந்ததால்தான் ஆயுதப் போராட்டம் வந்தது’ என்று பலர் சொல்கிறார்கள். ஆனால், அது உண்மையல்ல. செல்வநாயகம் போன்றவர்களால் நடத்தப்பட்ட அறவழிப் போராட்டம் என்பது குறைந்தகாலம்தான். நீண்டகாலம் அங்கு ஆயுதப் போராட்டம்தான் நடைபெற்றது. அதனால், குமரன் பத்மநாபா போன்ற ஆயுதத் தரகர்கள் பலன் பெற்றார்கள் என்பதுதான் உண்மை. இது பெரும் உரையாடலாகத் தொடரவேண்டிய விஷயம்!”

``அமைப்பியல், பின் அமைப்பியல், பின் நவீனத்துவம், சர்ரியலிசம், மேஜிக்கல் ரியலிசம் போன்ற இசங்களின் அறிமுகம் வாயிலாக தமிழ்ச்சூழலில் நடந்திருக்கும் முக்கிய மாற்றமாக எதைப்  பார்க்கிறீர்கள்? எந்த அளவில் புதிய படைப்புகள் உருவாக இவை உதவியிருக்கின்றன?’’

``இவையெல்லாம் படைப்புகளைப் புரிந்துகொள்வதற்கான கொள்கைகளே தவிர, படைப்புகளை உருவாக்குவதற்கான கொள்கைகள் அல்ல. நவீனத்துவம்,  பின்நவீனத்துவம் என்பதெல்லாம் ஒரு காலகட்டத்தின் போக்குகளைக் குறிக்கக்கூடிய வார்த்தைகள்.

நவீனத்துவம் - பின்நவீனத்துவம் என்பது அறுதியிட்டுச் சொல்லக்கூடிய எல்லைப் பிரிவுகளோடெல்லாம் இல்லை. தோராயமான ஒரு புரிதல்தான். நவீன காலத்தைச் சேர்ந்த நமது அப்பாக்களுக்கு அறிவியலின் மீது, பெரிய அமைப்புகளின் மீது நம்பிக்கை இருந்ததைப் பார்க்கிறோம். பின்நவீன காலத்தில் வாழும் நாம் அறிவியலை, பெரிய பெரிய அமைப்புகளின் ஊழல்களை, சுரண்டல்களைப் பார்க்கிறோம். இவற்றின் மீது நம்பிக்கையற்றிருக்கிறோம். இந்தக் காலகட்டம் சார்ந்த புரிதல்கள் படைப்புகளின் வாசிப்பிற்கு அவற்றைப் புரிந்துகொள்வதற்குப் பயன்படும்  சர்ரியலிசம், மேஜிக்கல் ரியலிசம் போன்றவை ஒரு படைப்பின் அழகியலைக் குறிக்கக்கூடிய வார்த்தைகள். செவ்வியல் என்றால் என்ன என்பதை அறிந்தவர், கம்பராமாயணத்தை எளிதாகப் புரிந்துகொள்ள முடியும். அதில் ஒரு மிகைப் புனைவுக்காட்சி வரும்போது, `இது எதார்த்தமில்லையே’ என்று செவ்வியல் அறிந்தவர் கேட்க மாட்டார். ஒரு யதார்த்தவாதப் படைப்பில் ஏராளமான தகவல்கள் இருக்கும். ‘கதையைச் சொல். எதற்கு இவ்வளவு தகவல்கள்?’ என்று கேட்கக் கூடாது. கோட்பாட்டுப் பயிற்சிகள் படைப்புகளை அணுகவும் புரிந்து கொள்ளவும் உதவும். தமிழில் கோட்பாடுகள் குறித்து அதிகம் பேசியவர்கள், அதைப் புனைவோடு இணைத்துச் சொல்லத் தவறிவிட்டார்கள்.

 தமிழில் பின்நவீனம் குறித்துப் பேசியவர்கள், அதை தலித்தியத்தோடு இணைத்தார்கள். `தலித்துகள் பின்நவீனத்தை எழுதுவதுதான் சரியாக இருக்கும்’ என்றார்கள். ஆனால், தலித்துகள் எழுத வந்தபோது யதார்த்தத்தைத்தான் எழுதினார்கள். ஏனென்றால், தலித் வாழ்க்கையில் ஒருவர் ஃபேன்டசி கலந்து எழுதினால் என்னாகும்? ஏற்கெனவே அது நம்ப முடியாததாக இருக்கிறது. அதில் ஃபேன்டசி கலந்தால், முழுதுமாக நம்பவே முடியாத ஒன்றாக மாறிவிடும். உள்ளது உள்ளபடி எழுதுவதுதான் அதற்குச் சரியான வடிவமாக இருக்கும்.’’

``தமிழவன், சாரு நிவேதிதா,  எம்.ஜி.சுரேஷ் போன்றோர் தங்களது நாவல்களைப் பின்நவீன நாவல் என்றும், அவர்களுடையது பின்நவீன எழுத்து முறை என்றும் சொல்கிறார்களே...’’

``அது ஒரு விற்பனை உத்தியாகக்கூட இருக்கலாமே? எனக்கு அதில் உடன்பாடு இல்லை. அதிலும்கூட சாரு நிவேதிதா மட்டும்தான் ஓரளவு க்ரியேட்டிவான ஆள். மற்ற இருவர் குறித்துச் சொல்ல ஒன்றுமில்லை.’’

 ``சாரு நிவேதிதா ஒரு காலகட்டத்தில் உங்களை கடுமையாக விமர்சித்திருகிறார். ஆனால், தற்போது அண்ணன்-தம்பி என்கிற அளவிற்கு அவரது குரல் மாறியிருக்கிறது. இந்த முரணையும் உறவையும் எப்படிப் பார்க்கிறீர்கள்?’’

``(சிரிக்கிறார்) சாரு - ஜெயமோகன் சண்டை என்று பலரும் சொல்லக் கேட்டிருக்கிறேன். ஆனால், நான் ஒருபோதும் அவரோடு சண்டை போட்டது இல்லை. ஒரே ஒரு நகைச்சுவைக் கட்டுரை மட்டும் எழுதினேன். மற்றபடி இதுவரை அவரை விமர்சித்து எதுவும் நெகட்டிவாக எழுதியது இல்லை. அவருடைய இந்த மாற்றம் குறித்து அவரிடம்தான் நீங்கள் கேட்க வேண்டும்.’’

``தொடர்ந்து பெண் எழுத்தாளர்கள் குறித்து நீங்கள் எழுதுவது சர்ச்சைக்குள்ளாகி வருகிறது. சமகாலத்தில் நம்பிக்கைத் தரும்படியாக ஒரு பெண் எழுத்தாளர்கூட இல்லை என்கிறீர்களா?’’

``எனக்கு லீனா மணிமேகலை பிடித்தமான கவிஞர்தான். கண்டிப்பாக ஒன்றிரண்டு பேர் எழுதத்தான் செய்கிறார்கள். ஆனால், பெரும்பாலானவர்களின் ஆர்வமே பெரிய அளவில் எழுத வேண்டும் என்பது அல்ல. கவனத்தைக் கவர வேண்டும். அதன் வாயிலாக அடுத்தடுத்த கட்டத்திற்கு சென்றுவிட வேண்டும் என்பதாகத்தான் இருக்கிறது. ஒருவரின் வெற்றி மற்றவர்களைத் தவறாக வழிநடத்திவிடுகிறது. `குட்டி ரேவதி என்ன எழுதிவிட்டார்? சுமாராகத்தான் எழுதுகிறார். ஆனால் அமெரிக்காவெல்லாம் போகிறார். லண்டனில் கூப்பிடுகிறார்கள். ஆக நாமும் அவரைப்போல ஆக வேண்டும்!’ என்பதாகத்தான் யோசிக்கிறார்கள். எழுத்துக்குப் பின்னால் ஒரு கனவு இருக்கிறது; தவம் இருக்கிறது.

எஸ்.ராமகிருஷ்ணனை எடுத்துக்கொண்டால், அவர் எழுத்தாளராக உருவாவதற்காக எடுத்துக்கொண்ட இருபத்து ஐந்து ஆண்டு கால உழைப்பு, வாசித்த புத்தகங்கள் என எவ்வளவு இருக்கின்றன? ஆனால், பெண் எழுத்தாளர்கள் அதைச் சுலபமாக அடைய நினைக்கிறார்கள்!”

`` ‘விகடன் தடம்’ முதல் இதழில் சிறுகதைவெளி குறித்த கட்டுரை எழுதியிருந்தீர்கள். அதில் பல சிறுகதை எழுத்தாளர்களின் பெயர் விடுபட்டுள்ளதாக விமர்சனங்கள் எழுந்தன. பிரபஞ்சன், ஜி.முருகன், யூமா வாசுகி போன்றவர்களின் பெயர்கள். அதேபோல் குறிப்பாக ச.தமிழ்செல்வன், ஆதவன் தீட்சண்யா என இடதுசாரி முகாம்களில் உள்ளவர்களின் பெயர்கள் விடுபட்டிருந்தனவே?’’

``முதலில் அது ஒரு பெயர்ப் பட்டியல் அல்ல. சிறுகதை வரலாற்றில் ஒவ்வொரு காலகட்டத்தில் குறிப்பிட்ட போக்கை உருவாக்கியவர்கள் அல்லது அந்தப் போக்கை முன்னெடுத்தவர்களின் பெயர்களைக் குறிப்பிட்டிருக்கிறேன். நல்ல கதைகளை எழுதிய எல்லோரின் பெயர்களையும் பட்டியலிட வேண்டும் என்கிற முயற்சியை நான் அதில் செய்யவில்லை.

நீங்கள் குறிப்பிடக்கூடிய பெயர்களைக் குறித்து பார்த்தோமானால், ச.தமிழ்ச்செல்வன் மொத்தமே மூன்று அல்லது நான்கு நல்ல கதைகளைத்தான் எழுதியிருக்கிறார். ஆனால், நான் குறிப்பிட்டிருக்கிறவர்களைப் பார்த்தீர்களானால், `They are lived for Short Stories!’. அது பெரிய விஷயமல்லவா? யூமா வாசுகி எத்தனை கதைகளை எழுதியிருக்கிறார்? 5 அல்லது 10 கதைகள் எழுதியிருப்பார். எனக்கு நினைவிலிருப்பதே அவரது இரண்டு கதைகள்தான். எனது நெருங்கிய நண்பர்தான் பவா செல்லதுரை. அவர் பெயரையும் அதில் நான் சேர்க்கவில்லையே?

இலக்கியத்துக்கு இந்த கறார்த்தன்மை வேண்டும். அப்புறம் ஆதவன் தீட்சண்யா பெயரைச் சொன்னீர்கள். பத்திரிகைகளில் பிரசுரிக்கும் தகுதியுடைய கதைகளைக்கூட அவர் இன்னும் எழுதவில்லை. அவர் ஒரு தலித் எழுத்தாளராக தன்னை க்ளெய்ம் பண்ணிக்கொள்வதனாலேயே, அவரை அங்கீகரிக்க வேண்டும்மென்பது இல்லை. He is not writer at all. அவருக்கு எழுத்தே வரவில்லை.

வண்ணதாசன் போன்றோர் தனது வாழ்க்கையையே சிறுகதைக்காக செலவழிக்கிறார்கள். நேரம் கிடைக்கும்போது வருடத்திற்கு ஒன்றிரண்டு சிறுகதை எழுதுகிறவர்களையும் தன் வாழ்நாளையே சிறுகதைக்காகத் தருகிறவர்களையும் ஒரே வரிசையில் வைக்க முடியாது. ஏற்றுக்கொள்வதில் அல்ல; நிராகரிப்பில்தான் மதிப்பீடே இருக்கிறது. உண்மையில், இந்தப் பட்டியலைக்கூட இன்னும் கறாராகப் போட்டிருக்க வேண்டும். ஆனால், ஓரளவேனும் தொடர்ந்து பங்களித்தவர்களின் பெயர்கள் இருக்கட்டுமே என்று சேர்த்துக்கொண்டேன்.’’

``ஈழத்து எழுத்தாளர்களில் ஷோபா சக்தியை அடிக்கடி குறிப்பிடுகிறீர்கள். ஷோபா சக்திக்குப் பின்னர் சமகாலத்தில் சயந்தன், குணா கவியழகன், தமிழ்நதி, யோ.கர்ணன் போன்ற பல புதிய  ஈழத்துப் படைப்பாளிகள் எழுத வந்திருக்கிறார்கள்.  அவர்களைப் பற்றிய உங்களது பார்வை என்ன?’’

``என்னுடைய வாசிப்பைப் பொறுத்த அளவில் ஈழம் உருவாக்கிய மகத்தான படைப்பாளிகள் இரண்டுபேர்தான். ஒருவர் அ.முத்துலிங்கம், மற்றொருவர் ஷோபாசக்தி. அதில் சந்தேகமே இல்லை. முந்தைய எழுத்தாளர்களில் மு.தளையசிங்கத்தைச் சொல்லலாம். நாவல்களில் சயந்தனின் ‘ஆதிரை’ கிளாசிக் என்று சொல்கிற அளவிலான முக்கியப் படைப்பு. யோ.கர்ணன் படைப்புகளை வாசிக்க முடிகிறது, அவ்வளவுதான். இலக்கியப் பட்டியலில் சேர்க்கிற அளவிற்கு முக்கியமானவராகச் சொல்ல முடியவில்லை. தமிழ்நதி, வாஸந்தி லெவலில்தான் எழுதுகிறார். வாஸந்தி எழுதியதைவிட முக்கியமான எதையும் தமிழ்நதி எழுதிவிடவில்லை. அதனால் அவரை முக்கியமான எழுத்தாளராக நான் கருதவில்லை. சட்டநாதன், ரஞ்சன்குமார் போன்றோர் நல்ல எழுத்தாளர்களாக உருவாகியிருக்கவேண்டியவர்கள். புலம்பெயர்ந்ததில், கடுமையான உழைப்பில் சோர்வடைந்துவிட்டார்கள்.’’

`` `கனடா இலக்கியத் தோட்ட விருது ஜெயமோகனுக்கு நெருக்கமானவர்களுக்குத்தான் வழங்கப்படுகிறது’ என்று ஒரு பேச்சு இருக்கிறது. அதில் எவ்வளவு உண்மை இருக்கிறது?’’

``கனடா இலக்கியத் தோட்ட விருது மட்டுமல்ல; தமிழில் கொடுக்கக்கூடிய பெரும்பாலான முக்கிய விருதுகள் எல்லாமே, நான் சொன்ன பிறகுதான் கொடுப்பார்கள். ஏனென்று கேட்டால், தமிழில் வேறு எந்த எழுத்தாளர் இன்று எழுதக்கூடிய எழுத்தாளர்கள் எல்லோரையும் வாசித்து அதில் முக்கியமானவர்களை முன்வைக்கிறார்... அதுவும் கறாராக யார் முன்வைக்கிறார்? நான் யாரையும் விருதுக்கு பரிந்துரைப்பது இல்லை. நான் வாசிக்கிறேன். எனது வலைதளத்தில் நன்றாக எழுதுகிற புதியவர்களை சுட்டிக்காட்டி கவனப்படுத்துகிறேன். விருது வழங்குகிறவர்கள் அதை கவனிக்கிறார்கள்; அவ்வளவுதான். நாளை நீங்கள் யாருக்காவது விருது தருவதாக இருந்தாலும், அது நான் சுட்டிக்காட்டிய எழுத்தாளருக்காகத்தான் இருக்கும்!”

``பத்மஸ்ரீ விருதை மறுத்தபோது அதற்குக் காரணமாக, உங்களை விமர்சிப்பவர்களைச் சுட்டியிருந்தீர்கள். அந்த அளவுக்குத் தமிழ் இலக்கியச்சூழல் உண்மையிலேயே பிரச்னைக்குரியதாக இருக்கிறதா, என்ன?’’

``அது அப்போது எமோஷனலாக எடுத்த ஒரு முடிவுதான். அரசு போன்ற பெரிய அமைப்புகளைச் சார்ந்து இருக்கக் கூடாது என்கிற எனது எண்ணம்தான் அதற்கான காரணம். வாங்கியிருக்கலாம். பின்னால் விருது என்பது ஒரு பளுவாகிவிடும்.’’

``விஷ்ணுபுரம் வாசகர் வட்டத்தை ஒரு பெரிய அமைப்பாக மாற்றுவதாகவும் அதற்கான கட்டடம் கட்டப்பட்டு வருவதாகவும் சொல்லப்படுவது உண்மையா?’’

``அவ்வளவு பெரிய திட்டம் ஏதும் இல்லை. அதில் யார் முக்கியம், யார் முக்கியம் இல்லை என்கிற மனக் கசப்புகள் எளிமையாக உள்நுழைந்துவிடும். ஒருவேளை அப்படி அமைத்தாலும் கொஞ்ச நாளைக்கு சுவாரஸ்யமாக இருக்கும். பிறகு சோர்வு வந்துவிடும். முக்கியமாக பலருக்கும் கல்யாணமாகிவிடும் (சிரிக்கிறார்).  தொடர்ச்சியாக சந்தித்துக் கொண்டிருக்கிறோமே... ஏதாவது செய்யலாமே என்கிற ஓர் எண்ணத்தில்தான் `விஷ்ணுபுரம் விருது’ கொடுத்துவருகிறோம். அதுவும்கூட சாகித்ய அகாடமி வழங்கப்படாத எழுத்தாளர்களுக்குக் கொடுத்து வருகிறோம். அவ்வளவுதான். மற்றபடி  பெரிய அஜெண்டா ஒன்றும் இல்லை. ஒரு சிறிய அளவிலான டிரஸ்ட் ஆரம்பித்து நன்கொடைகளை மட்டும் ஏற்றுக்கொள்ளலாமா என்று யோசித்து வருகிறோம்.’’

``காந்தி, அம்பேத்கர், மற்றும் பெரியாரிடம் இருந்து  இன்றைய இளம் தலைமுறை உள்வாங்கிக்கொள்ள வேண்டியவை என்று நீங்கள் கருதுகிற விஷயங்கள் எவை?’’

``எதிர்த் தரப்போடு மாற்றுக் கருத்துக்களை உரையாட எப்போதும் திறந்த மனத்துடன் தயாராக இருப்பது - இது காந்தியிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டிய முக்கியமான ஒன்று. இரண்டாவது, நுகர்வுக்கு எதிரான மாற்றுச் சிந்தனை. மூன்று, படிப்படியான சமூக மாற்றம் என்கிற பார்வை. அதனால்தான் அவர் போராட்டங்களோடு பிரசாரம் என்பதிலும் நம்பிக்கை கொண்டிருந்தார்.

அம்பேத்கரிடம் நாம் உள்வாங்க வேண்டிய முக்கியமான விஷயம், ‘தத்துவம் அறத்தோடு பிணைந்திருக்க வேண்டும்’ என்கிற பிடிவாதம். ‘மேலான அறத்தை உருவாக்காதது மேலான தத்துவமாக இருக்க முடியாது’ என்று நம்பியவர் அம்பேத்கர். இந்திய அரசியல் சட்டத்தின் பல பகுதிகளை நான் கண்கலங்கி வாசித்திருக்கிறேன். பெரிய உயரத்தில் நின்று ஒரு ஞானியாக இருந்து அவர் அதை உருவாக்கியிருக்கிறார். `இந்திய வேதம்’ என்று சொல்லக்கூடிய அளவில் மதிப்புடையது அது. இந்தியாவில் அனைவருக்கும் வாக்குரிமை அளிக்கப்பட்டு 25 வருடங்களுக்குப் பிறகுதான் சுவிட்சர்லாந்து தன் நாட்டுப் பெண்களுக்கு வாக்குரிமை கொடுக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ளும்போதுதான் இந்திய சட்டம் குறித்த பெருமைகளை நாம் விளங்கிக்கொள்ள முடியும்.

பெரியார் பற்றிய எனது விமர்சனம் என்பது ஒரு குறிப்பிட்ட சாதியை நோக்கிய கடுமையான விமர்சனத்தை அவர் முன்வைத்திருக்கக் கூடாது என்பதுதான். நாளைக்கு பிராமணர்கள், எதற்காக விமர்சிக்கப்பட்டார்களோ, அந்தத்  தன்மைகள் அத்தனையையும் இழந்து பிராமணியம் என்றால் என்னவென்றே தெரியாமல் வாழும் ஒரு காலம் வந்தாலும், பெரியாரின் விமர்சனம் அங்கேயே நின்று கொண்டிருக்கும். அதை அவர் செய்திருக்கக் கூடாது என்கிறேன். அதேசமயம், அவரது சமத்துவம் மற்றும் சமூகநீதிக்கான குரல் முக்கியமானது. மேலான ஆன்மிகம் என்கிற நிலைக்குக் கீழே உள்ள சடங்குகள், ஆசாரங்கள், வழிபாட்டுமுறைகளில் நிலவும் மூடநம்பிக்கை களின் மீது அவர் முன்வைத்த விமர்சனங்கள் முக்கியமானவை. அவரது பகுத்தறிவுப் பார்வை முக்கியமானது. அவர் குறிப்பிடத்தகுந்த சீர்திருத்தவாதி!”

``எழுத்துக்கு இடையில் எப்படி உங்களை  ரிலாக்ஸ் செய்துகொள்கிறீர்கள்?’’

``பயணம் எனக்குப் பெரிய ரிலாக்ஸ். அப்புறம் இசை கேட்பது.’’

``என்ன மாதிரியான இசை உங்களுக்குப் பிடிக்கும்?’’

``ஹிந்துஸ்தானி விரும்பிக் கேட்பேன். கர்நாடக சங்கீதம் நான்கைந்து வருடங்கள்தான் கேட்க முடியும். பிறகு சலித்துவிடும்.’’

``தமிழ்த்திரை இசை கேட்பதுண்டா?’’

``நிறைய கேட்பேன். தமிழ், மலையாளம் என அனைத்தையும் கேட்பதுண்டு. திரையிசைப் பாடல்களில் இருக்கும் ஒரு பிரச்னை என்னவென்றால், மூன்று நிமிடங்களில் பாடல் முடிந்துவிடும். ஹிந்துஸ்தானி ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக நீளும். நண்பர்கள் நாற்பது ஐம்பது பேர் விடிய விடியக் கேட்போம். சில சமயம், பகல், இரவு, மறுநாள் பகல் என்று தொடர்ந்து 56 மணிநேரமெல்லாம்கூட இசை கேட்டிருக்கிறோம். இசை கேட்கும்போது எனக்குள் பல காட்சிப் படிமங்கள் எழும். பெரும்பாலும் அவை நிலக் காட்சிப் படிமங்களாக இருக்கும். இளையராஜாகூட அப்படித்தான் சொல்வார்!”

``இளையராஜாவுடனான உங்கள் உறவு பற்றிச் சொல்லுங்களேன்...’’

``அவர் மிக எளிமையான மனிதர். தனிப்பட்ட முறையில் பல பாடல்களை நான் கேட்டுக் கொண்டதற்காகப்  பாடிக்காட்டியி ருக்கிறார். நிறைய புத்தகம் வாசிப்பார். அவரிடம் ஒரு நூலகம் இருக்கிறது. அங்கு யாரையும் அனுமதிக்க மாட்டார் என்பார்கள். ஆனால், நான் ஒருநாள் சகஜமாக அந்தப் புத்தகங்களைப் பார்வையிட்டபோது, ‘இதைத் தொட்டா சாருக்கு கோபம் வரும்’ என்றார் ராஜா சாரின் உதவியாளர். ஆனால், அப்போது அங்கே வந்த இளையராஜா, ‘உங்க `விஷ்ணுபுரம்’ வாங்கிவெச்சிருக்கேன் பாருங்க’ என்று இயல்பாகப் பேசத் தொடங்கினார். அதுதான் அவர். அவரைப் பற்றி வெளியில் இருக்கும்  எதிர்மறையான பிம்பத்துக்கும் அவருக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.

பொதுவாகவே சாதாரண மக்களுக்கு வி.ஐ.பி-கள் மீது ஈர்ப்பு இருப்பதைப் போலவே, சின்ன ஈகோவும் இருக்கிறது. ராஜாவின் பாடல்களைப் பாராட்டிப் பேசிக்கொண்டிருப்பவர்கள், சில நிமிடங்களிலேயே ‘இது அந்த ராகம்தானே, இது இந்த ராகம்தானே’ என்று தங்களை மேதையாகக் காட்டிக்கொள்ள ஆரம்பிப்பார்கள். இதுமாதிரியான போலித்தனங்கள் அவரை எரிச்சலடையச் செய்யும். பொதுவெளியில் அவரது பேச்சு தவறாகப் புரிந்துகொள்ளப்படுவதற்கு இதுவும் ஒரு காரணம். அவருக்கான உலகம் வேறு!”

``ஜெயமோகன் எப்படி நினைவுகூரப்பட வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?’’

``ஒருவர் எப்படி வரலாற்றில் நினைவுகூரப்படுவார் என்று முன்பே சொல்லவே முடியாது. ஆனாலும்... `இந்திய தமிழ் மரபை நவீன காலகட்டத்தின் அறத்திற்கு ஏற்ப மறுவரையறை செய்தவர்’ என்று அறியப்பட வேண்டும் என்று விரும்புகிறேன்.’

š இப்பதிவை மின்னஞ்சலிட